பாசிசத்தை வரையறுக்கும் பதினான்கு பண்புகள்
பாசிசம், பாசிச ஆட்சி என்ற சொற்கள் இப்போதெல்லாம் அடிக்கடிப் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் இராணுவமயப்பட்ட சர்வாதிகார ஆட்சியைக் குறிக்கிறது என்ற அளவில் பலர் இச்சொற்களை விளங்கிக்கொள்கிறார்கள். ஆனாலும் இச்சொற்கள் மிகவும் ஆழமானதும் விரிவானதுமான அரசியற் பொருளைக் கொண்டிருக்கின்றன. ஆழமும் விரிவும் கொண்ட வாசிப்பினூடாக இச்சொற்கள் பற்றி நன்றாக அறிந்துகொள்ள முடியும்.
சுருக்கமாக, ஒரு நாட்டில் பாசிச ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்வது எப்படி?
இதனை அறிந்துகொள்ள உதவக்கூடிய ஒரு சுருக்கமான கையேடு போன்ற இந்த ஆங்கிலக் கட்டுரையினை அண்மையில் இணையத்தில் பார்க்கக்கிடைத்தது. இதில் பாசிச ஆட்சிகளில் இருக்கக்கூடிய பதினான்கு பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பதினான்கில் எத்தனை பண்புகள் எமது நாடுகளில் உள்ளன என்பதைச் சிந்திப்பது எமது நாடுகளின் நிலையை அறிந்துகொள்ள உதவும்.
(இது ஆங்கிலப் பனுவலின் நேரடியான மொழிபெயர்ப்பாகும். இதனைத் தழுவி மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட மொழியாக்கம் ஒன்றினையும் எழுதிவருகிறேன்)
பாசிசத்தை வரையறுக்கும் பதினான்கு பண்புகள்
[மூலம் : http://rense.com/general37/fascism.htm | The 14 Defining Characteristics Of Fascism | தமிழாக்கம் : மு. மயூரன் ]ஹிட்லர் (ஜேர்மனி), முசோலினி (இத்தாலி), ஃப்ரான்கோ (ஸ்பெயின்), சுகார்ட்டோ (இந்தோனீசியா) ஆகியோரதும், பல லத்தீன் அமெரிக்க நாடுகளதும் பாசிச ஆட்சிகளை முனைவர் லோரன்ஸ் பிரிட் (Dr. Lawrence Britt ) ஆய்வு செய்துள்ளார். இவ் ஆய்வின் பயனாக, இத்தகு பாசிச ஆட்சிகளை வரையறுக்கக்கூடிய பொதுவான தன்மைகள் 14 இனைக் கண்டறிந்துள்ளார். அப் பதினான்கு தன்மைகளும் வருமாறு:
1. வலிமையானதும் தொடர்ச்சியானதுமான தேசியவாதம் -
நாட்டுப்பற்று முழக்கங்கள், சுலோகங்கள், குறியீடுகள், பாடல்கள், இவை தவிர்ந்த வேறு வழிமுறைகள் போன்றவற்றை பாசிச ஆட்சிகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முனைகின்றன. ஆடைகளிலும் பொதுவான காட்சிப்படுத்தல்களிலுமாக தேசியக்கொடிகள் எங்கும் காணப்படும்.
2. மனித உரிமைகளை அங்கீகரிப்பதில் அலட்சியம்.
எதிரிகள் பற்றிய பயத்தினாலும் பாதுகாப்புத் தேவைக்காகவும், குறிப்பான சந்தர்ப்பங்களில், "தேவை" கருதி மனித உரிமைகளைக் கவனிக்காமல் விட்டுவிடலாம் என பாசிச ஆட்சியின் மக்கள் ஏற்கவைக்கப்பட்டிருப்பர். சித்திரவதை, விசாரணைகள் இன்றிய மரணதண்டனை, படுகொலை, கைதிகள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருத்தல் போன்றவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கூட மக்கள் முனைவர்.
3. எதிரிகளை அடையாளப்படுத்துவதையும், பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமாக இன்னொரு குழுமத்தை அடையாளப்படுத்துவதையும் மக்களை ஒருங்கிணைப்பதற்கான காரணியாகப் பயன்படுத்துதல்.
'நாட்டுப்பற்று வெறி' யினைப்பயன்படுத்தி மக்கள் ஓரணியில் திரட்டப்படுவர். இந் நாட்டுப்பற்று வெறியே மக்களை ஒருங்கிணைக்கும். ஒரு பொதுவான எதிரியை அல்லது அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட வேண்டிய தேவையை முன்னிறுத்தியே இந் நாட்டுப்பற்று வெறி வளர்க்கப்படும். இன, இனத்துவ, மதச் சிறுபான்மையினர்; லிபரல்கள்; கம்யூனிஸ்டுக்கள்; சோசலிஸ்டுக்கள்; பயங்கரவாதிகள் போன்றவர்கள் இவ்வாறான பொதுவான "எதிரியாக" அல்லது "அச்சுறுத்தலாக" அடையாளப்படுத்தப்படுவார்கள்.
4. படைத்துறை மேன்மைப்படுத்தப்படல்
பரந்த அளவில் உள்நாட்டுப் பிரச்சினைகள் பல இருந்தபோதும், அளவுக்கதிகமான அரசங்கப் பணத்தை படைத்துறை பெறும். உள்நாட்டுத் திட்டங்கள் யாவும் அலட்சியம் செய்யப்படும். படைவீரர்களும் படைத்துறைச் சேவையும் கவர்ச்சிகரமானதாக்கப்படும்.
5. பால்நிலை/பாலியல் ஏற்றதாழ்வுகளின் பரவுகை
பாசிச ஆட்சிகளின் அரசாங்கங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான, ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுபவையாகவே இருக்க முனையும்.
பாசிச ஆட்சிகளின் கீழ் மரபார்ந்த பால்நிலை வகிபாகங்கள்/பாத்திரங்கள் மேலும் மேலும் இறுக்கமாக்கப்படும். மணமுறிவு, கருக்கலைப்பு, சமப்பாலுறவு ஆகியன அடக்கியொடுக்கப்படுவதுடன் "குடும்பம்" என்கிற நிறுவனத்தின் அதியுயர் காவலனாக அரசானது பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
6. கட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்கள் ஊடகங்கள்
சிலவேளைகளில் ஊடகங்கள் அரசாங்கங்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். அவ்வாறில்லாத போது, அரசாங்கச் சட்டதிட்டங்களாலோ அல்லது அனுதாபம் பெற்ற ஊடகப் பேச்சாளர்கள், அதிகாரிகளாலோ ஊடங்கள் மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படும். தணிக்கை, குறிப்பாக போர்க்காலங்களில் மிகவும் பொதுவானதாக அமையும்.
7. தேசத்தின் பாதுகாப்பு மீதான மிகைவிருப்பு
தேசத்தின் பாதுகாப்புப் பற்றிய அச்சமானது ஒர் ஊக்கி உற்சாகப்படுத்தும் கருவியாக அரசாங்கத்தால் வெகுமக்கள் மீது பயன்படுத்தப்படும்.
8. மதமும் அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாய் இருக்கும்.
பொதுமக்களது கருத்தினைத் தமக்கேற்றபடி கையாள்வதற்கான கருவியாக தேசத்தின் பெரும்பான்மையானோரின் மதத்தினைப் பாசிசத் தேசங்களின் அரசாங்கங்கள் பயன்படுத்த முனையும். குறித்த மதத்தின் முக்கியமான கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் இருந்தபோதும், அரசாங்கத் தலைவர்களிடத்தில் மதம் சார்ந்த உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களும் சொல்லாடல்களும் மிகப் பொதுவானதாக இருக்கும்.
9. (கார்ப்பரேட்டுக்கள் என்றறியப்படும்) கூட்டுரு முதலாளிகளின் அதிகாரம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
அரசாங்கத் தலைவர்களை அதிகாரத்தில் அமர்த்துபவர்களாக, பாசிச ஆட்சி ஒன்றின் வணிக, தொழிற்றுறை முதலாளிகளின் உயர்குடி வர்க்கத்தினரே இருப்பர். இவர்கள் ஒருவருக்கொருவர் நன்மையாக அமையத்தக்க வணிக/அரசாங்க உறவுகளையும் அதிகார உயர்குழாத்தையும் உருவாக்குவர்.
10. தொழிலாளர் சக்தி அடக்கி ஒடுக்கப்படும்.
ஏனெனில், பாசிச அரசாங்கம் ஒன்றுக்கான ஒரேயொரு உண்மையான அச்சுறுத்தல், தொழிலாளர்கள் கொண்டுள்ள, அமைப்பாக ஒன்றுசேரும் வலுவேயாகும். தொழிற் சங்கங்கள் முற்றாகத் துடைத்தழிக்கப்படும் அல்லது மிக மோசமாக அடக்கியொடுக்கப்படும்.
11. கலைகளுக்கும் புத்திசீவிகளுக்கும் மதிப்பில்லாமற்போகும்.
கல்விச் சமூகம் மீதும் உயர்கல்வி மீதுமான வெளிப்படையான எதிர்ப்பினைப் பாசிச நாடுகள் ஊக்குவிக்கவோ அல்லது அவ்வெதிர்ப்புக்களுக்கு நெகிழ்ச்சியாயிருக்கவோ முனையும். பேராசிரியர்களும் ஏனைய கல்வியாளர்களும் தணிக்கைக்குள்ளாவதும் கைதாவதும் சாதாரணமாக நிகழும். சுதந்திரமான கலை, எழுத்து வெளிப்பாடுகள் வெளிப்படையாகவே தாக்குதலுக்குள்ளாகும்.
12. குற்றங்கள் தண்டனைகள் மீதான மிகைவிருப்பு
பாசிச ஆட்சிகளின் கீழ், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வரையறையற்ற அதிகாரமானது காவல் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும். காவல் துறையின் துஷ்பிரயோகங்களை நாட்டுப்பற்றின் பெயரால் கண்டும் காணாமலிருப்பதற்கும், சிவில் சுதந்திரங்களை நாட்டுப்பற்றின் பெயரால் கைவிடுவதற்கும் மக்கள் விரும்புவர். பாசிசத் தேசங்களில் ஏறத்தாழ எந்த வரையறையுமற்ற அதிகாரம் கொண்ட தேசியக் காவற்துறைப் படை இருக்கும்.
13. குடும்ப/உறவுக் குழும ஆட்சியினதும் ஊழலினதும் பரவுகை
பாசிச ஆட்சிகள் பெரும்பாலும் எப்போதும், தம்மில் ஒருவரை ஒருவர் அரசாங்கப் பணிகளில் அமர்த்திக்கொள்ளுகின்றவர்களால் ஆளப்படும். அவர்கள் தமது நண்பர்களைப் பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து காப்பதற்கு அரச அதிகாரத்தினையும் பலத்தினையும் பயன்படுத்துவார்கள். தமக்குள் உறவுக்காரர்களும் நண்பர்களுமாக இருப்பார்கள்.
14. மோசடி மிகுந்த தேர்தல்கள்
சிலவேளைகளில், பாசிச நாடுகளின் தேர்தல்கள் முழுக்க முழுக்கக் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனைய வேளைகளில், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கெதிரான சேறடிப்புப் பரப்புரைகள், படுகொலைத் தாக்குதல்கள் போன்றவற்றின் மூலமும் வாக்காளர்களின் எண்ணிக்கை, மாவட்ட எல்லைகள் போன்றவற்றைச் சட்டத்துறையக் கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலமும் ஊடகங்களைத் தம் நோக்கங்களுக்காகக் கையாள்வதன் மூலமும் தேர்தல்கள் சூழ்ச்சியுடன் கையாளப்படும். பாசிச நாடுகள், தேர்தல்களைக் கட்டுப்படுத்தவும் சூழ்ச்சியுடன் கையாள்வதற்கும் நீதித்துறையினையும் கூட பொதுவாகப் பயன்படுத்துகின்றன.