Monday, April 29, 2013

சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள் கட்டுக்கட்டாக டாலர் நோட்டு சூட்கேசுடன் மாதம் ஒருமுறை வந்தனர்!

அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுக் கட்டாக டாலர் நோட்டுக்களை, ‘வெளியே சொல்ல முடியாத காரணங்களுக்காக’ ஆப்கான் ஜனாதிபதி அலுவலகத்தில் ரகசியமாக கொடுத்து வந்தது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க டாலர் நோட்டுக்கள், சூட்கேஸ்களிலும், பேக்பாக் பைகளிலும், சில சமயங்களில் பிளாஸ்டிக் ஷாப்பிங் பேக்குகளிலும் அடுக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் சிலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது!
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் தற்போதைய, மற்றும் முன்னாள் ஆலோசகர்களை ஆதாரம்காட்டி, இந்த தகவல் வெளியாகி உள்ளது. கட்டுக் கட்டாக பணத்தை கொட்டிக் கொடுத்தவர்கள் சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள்தான் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆப்கான் ஜனாதிபதியின் அதிகாரிகளின் தலைவராக (chief of staff) கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து 2005-ம் ஆண்டுவரை பணிபுரிந்த கலீல் ரோமன், இதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் தெரிவித்த மற்றைய அதிகாரிகள் தமது பெயர்கள் வெளியாவதை விரும்பவில்லை

கலீல் ரோமன், “இந்த பணம், ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வந்து சேருவது வழக்கம். அதிகாரியக் மட்டத்தில் இதை ‘பிசாசு பணம்’ (ghost money) என்று சொல்வோம். பணம் வந்து சேர்வது ஒன்றும் ரகசியமாக இருக்கவில்லை. பல உயரதிகாரிகளுக்கு பணம் வந்தது நன்றாகவே தெரிந்திருந்தது” என்றார்.
இந்த தகவல் வெளியானது குறித்து, சி.ஐ.ஏ. கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
உளவு வட்டாரங்களில் அடிபடும் தகவலின்படி, இந்த பணம் (பல மில்லியன் டாலர்கள் தொகை) ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கே போய் சேர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்குள் சி.ஐ.ஏ. ‘சில காரியங்களை’ ஓசைப்படாமல் செய்வதற்கு ஆப்கான் அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்காக மாதாமாதம் கொடுக்கப்பட்ட பணம் இது. கொடுத்த பணத்துக்கு ‘காரியங்கள்’ செய்யப்பட்டனவா என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment