Monday, April 29, 2013

பாசிசம், பாசிச ஆட்சி என்ற சொற்கள் இப்போதெல்லாம் அடிக்கடிப் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் இராணுவமயப்பட்ட சர்வாதிகார ஆட்சியைக் குறிக்கிறது என்ற அளவில் பலர் இச்சொற்களை விளங்கிக்கொள்கிறார்கள். ஆனாலும் இச்சொற்கள் மிகவும் ஆழமானதும் விரிவானதுமான அரசியற் பொருளைக் கொண்டிருக்கின்றன. ஆழமும் விரிவும் கொண்ட வாசிப்பினூடாக இச்சொற்கள் பற்றி நன்றாக அறிந்துகொள்ள முடியும்.

சுருக்கமாக, ஒரு நாட்டில் பாசிச ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்வது எப்படி?

இதனை அறிந்துகொள்ள உதவக்கூடிய ஒரு சுருக்கமான கையேடு போன்ற இந்த ஆங்கிலக் கட்டுரையினை அண்மையில் இணையத்தில் பார்க்கக்கிடைத்தது. இதில் பாசிச ஆட்சிகளில் இருக்கக்கூடிய பதினான்கு பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பதினான்கில் எத்தனை பண்புகள் எமது நாடுகளில் உள்ளன என்பதைச் சிந்திப்பது எமது நாடுகளின் நிலையை அறிந்துகொள்ள உதவும்.

(இது ஆங்கிலப் பனுவலின் நேரடியான மொழிபெயர்ப்பாகும். இதனைத் தழுவி மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட மொழியாக்கம் ஒன்றினையும் எழுதிவருகிறேன்)



பாசிசத்தை வரையறுக்கும் பதினான்கு பண்புகள்

[மூலம் : http://rense.com/general37/fascism.htm  | The 14 Defining Characteristics Of Fascism | தமிழாக்கம் : மு. மயூரன் ]

ஹிட்லர் (ஜேர்மனி), முசோலினி (இத்தாலி), ஃப்ரான்கோ (ஸ்பெயின்), சுகார்ட்டோ (இந்தோனீசியா) ஆகியோரதும், பல லத்தீன் அமெரிக்க நாடுகளதும் பாசிச ஆட்சிகளை முனைவர் லோரன்ஸ் பிரிட் (Dr. Lawrence Britt ) ஆய்வு செய்துள்ளார். இவ் ஆய்வின் பயனாக, இத்தகு பாசிச ஆட்சிகளை வரையறுக்கக்கூடிய பொதுவான தன்மைகள் 14 இனைக் கண்டறிந்துள்ளார். அப் பதினான்கு தன்மைகளும் வருமாறு:



1. வலிமையானதும் தொடர்ச்சியானதுமான தேசியவாதம் -


நாட்டுப்பற்று முழக்கங்கள், சுலோகங்கள், குறியீடுகள், பாடல்கள், இவை தவிர்ந்த வேறு வழிமுறைகள் போன்றவற்றை பாசிச ஆட்சிகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முனைகின்றன. ஆடைகளிலும் பொதுவான காட்சிப்படுத்தல்களிலுமாக தேசியக்கொடிகள் எங்கும் காணப்படும்.


2. மனித உரிமைகளை அங்கீகரிப்பதில் அலட்சியம்.


எதிரிகள் பற்றிய பயத்தினாலும் பாதுகாப்புத் தேவைக்காகவும், குறிப்பான சந்தர்ப்பங்களில், "தேவை" கருதி மனித உரிமைகளைக் கவனிக்காமல் விட்டுவிடலாம் என பாசிச ஆட்சியின் மக்கள் ஏற்கவைக்கப்பட்டிருப்பர். சித்திரவதை, விசாரணைகள் இன்றிய மரணதண்டனை, படுகொலை,  கைதிகள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருத்தல் போன்றவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கூட மக்கள் முனைவர். 


3. எதிரிகளை அடையாளப்படுத்துவதையும், பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமாக இன்னொரு குழுமத்தை அடையாளப்படுத்துவதையும் மக்களை ஒருங்கிணைப்பதற்கான காரணியாகப் பயன்படுத்துதல்.


'நாட்டுப்பற்று வெறி' யினைப்பயன்படுத்தி மக்கள் ஓரணியில் திரட்டப்படுவர். இந் நாட்டுப்பற்று வெறியே மக்களை ஒருங்கிணைக்கும். ஒரு பொதுவான எதிரியை அல்லது அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட வேண்டிய தேவையை முன்னிறுத்தியே இந் நாட்டுப்பற்று வெறி வளர்க்கப்படும். இன, இனத்துவ, மதச் சிறுபான்மையினர்; லிபரல்கள்; கம்யூனிஸ்டுக்கள்; சோசலிஸ்டுக்கள்; பயங்கரவாதிகள் போன்றவர்கள் இவ்வாறான பொதுவான "எதிரியாக" அல்லது "அச்சுறுத்தலாக" அடையாளப்படுத்தப்படுவார்கள்.


4. படைத்துறை மேன்மைப்படுத்தப்படல்


பரந்த அளவில் உள்நாட்டுப் பிரச்சினைகள் பல இருந்தபோதும், அளவுக்கதிகமான அரசங்கப் பணத்தை படைத்துறை பெறும். உள்நாட்டுத் திட்டங்கள் யாவும் அலட்சியம் செய்யப்படும். படைவீரர்களும் படைத்துறைச் சேவையும் கவர்ச்சிகரமானதாக்கப்படும்.


5. பால்நிலை/பாலியல் ஏற்றதாழ்வுகளின் பரவுகை


பாசிச ஆட்சிகளின் அரசாங்கங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான, ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுபவையாகவே இருக்க முனையும்.

பாசிச ஆட்சிகளின் கீழ் மரபார்ந்த பால்நிலை வகிபாகங்கள்/பாத்திரங்கள் மேலும் மேலும் இறுக்கமாக்கப்படும். மணமுறிவு, கருக்கலைப்பு, சமப்பாலுறவு ஆகியன அடக்கியொடுக்கப்படுவதுடன் "குடும்பம்" என்கிற நிறுவனத்தின் அதியுயர் காவலனாக அரசானது பிரதிநிதித்துவப்படுத்தப்படும். 


6. கட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்கள் ஊடகங்கள்


சிலவேளைகளில் ஊடகங்கள் அரசாங்கங்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். அவ்வாறில்லாத போது, அரசாங்கச் சட்டதிட்டங்களாலோ அல்லது அனுதாபம் பெற்ற ஊடகப் பேச்சாளர்கள், அதிகாரிகளாலோ ஊடங்கள் மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படும்.  தணிக்கை, குறிப்பாக போர்க்காலங்களில் மிகவும் பொதுவானதாக அமையும்.


7. தேசத்தின் பாதுகாப்பு மீதான மிகைவிருப்பு 


தேசத்தின் பாதுகாப்புப் பற்றிய அச்சமானது ஒர் ஊக்கி உற்சாகப்படுத்தும் கருவியாக அரசாங்கத்தால் வெகுமக்கள் மீது பயன்படுத்தப்படும்.


8. மதமும் அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாய் இருக்கும்.


பொதுமக்களது கருத்தினைத் தமக்கேற்றபடி கையாள்வதற்கான கருவியாக தேசத்தின் பெரும்பான்மையானோரின் மதத்தினைப் பாசிசத் தேசங்களின் அரசாங்கங்கள் பயன்படுத்த முனையும். குறித்த மதத்தின் முக்கியமான கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் இருந்தபோதும்,  அரசாங்கத் தலைவர்களிடத்தில் மதம் சார்ந்த உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களும் சொல்லாடல்களும் மிகப் பொதுவானதாக இருக்கும்.


9. (கார்ப்பரேட்டுக்கள் என்றறியப்படும்) கூட்டுரு முதலாளிகளின் அதிகாரம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.


அரசாங்கத் தலைவர்களை அதிகாரத்தில் அமர்த்துபவர்களாக, பாசிச ஆட்சி ஒன்றின் வணிக, தொழிற்றுறை முதலாளிகளின் உயர்குடி வர்க்கத்தினரே இருப்பர். இவர்கள் ஒருவருக்கொருவர் நன்மையாக அமையத்தக்க வணிக/அரசாங்க உறவுகளையும் அதிகார உயர்குழாத்தையும் உருவாக்குவர்.


10. தொழிலாளர் சக்தி அடக்கி ஒடுக்கப்படும்.


ஏனெனில், பாசிச அரசாங்கம் ஒன்றுக்கான ஒரேயொரு உண்மையான அச்சுறுத்தல், தொழிலாளர்கள் கொண்டுள்ள, அமைப்பாக ஒன்றுசேரும் வலுவேயாகும்.  தொழிற் சங்கங்கள் முற்றாகத் துடைத்தழிக்கப்படும் அல்லது மிக மோசமாக அடக்கியொடுக்கப்படும்.


11. கலைகளுக்கும் புத்திசீவிகளுக்கும் மதிப்பில்லாமற்போகும்.


கல்விச் சமூகம் மீதும் உயர்கல்வி மீதுமான வெளிப்படையான எதிர்ப்பினைப் பாசிச நாடுகள் ஊக்குவிக்கவோ அல்லது அவ்வெதிர்ப்புக்களுக்கு நெகிழ்ச்சியாயிருக்கவோ முனையும். பேராசிரியர்களும் ஏனைய கல்வியாளர்களும் தணிக்கைக்குள்ளாவதும் கைதாவதும் சாதாரணமாக நிகழும். சுதந்திரமான கலை, எழுத்து வெளிப்பாடுகள் வெளிப்படையாகவே தாக்குதலுக்குள்ளாகும்.


12. குற்றங்கள் தண்டனைகள் மீதான மிகைவிருப்பு


பாசிச ஆட்சிகளின் கீழ், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வரையறையற்ற அதிகாரமானது காவல் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும்.  காவல் துறையின் துஷ்பிரயோகங்களை நாட்டுப்பற்றின் பெயரால் கண்டும் காணாமலிருப்பதற்கும், சிவில் சுதந்திரங்களை நாட்டுப்பற்றின் பெயரால் கைவிடுவதற்கும் மக்கள் விரும்புவர். பாசிசத் தேசங்களில் ஏறத்தாழ எந்த வரையறையுமற்ற அதிகாரம் கொண்ட தேசியக் காவற்துறைப் படை இருக்கும்.


13. குடும்ப/உறவுக் குழும ஆட்சியினதும் ஊழலினதும் பரவுகை


பாசிச ஆட்சிகள் பெரும்பாலும் எப்போதும்,  தம்மில் ஒருவரை ஒருவர் அரசாங்கப் பணிகளில் அமர்த்திக்கொள்ளுகின்றவர்களால் ஆளப்படும். அவர்கள் தமது நண்பர்களைப் பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து காப்பதற்கு அரச அதிகாரத்தினையும் பலத்தினையும் பயன்படுத்துவார்கள். தமக்குள் உறவுக்காரர்களும் நண்பர்களுமாக இருப்பார்கள்.


14. மோசடி மிகுந்த தேர்தல்கள்


சிலவேளைகளில், பாசிச நாடுகளின் தேர்தல்கள் முழுக்க முழுக்கக் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனைய வேளைகளில், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கெதிரான சேறடிப்புப் பரப்புரைகள், படுகொலைத் தாக்குதல்கள் போன்றவற்றின் மூலமும் வாக்காளர்களின் எண்ணிக்கை, மாவட்ட எல்லைகள் போன்றவற்றைச் சட்டத்துறையக் கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலமும் ஊடகங்களைத் தம் நோக்கங்களுக்காகக் கையாள்வதன் மூலமும் தேர்தல்கள் சூழ்ச்சியுடன் கையாளப்படும்.  பாசிச நாடுகள், தேர்தல்களைக் கட்டுப்படுத்தவும் சூழ்ச்சியுடன் கையாள்வதற்கும் நீதித்துறையினையும் கூட பொதுவாகப் பயன்படுத்துகின்றன.

கலையகம்: காசு ஒரு பிசாசு! (அனைவருக்குமான பொருளியல்)

கலையகம்: காசு ஒரு பிசாசு! (அனைவருக்குமான பொருளியல்)

பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு

சி.ஐ.ஏ. யின் முன்னாள் போதைவஸ்து கடத்தல் கூட்டாளியும், பின்னாள் வில்லனுமான, பனாமா சர்வாதிகாரி நொரியேகாவை கைது செய்ய, 1989 கிறிஸ்துமஸ் தினத்தன்று சின்னஞ்சிறிய நாடான பனாமா மீது படையெடுத்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை, எதிர்கால போர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது. படையெடுப்பின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றியும், உண்மையான காரணங்கள் பற்றியும்; அமெரிக்கா அன்று உலகமக்களுக்கு பொய்களை விற்பது இலகுவாக இருந்தாலும்; அமெரிக்க படையெடுப்பின் உண்மையான காரணங்களை, நேரில் சென்று பார்த்த சில சுதந்திர ஊடகவியலாளரின் தளராத முயற்சியினால் "The Panama Deception" வீடியோ மூலம் உண்மைகளை உலகம் அறியக்கூடியதாக உள்ளது.




பனாமா எங்கே இருக்கின்றது? வட-தென் அமெரிக்க கண்டங்களை இணைக்கும் சிறிய நிலப்பரப்பு, ஒரு காலத்தில் கொலம்பியாவிற்கு சொந்தமாக இருந்து, பின்னர் கேந்திர முக்கியத்துவம் கருதி தனிநாடாக பிரிக்கப்பட்டது. அங்கே செயற்கையாக ஒரு கால்வாய் வெட்டுவதன் மூலம், பசுபிக் சமுத்திரத்தை அட்லாண்டிக் சமுத்திரத்துடன் இணைக்கும் குறுகிய கப்பல் போக்குவரத்து பாதையை அமைக்கும் நிர்மாணப்பணியை அமெரிக்க கம்பெனிகள் தொடங்கியதில் இருந்து, பனாமா மீதான அமெரிக்க ஆதிக்கம் ஆரம்பமாகியது.
அதிக வருவாய் தரும் பனாமா கால்வாய், பனாமா தேசத்தவருக்கு சொந்தமானதாக இருக்கவில்லை. அது அமெரிக்க இராணுவ மேலாண்மையின் கீழ் இருந்தது. ஒரு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தொரியோஸ் வந்த பின்னர் தான், கால்வாயை 2000 ம் ஆண்டு பனாமாவுக்கு சொந்தமாக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. நிலச்சீர்திருத்தம், கறுப்பினத்தவர் முன்னேற்றம் போன்ற புரட்சிகர கொள்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தொரியோஸ் சந்தேகத்திற்கிடமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர் தான், சி.ஐ.ஏ. உளவாளி ஜெனரல் நோரியேகா பதவிக்கு வந்தான்.

நீண்ட காலமாக நொரியேகாவுக்கும், சி.ஐ.ஏ. க்கும் இடையில் போதைவஸ்து கடத்தல் விடயத்தில் புரிந்துணர்வு உடன்பாடு இருந்தபோதும், பின்னர் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வியாபார பிணக்குகளாலோ, அல்லது அதுவரை "ஆமாம் சாமி" யாக இருந்த நொரியேகா தன்னிச்சையாக நடக்க வெளிக்கிட்டதாலோ, உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா பகிரங்கமாக நொரியேகா மீது போதை வஸ்து கடத்தல் குற்றத்தை முன்வைத்து பிரச்சாரத்தை முடுக்கி விட்டது.

1989 ம் ஆண்டு, பனாமா போலிஸ் சுட்டதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் இறந்த சம்பவத்தை சாட்டாக வைத்து, அன்று ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ்(இன்றைய புஷ்ஷின் தந்தை), டிசம்பர் 20 பனாமா மீது படையெடுக்க உததரவிட்டார். மகன் புஷ் 16 அடி பாய்ந்தால், அப்பா புஷ் 8 அடி பாய்ந்திருக்க மாட்டாரா? சன நெரிசலான நகரப்பகுதிகளில் அமெரிக்கப் படையினர் கண்மூடித்தனமாக சுட்டனர். வீதிகளில் தாங்கிகள் எதிரே வந்த பொதுமக்களின் கார்களையும் ஏறி மிதித்து, நொறுக்கிய படி முன்னேறின. தரைப்படைகளின் வெறியாட்டம் போதாதென்று, விமானங்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அப்போது கூட விமானங்கள் எதற்காக ஏழைகளின் சேரிகளை மட்டும் குறிபார்த்து குண்டு வீசின என்பது புஷ்ஷிற்கே வெளிச்சம்.

பனாமா படையெடுப்பின் போது முன்னர் ஒருபோதும் கண்டிராத புதிய வகை ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன. லேசர் குண்டுகள், அப்பாச்சி ஹெலிகப்டர்கள், ஸ்டெல்த் விமானங்கள், என்று அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்த புதிய தலைமுறை ஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்கும் இடமாக பனாமா இருந்தது. எதற்காக தாக்கப்படுகிறோம் என்று கூட அறிந்திருக்காத அப்பாவி பனாமியர்கள் பரிசோதனைச்சாலை எலிகளாக மடிந்தனர். ஆயிரத்துக்கு மேலான பொது மக்கள், அமெரிக்காவின் மூன்று நாள் இராணுவ சாகசத்திற்கு பலியானார்கள். ஆள்பலத்தில் மிகச்சிறிய பனாமிய இராணுவம் முடிந்த அளவு அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட்டாலும், ஓரிரு நாட்களிலேயே சரணடைந்தது.

எலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்திய கதையாக, ஆயிரம் பேரை கொன்று, நொரியேகா என்ற தனிமனிதனை கைது செய்து, அமெரிக்க சிறையில் அடைத்த பின்னரும், பனாமா வழமைக்கு திரும்பவில்லை. அமெரிக்க படைகள் நாடு முழுவதும் வேட்டையாடி, இடதுசாரி அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிற சந்தேகநபர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து தடுத்து வைத்தன. அவ்வாறு சென்றவர்கள் எந்த வித குற்றச்சாட்டும் இன்றி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப்பட்டனர்.

பனாமா முழுவதையும் தமது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் எந்த ஒரு ஊடகவியலாளரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அமெரிக்க ஊடகங்களோ, அமெரிக்க அரசாங்கம் விற்ற பொய்களை மட்டுமே வாங்கி பிரசுரித்துக் கொண்டிருந்தன. எத்தனை பனாமிய மக்கள் இறந்தனர் என்பது இதுவரை யாருக்குமே தெரியாமல் இருக்கையில், படையெடுப்பின் போது இறந்த இருபது அமெரிக்க வீரர்களுக்காக மட்டும் கவலைப்பட்டு வருத்தம் தெரிவித்தார்கள். கடுமையான தணிக்கையை அமுல்படுத்திய அமெரிக்க அரசாங்கம், தனது படைகள் பொதுமக்களை கொல்லவில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்தது.

பனாமா படையெடுப்பின் உண்மையான காரணம் என்ன? இதற்கான விடை அமெரிக்க அரச ஆவணங்களில் உறங்கிக் கிடக்கலாம். ஆயினும் பனாமா கால்வாய் தற்போதும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதும், அப்போது பரிசோதிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்கள், சில வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களையும் கொல்வதற்கு "வெற்றிகரமாக" பயன்படுத்தப்பட்டன என்பது மட்டும் உண்மை.

லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

அது ஒரு "இரகசிய யுத்தம்." அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத "லொங் சென்" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.

இது நடந்தது அறுபதுகளின் இறுதியிலும், 1975 ம் ஆண்டு லாவோஸ் சுதந்திரமடையும் வரையிலும். ஆனால் அன்றைய அமெரிக்க அரசாங்கம், லாவோஸ் போர் குறித்து எதுவுமே கூறவில்லை. அதனால் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. வியட்நாம் போரின் நிழலில் நடந்த, லாவோஸ் போர் பற்றி சரித்திர ஆசிரியர்களும் அதிக அக்கறை கொள்ளவில்லை.
வியட்நாம், கம்போடியா போன்றே லாவோசிலும் கம்யூனிச கெரில்லாக்கள், அமெரிக்காவின் அதி நவீன இராணுவ பலத்தை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். அங்கே லாவோசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராகவும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, இன்று ஆட்சியில் உள்ள "லாவோ புரட்சிகர மக்கள் கட்சி"யின் ஆதரவு தளமாகவும் இருக்கின்றனர். அதே நேரம் இனரீதியான முரண்பாடுகளை கொண்ட, "ஹ்மொங்" என்ற மலை வாழ் பழங்குடியின மக்களை, அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., எதிர்புரட்சி சக்தியாக அணி திரட்டியது. அந்த மக்கள் செறிவாக வாழ்ந்த மலைப்பகுதி சமவெளி ஒன்றில், இயற்கை அரண்களாக மழைக்காடுகளை கொண்ட இடத்தில், சி.ஐ.ஏ. ஒரு இரகசிய விமான நிலையத்தை அமைத்தது. 1969 ம் ஆண்டு உலகின் அதிக விமானப் போக்குவரத்து நடைபெறும் இடமாக அது இருந்தது. ஆயுத விநியோகத்திற்காக சி.ஐ.ஏ. தனது பிரத்தியேக விமான நிறுவனமான "Air America" வை பயன்படுத்தியது. "லொங் சென்" என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமம், இவ்வாறு தான் நகரமாகியது.

லொங் சென் நகரில் வைத்து, ஹ்மொங் ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க தனியார் இராணுவ பயிற்சியாளர்கள், ஆயுதங்களையும் போர் பயிற்சியும் வழங்கினார். தரையில் கம்யூனிச போராளிகளை எதிர்த்து போரிட, ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அமெரிக்கா ஏவிவிட்ட அதேநேரம், தனது போர் விமானங்கள் மூலம் லாவோஸ் முழுவதும் வான் வழி தாக்குதல் நடத்தியது. சராசரி பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை, 24 மணி நேரம், நாள் தவறாமல், வருடக்கணக்காக விமானக் குண்டுவீச்சு இடைவிடாது நடந்தது. எல்லாமே மிகவும் இரகசியமாக! சுமார் இரண்டு மில்லியன் தொன் குண்டுகள், அதாவது 2 ம் உலக யுத்தத்தில் போட்டதை விட அதிகமான குண்டுகள், லாவோஸ் என்ற ஒரு நாட்டின் மீது போடப்பட்டது.

லாவோஸ் சுதந்திரம் அடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்த இரகசிய யுத்தம் நீடித்தது. ஆனால் லாவோசிய இராணுவம், ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அடக்கி, லொங் சென் நகரையும் கைப்பற்றிய பின்னர், பெருமளவு ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். பிற்காலத்தில் அவர்களை ஆதரித்த அமெரிக்காவும் கைவிட்டு விட்டதால், தற்போது வெளி உலகம் தெரியாத சிறு சிறு ஆயுதக் குழுக்கள், காடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தற்போது உலகில் "கொம்யூனிச அபாயம்" அகன்று விட்டதாலும், லாவோஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக நட்பு பாராட்டுவதாலும், அமெரிக்காவிற்கு பழைய ஹ்மொங் நண்பர்களை தேவையில்லை என்று கழட்டி விட்டது. இதன் உச்ச கட்டமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்த ஹ்மொங் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மன் திரைப்படக் குழுவொன்று, இந்த மர்ம நகரம் பற்றியும், இரகசிய யுத்தம் பற்றியும் படம் தயாரிப்பதற்காக லாவோஸ் சென்று வந்தது. அரச படைகளினால் கைது செய்யப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, எடுக்கப்பட்ட ‘The Most Secret Place on Earth’ என்ற திரைப்படம் இந்த வருட இறுதியில் ஐரோப்பிய நகரங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது. அண்மையில் சி.ஐ.ஏ. தனது பழைய இரகசிய ஆவணங்கள் சிலவற்றை பகிரங்கப்படுத்தியது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் பின்னணி ஆதாரங்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படத்தை எடுத்த ஜெர்மன் இயக்குனர் மார்க் எபெர்லே, ஒரு காலத்தில் 50000 மக்கள் வாழ்ந்த லாவோசின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய லொங் சென் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எவ்வாறு? என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
லாவோசில் நடந்தது அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ யுத்தமல்ல. அது ஒரு "தனியார் மயமாக்கப்பட்ட யுத்தம்". ஆயுத விநியோகத்திற்கு தனியார் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. சி.ஐ.ஏ.யினால் நிதி வழங்கப்பட்ட ஹ்மொங் கூலிப்படையினர், அந்த ஆயுதங்களைப் பெற்று போரிட்டனர். மர்ம நகரான லொங் சென்னின் கட்டுமானப்பணிகள் யாவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆதரவுத்தளமான ஹ்மொங் மக்களுக்கு சேவை செய்ய அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நபர் தான் பின்னர் இந்த "இரகசிய யுத்தம்" பற்றிய தகவல்களை உலகிற்கு சொன்னார்.

லாவோஸ் உதாரணத்தை தற்போது அமெரிக்கா ஈராக்கில் பயன்படுத்தி வருகின்றது. அங்கேயும் "யுத்தம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது". யுத்தம் எப்போதும் பொதுமக்களுக்கு அழிவைத் தருகின்றது, ஆனால் அதே யுத்தம் பல வர்த்தக நிறுவனங்களுக்கு கோடி கோடியாக லாபத்தை தருகின்றது.

சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள் கட்டுக்கட்டாக டாலர் நோட்டு சூட்கேசுடன் மாதம் ஒருமுறை வந்தனர்!

அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுக் கட்டாக டாலர் நோட்டுக்களை, ‘வெளியே சொல்ல முடியாத காரணங்களுக்காக’ ஆப்கான் ஜனாதிபதி அலுவலகத்தில் ரகசியமாக கொடுத்து வந்தது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க டாலர் நோட்டுக்கள், சூட்கேஸ்களிலும், பேக்பாக் பைகளிலும், சில சமயங்களில் பிளாஸ்டிக் ஷாப்பிங் பேக்குகளிலும் அடுக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் சிலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது!
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் தற்போதைய, மற்றும் முன்னாள் ஆலோசகர்களை ஆதாரம்காட்டி, இந்த தகவல் வெளியாகி உள்ளது. கட்டுக் கட்டாக பணத்தை கொட்டிக் கொடுத்தவர்கள் சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள்தான் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆப்கான் ஜனாதிபதியின் அதிகாரிகளின் தலைவராக (chief of staff) கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து 2005-ம் ஆண்டுவரை பணிபுரிந்த கலீல் ரோமன், இதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் தெரிவித்த மற்றைய அதிகாரிகள் தமது பெயர்கள் வெளியாவதை விரும்பவில்லை

கலீல் ரோமன், “இந்த பணம், ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வந்து சேருவது வழக்கம். அதிகாரியக் மட்டத்தில் இதை ‘பிசாசு பணம்’ (ghost money) என்று சொல்வோம். பணம் வந்து சேர்வது ஒன்றும் ரகசியமாக இருக்கவில்லை. பல உயரதிகாரிகளுக்கு பணம் வந்தது நன்றாகவே தெரிந்திருந்தது” என்றார்.
இந்த தகவல் வெளியானது குறித்து, சி.ஐ.ஏ. கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
உளவு வட்டாரங்களில் அடிபடும் தகவலின்படி, இந்த பணம் (பல மில்லியன் டாலர்கள் தொகை) ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கே போய் சேர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்குள் சி.ஐ.ஏ. ‘சில காரியங்களை’ ஓசைப்படாமல் செய்வதற்கு ஆப்கான் அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்காக மாதாமாதம் கொடுக்கப்பட்ட பணம் இது. கொடுத்த பணத்துக்கு ‘காரியங்கள்’ செய்யப்பட்டனவா என்பது தெரியவில்லை.