போசு மீண்டும் தலைவராக வேண்டும் என்று மக்களே விரும்பினார்கள் என்றுதான் கூறவேண்டும். போசின் அனுமதியின்றி, ஜல்பைகுரி என்ற நகரத்தில் கூடிய வங்க மாநில காங்கிரசு காரியகமிட்டி, 1939-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்தியபிரதேசத்தில் உள்ள திரிபுராவில், கூடவிருக்கும் காங்கிரசு மகாசபைக்கு சுபாசு சந்திரபோசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஜரோப்பாவில் இரண்டாம் உலகப்போரின் யுத்த மேகங்கள் குமுறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், உலகப்போரில் பிரிட்டனும் சிக்கிக் கொள்ளும் நெருக்கடியில் உள்ளது. இந்தத் தருணத்தில் காங்கிரசு கட்சியையும், மக்களையும் வழிநடத்த இடதுசாரிகொள்கை கொண்ட போசு ஒருவரால் மட்டுமே முடியும். பிரிட்டிசு ஆட்சியை வெளியேற வைக்கவும், இறுதிப் போராட்டத்தை நடத்தவும் போசின் தலைமை அவசியம் என்றனர். ஆனால் ஏற்கனவே டில்லியில் காங்கிரசு காரிய கமிட்டிக் கூட்டத்தில், பிரிட்டிசு உலகப்போரில் சிக்கியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுதந்திரம் அடைவது, சத்தியாக்கிரக தர்மத்திற்கு முரண்பட்டதென்றும், அப்படி முயற்சி செய்பவர்களுக்கு தமது ஆதரவு கிடைக்காதென்றும் காந்தி கூறியிருந்தார். இது வங்காள காங்கிரசு காரிய கமிட்டி செயலுக்கு எதிராக அமையும் விதத்தில் இருந்தது.
காந்தியின் ஆதரவாளர்களான பட்டேலும், ராஜாஜி, காங்கிரசு காரியக்கமிட்டி உறுப்பினர்கள் சிலரும் சேர்த்து சுபாசு சந்திரபோசுக்கு எதிராக, மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை தலைவர் பதவிக்கு நிறுத்துவது என்று சிந்தித்தனர். ஆனால் காந்தி, போசுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு குறிப்பாக தென்மாநிலமான தமிழ்நாட்டில் போசுக்கு இருந்த ஆதரவை குறைப்பதற்காக, தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று சிந்தித்து, தென்மாநிலத்தைச் சேர்ந்த பட்டாபி சீத்தாராமையாவைப் போட்டியிடச் செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று கருதினார். அதை அறிந்ததும் அபுல்கலாம் ஆசாத், பட்டாபி சீத்தாராமையாவுக்கு ஆதரவாக தாம் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக ஓர் அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபுல்கலாம் ஆசாத் விலகியபின் பட்டாபியை தேர்தலில், காந்தி நிறுத்துவை ஒரு தேர்தல் களமாகக் கண்டார் போசு. தன்னை சவாலுக்கு அழைப்பது போல் காந்திஜியின் செயல்பாடுகளைக் கண்ட போசு எமனுக்கும் அஞ்சாத அந்த மாவீரர் உடனடியாக அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு, பல்வேறு மாகாணக் காங்கிரசு கமிட்டிகள் தலைவர் தேர்தலுக்குத் தங்கள் வேட்பாளராக எனக்குத் தெரியாமலே என்னை நியமித்துள்ளனர், என் சம்மதத்தையும் கோரவில்லை.
சோஷலிஸ்ட் (சமதர்மம்) அல்லாதவர்களும் பல நாடுகளில் இருந்து என்னையே போட்டியிடுமாறு கூறுகிறார்கள். இதற்கும் மேலாக காங்கிரசு பிரதிநிதிகள் மத்தியில் தாமே மீண்டும் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பொறுப்பிலிருந்து நான் பணியாற்ற வேண்டும் என்று மக்கள் எனக்கு உத்தரவிடப்படும் போது அதை மறுக்க எனக்கு அதிகாரமில்லை. உண்மையில் அப்படி நான் மறுத்தால் பொறுப்பிலிருந்து நான் விலகி ஓடுவதாகவும் என் கடமையைச் செய்யத் தவறுவதாகவும் என்மீது குற்றம்சாட்ட வழி அமைப்பதாகவும் இருக்கும். எனவே நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் போசு. இந்த அறிவிப்பை கண்ட வல்லபாய் பட்டேல் அதிர்ந்து போனார். உடனே போசின் அண்ணன் சரத் சந்திரபோசுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அதில் காங்கிரசு கொள்கைகள் தலைவரை நிர்ணயிப்பதில்லை, காரியக் கமிட்டியும் காங்கிரசும்தான் நிர்ணயிக்கின்றது. எங்கள் அறிக்கை டாக்டர் பட்டாபியின் சேவைகளைப் பாராட்டி ஆதரிக்கிறது. எனவே போசு கட்சியை பிளவு படுத்தாமல் தலைவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment