மாவீரனின் மறுபக்கம்:
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா காந்தி மற்றும் நேருவுக்குச் சமமாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அறிமுகமான புகழ்பெற்ற தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.
நேதாஜியின் அரசியல் வாழ்க்கைப் பயணம்புயலும், சூறாவளியும் வீசிய கொந்தளிப்பான சம்பவங்கள் நிறைந்ததாகும். லண்டனில் ஐ.சி.எஸ். பட்டத்தைத் துறந்துவிட்டு 1921&இல் இந்தியா திரும்பினார். இந்திய தேசியக் காங்கிரஸ் மூலம் அவர் நேரடி அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டது 1941 வரை சுமார் இருபது ஆண்டுக் காலம் மட்டுமே!
இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்குள் அவர் நேருவுக்கு இணையாக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். அவரது இடதுசாரிக் கருத்துக்கள், போராட்டங்களுக்கு மக்களைத் திரட்டுவதில் அவருக்கிருந்த ஆளுமைத் திறமைகளைக் கண்டு ஆங்கிலேய அரசு அஞ்சி நடுங்கியது.
மிகக் குறுகிய இருபதாண்டுக் கால அரசியல் வாழ்க்கையிலும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்பதாண்டுகள் சிறையில் வைக்கப்பட்டார். 1933-இல் பர்மாவின் மாண்டலே சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது, கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். நாடு திரும்பக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். மருத்துவச் சிகிச்சைக்காகவும், விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டார்.
1938-இல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-இல் இரண்டாவது முறையாக காந்தியடிகளின் வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பி.ராமமூர்த்தி, ஜீவா, எஸ்.ஏ.டாங்கே முதலிய புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் நேதாஜிக்குப் பக்கபலமாக முழுமூச்சாகத் தலைவர் தேர்தலில் வேலை செய்து வெற்றி பெறச் செய்தது வரலாறு!
“பட்டாபி சீதாராமையாவின் தோல்வி – என்னுடைய தோல்வி” என்று காந்தியடிகள் பகிரங்கமாக அறிவித்தார். நேரு நடுநிலைவகித்தார். அதன் விளைவு, நேதாஜிக்குக் கட்சிக்குள் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. செயல்பட முடியாமல் முடமாக்கப்பட்டார். இறுதியில் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நேதாஜியை நீண்ட காலத்திற்குச் சிறையில் தள்ளி தீவிர அரசியலிலிருந்து அவரைத் தனிமைப்படுத்த அந்நியர் ஆட்சி திட்டமிட்டது. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்து ஆங்கிலேயர் ஆட்சியுடன் போரிடுவது என்ற திட்டத்துடன் 1941 ஜனவரி 16-ஆம் நாள் கொல்கத்தாவில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த போஸ் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பிச் சென்றார்.
பின்னர் அவர் மாஸ்கோ வழியாக பெர்லின் சென்றடைந்ததும், ஜெர்மனியில் இந்திய சுதந்திரச் சங்கம் என்ற அமைப்பை நிறுவி 4000 வீரர்கள் கொண்ட ராணுவப்படையைத் திரட்டியதும், ஹிட்லரின் உதவி தேவையான அளவுக்குக் கிடைக்காததால், 1943 பிப்ரவரி 8-ஆம் நாள் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் 24000 கி.மீ தூரம் 91 நாட்கள் இடைவிடாது சாகசப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் சென்றடைந்ததும், சிங்கப்பூரில் செயலிழந்து கிடந்த இந்திய தேசிய ராணுவத்தைப் புனரமைத்து பர்மா எல்லையில் ஆங்கிலேய, அமெரிக்கக் கூட்டுப்படைகள் மீது தாக்குதல் தொடுத்ததும் நாமறிந்த வீரவரலாறு!
1934-இல் நேதாஜி ஆஸ்ட்ரீயா நாட்டுத் தலைநகர் வியன்னாவில் மருத்துவச் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தார். அங்கிருந்தபோதுதான் இந்திய விடுதலைப் போராட்டம் என்ற ஆங்கிலப் புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத் தயாரிப்பில் தட்டச்சு செய்யவும், நேதாஜியின் கடிதப் போக்குவரத்து வேலைகளை கவனித்துக் கொள்ளவும் பிராலின் எமிலி ஷெங்கல் என்ற இளம் பெண்ணை நேர்முக உதவியாளராகப் பணிக்குச் சேர்த்துக் கொண்டார்.
நேர்முக உதவியாளர் பணிகளுடன் அவருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது, இரவும் பகலும் உடனிருந்து உதவி செய்த எமிலிக்கும் அவருக்குமிடையில் மெல்ல மெல்லக் காதல் அரும்பியது. நாடு திரும்பிய பின்னரும் எமிலிக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தார்.
1937 டிசம்பர் 26-ஆம் நாள் நேதாஜி எமிலியை மாலை மாற்றி மிக எளிமையாக, எந்த விதமான சடங்குகளுமில்லாமல் திருமணம் செய்து கொண்டார். திருமணச் செய்தி வெளியுலகிற்குத் தெரியாமல் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. நேதாஜிக்குத் தந்தையாகவும், சகோதரனாவும், நண்பனாகவும் இருந்து அன்பைச் சொரிந்து பாதுகாத்த அண்ணன் சரத் சந்திரபோசுக்குக்கூட இந்தத் திருமணம் நேதாஜியின் மறைவிற்குப் பின்பே தெரிய வந்தது.
“இந்திய நாட்டு மக்கள் மத நம்பிக்கைகளிலும், சாதி நம்பிக்கைகளிலும் ஊறிப் போயிருக்கிறார்கள். சாதி மறுப்புத் திருமணத்தையே சகித்துக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்கள் சாதி மறுப்பும், மதத்திற்கு அப்பாற்பட்டும், நாடுவிட்டு நாடு வந்து செய்துகொள்ளும் நம் திருமணத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனது திருமண நிகழ்ச்சி எனது அரசியல் போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடாது” என்று நேதாஜி தன்னிடம் சொன்னதாக எமிலி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
1934 நவம்பர் தொடங்கி 1942 பிப்ரவரி முடிய நேதாஜி எமிலிக்கு எழுதிய 162 கடிதங்களும், எமிலி நேதாஜிக்கு எழுதிய 18 பதில் கடிதங்களும் இன்று நமக்குக் கிடைத்துள்ளன. இந்த கடிதங்கள் சாதாரணமான காதல் கடிதங்களல்ல. அவை உயர்ந்த இலக்கியத் தரம் வாய்ந்தவை. உள்ளடக்கத்தில் வித்தியாசமானவை.
அரசியல், தத்துவம், வரலாறு, கலை, இலக்கியம், இசை, எளிமையான வாழ்க்கையின் அவசியம், லட்சியம், மனிதகுல மேம்பாட்டுக்காக உழைத்தல், உடல்நலம் பேணுதல் எனப் பல்வேறு விதமான விஷயங்களைத் தனது காதலி எமிலிக்கு இந்தக் கடிதங்களில் விரிவாக எழுதியிருக்கிறார். சில முக்கியமான அரசியல் சம்பந்தப்பட்ட கடிதங்களை ஜெர்மன் மொழியில் எழுதியிருக்கிறார். சில தந்திச் செய்திகளும் கிடைத்துள்ளன.
“உன் சொந்தக் காரியங்கள் நிறைவேற கடவுளை வேண்டிக் கொள்ளாதே. மனிதகுலத்திற்கு எப்போதும் நிரந்தர நன்மை பயக்கும் கோரிக்கைள் குறித்துக் கடவுளிடம் வேண்டிக்கொள் என்று 1936 மார்ச் 3&ஆம் தேதிய கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
“உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். புதிய மொழி ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள். அது உன் அறிவை விரிவாக்கும். இசைக்கருவி ஏதாவதொன்றை இயக்கக் கற்றுக்கொள். அது உன் ஆன்ம பலத்தை உயர்த்தும். தத்துவப் புத்தகங்களைத் தேடிப் படி. அவை உனக்கொரு புதிய பாதையைக் காட்டும். இவை என்னுடைய ஆலோசனைகள்தான். தேவையற்ற புத்திமதிகள் என்று நீ கருதினால், என்னை மன்னித்துவிடு என்று எமிலிக்கு 17.6.1937-ஆம் நாள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறர்.
“காந்தியின் வேட்பாளரையே எதிர்த்துப் போட்டியிட்டுத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றிருக்கிறேன். தோல்வியடைந்தவர்கள் என்னை நிம்மதியாக வேலை செய்யவிடப் போவதில்லை என்று தீர்க்கதரிசனத்துடன் 11.2.1939 தேதியிட்ட கடிதத்தில் எமிலிக்கு எழுதியிருக்கிறார்.
“நேதாஜிக்கும், எமிலிக்கும் 1942 நவம்பர் 29-ஆம் நாள் பெண் குழந்தை பிறந்தது. அனிதா போஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. அனிதா அமெரிக்காவில் டாக்டர் பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருக்கும்போது, சக மாணவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் பிப்சரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இந்தியாவிற்கு அடிக்கடி வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இருவரும் ஜெர்மனி நாட்டில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
நேதாஜியின் மருமகன் டாக்டர் மார்ட்டின் பிப்சர், இரண்டுமுறை ஜெர்மன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டவர். நேதாஜியின் மகள் அனிதா போசுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். ஆண் குழந்தைகளுக்கு ‘பீட்டர் அருண்’, ‘தாமஸ் கிருஷ்ணா’ என்றும், மகளுக்கு ‘மாயா’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.
1945-இல் இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன், நேதாஜியின் மனைவி எமிலி ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையில் இடைநிலை அதிகாரியாகப் பணிக்குச் சேர்ந்து ஒரே மகள் அனிதா போசை வளர்த்து ஆளாக்கினார். அந்த நாட்டு அஞ்சல் துறைத் தலைமை இயக்குனராக உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றார்.