Wednesday, November 5, 2014

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 10

போசு, காந்தி இருவரும் இருவேறு திசையில் பயணித்தார்கள். ஐயோ! இன்னமும் எத்தனைக் காலத்திற்குப் பிரிட்டனை நம்பப்போகிறீர்கள். நம்மை அவர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட நீங்கள் உணரவில்லையா? என்று கத்தினார் போசு.
பிரச்சனையைத் தீர்ப்போம் என்று கூறியிருக்கிறார்கள் இது ஒரு நல்ல முன்னேற்றம் என்றார் காந்தி.
உங்களுக்கு எதைச் சொல்லிப் புரியவைப்பது என்று தெரியவில்லை எந்த மயிலாவது நாளை மறுநாள் சிறகு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறதா?
பொறுமையைச் சிதறவிடக்கூடாது.
பொறுமை பொறுமை என்று பேசிப்பேசி இதுவரை என்ன சாதித்திருக்கிறோம்?
முடிவு செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள், பரிசீலிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.
கடவுளே! அயர்லாந்தைப் பார்த்துக்கூட நாம் கற்றுக்கொள்ளா விட்டால் எப்படி?
காந்தியின் இறுதி முடிவு இதுதான்.
அயர்லாந்து வேறு, இந்தியா வேறு நமது போராட்டம் அறப்போராட்டமாக மட்டுமே முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் என்னுடைய முடிவு இதற்குக் கட்டுப்பட்டவர்கள் மட்டும் என்னுடன் தங்கியிருந்தால் போதுமானது.
போசின் இறுதி முடிவு இதுதான்.
காந்தி ஒரு மரியாதைக்குரிய தலைவர் என்பதில் எந்தச் சந்தேகமில்லை. காங்கிரசை அவரே வழிநடத்திச் செல்லட்டும். ஆனால் அவரது சாத்வீக போராட்டத்தால் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்பதை அவர் நிச்சயம் ஒரு நாள் உணர்வார், அவரை வழிபடுபவரும் உணர்வார்கள்.
என்றாவது ஒரு நாள், தான்செய்வது தவறு என்று காந்தி புரிந்துகொள்வார். எங்கள் இருவரது வழியும் ஒன்றுதான் என்று அவர் உணர்வார்.
1930 பிப்ரவரி 14,15,16 ஆகிய மூன்று தினங்களில் சபர்மதியில் காங்கிரசு காரியக் குழு உறுப்பினர் கூடினார்கள், மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
1.காந்தியின் தலைமையில் ஒத்துழையாமைப் போரைத் தொடங்க வேண்டும்.
2.அகிம்சைதான் போர்முறை, வன்முறை வேண்டவே வேண்டாம்.
3.உப்பின் மீது போடப்பட்ட வரியை உடனடியாக எதிர்க்க வேண்டும்.
மார்ச் 3-ஆம் தேதி காந்தி, வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார். ஒத்துழையாமை இயக்கம் தொடங்க உத்தேசிப்பதாகக் கூறினார்.
போராட்டம் தொடங்கப் போவதாக இருந்தாலும் சரி, பிரிட்டனை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி தக்க முறையில் அதை பிரிட்டிசு அரசுக்கு அறிவித்தப் பிறகே செய்வது காந்தியின் வழக்கம்.
காந்தி நேரடியாகப் போராடுவது சரியானதல்ல என்றும் அவ்வாறு செய்தால் அமைதி கெட்டுவிடும் என்றும் வைசிராய் பதில் கடிதம் எழுதினார். காந்தியால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை, காந்தி தயாரானார்.
79 தொண்டர்கள் இணைந்து கொண்டனர். மார்ச் 12ம் தேதி காந்தி தண்டியாத்திரையைத் தொடங்கினார். ஏப்ரல் 5ல் தண்டியை அடைந்த காந்தி கைது செய்யப்பட்டார். இந்தப் போராட்டப் பாதை பூர்ண சுயராச்சியத்திற்கு நம்மை கொண்டு போய்ச் சேர்க்கும் என்றார் காந்தி.
போசு அப்போது கைதாகி அலிப்பூர் சிறையில் இருந்தார். ஏன் கைது, எதற்காகக் கைது போன்ற காரணங்களைத் தேட வேண்டிய அவசியம் கிடையாது. போசு ஒரு தீவிரவாதி பிரத்தியேகமாகக் கவனிக்கப்பட வேண்டியவர். பிடித்து உள்ளே தள்ளிவிட்டனர். ஒரு வருட தண்டனை அளிக்கப்பட்டிருந்தது.
காந்தியின் தண்டி யாத்திரை கிளப்பிவிட்ட போராட்டத்தீ அவரை உற்சாகப்படுத்தியது இதுதான் வேண்டும் என்று மகிழ்ந்தார். பரவாயில்லை, காந்தியாரே இப்போதுதான் என் வழிக்கு வந்திருக்கிறீர்கள் என்று ஒரு மகிழ்ச்சி அடைந்தார்.
ராசீயக் குற்றவாளிகள் என்று ஒரு வகையறா உண்டு. அரசிற்கு எதிராக சத்தம் போடுபவர்கள், கூட்டம், போராட்டம் நடத்துபவர்கள் போன்றவர்கள் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள். பெயருக்குத் தான் ராசீயக் குற்றவாளிகளே தவிர பிற குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. இதனால் ராசீயக் குற்றவாளிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் வெடிக்கும். அப்படி ஒரு முறை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது போசு அந்தப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
ஒரு கைதியைச் சில அதிகாரிகள் போட்டு அடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட போசிற்குக் கோபம் உச்சத்தைத் தொட்டது.
இப்படி மிருகத்தனமாகக் கைதிகளை நடத்துவது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா? கைதிகளை அடிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்!
அடித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் ஒரு நிமிடம் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். கைதி உடுப்பில், இடுப்பில் கை வைத்துக் கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் போசு.
ஓர் அதிகாரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. நீயோ ஒரு கைதி, நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று நீ உத்தரவிடுகிறாயா?
போசு: நான் கைதியாக இருக்கலாம் அதற்காக இதுபோன்ற அக்கிரமங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.
சிறை அதிகாரி: அப்படியா? துரை என்ன செய்வாராம்?, எங்களை அடிப்பாரா? எங்கள் பதவியைப் பிடுங்கிக் கொள்வாரா? என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள் துரையே.
சிரிப்பொலி பரவியது.
இவனை என்ன செய்யலாம்? என்றார் அந்த அதிகாரி. எந்தக் கைதியை அடிக்க வேண்டாம் என்று சொன்னானோ அந்தக் கைதியை விட்டே இவனை அடிக்க வைக்கலாம். சுருண்டு கிடந்த அந்தக் கைதியிடம் திரும்பினார் அதிகாரி.
சிறை அதிகாரி: இதோ திமிராக நிற்கும் இந்த இளைஞனை நீ அடிக்க வேண்டும். அப்படி செய்தால் உன்னை அடிக்காமல் விட்டு விடுகிறேன்.
ஒரு நிமிடம் தயங்கிய அந்தக் கைதி மறு விநாடியே சுதாரித்துக் கொண்டு போசை சரமாரியாக அடிக்கத் தொடங்கினான். மாடிப்படியிலிருந்து பெரும் சத்தத்துடன் சரிந்து விழுந்தார் போசு.
போசு மீண்டும் கண் விழிக்க சரியாக 70 நிமிடங்கள் பிடித்தன. போசு தாக்கப்பட்டார் என்னும் செய்தி வங்காளம் முழுவதும் பரவியது. நாங்கள் யாரும் அவரை அடிக்கவில்லை, இது ஒரு சிறு விபத்து என்றது சிறை அதிகாரி வட்டம்.
அப்போது கல்கத்தா நகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. போசின் பெயர் முன்மொழியப்பட்டது. சிறையிலிருக்கும் போதே அவர் வெற்றி பெற்றார்.
ஒத்துழையாமை இயக்கம் முழுவீச்சுடன் நடந்துகொண்டிருந்தது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு உள்பட அனைத்துத் தலைவர்களும் சிறையில் இருந்தனர். 1930 டிசம்பரில் போசு விடுதலையானார். என்ன பயன்? மல்தா என்ற கிராமத்தில் அவரை வரவேற்றியிருந்தார்கள். போகாதே என்றது அரசு. போவேன் என்று போனார், கைது ஒரு வாரம் மீண்டும் சிறை.
சனவரி 26 சுதந்திர தினம் கொண்டாடக்கூடாது என்றனர், பொதுக்கூட்டத்தில் பேசக்கூடாது என்றனர். கொண்டாடினார், பேசினார், ஊர்வலம் சென்றார், கொடி பிடித்தார், தடியடி நடந்தது, மேயர் என்றும் பார்க்காமல் அவரை அடித்தனர், 6 மாத தண்டனையும் கிடைத்தது.
லார்ட் இர்வின், காந்தியைத் தொடர்பு கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். காந்தி எந்தவித முன்நிபந்தனையும் விதிக்காமல் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டார்.
மார்ச் 5, 1931 அன்று காந்தியும் இர்வினும் சந்தித்து ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். காந்தி இர்வின் ஒப்பந்தம் (Gandhi-Irwin pact) என்று அழைக்கப்பட்ட அந்த உடன்படிக்கையின் சாராம்சம் இதுதான்.
1.ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரசு நிறுத்திவைக்க வேண்டும்.
2.அடுத்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரசு கலந்து கொள்ளும்.
3.காங்கிரசை முடமாக்கும் வேலைகளில் அரசு ஈடுபடாது.
4.வன்முறையில் ஈடுபட்டு, சிறையில் இருப்பவர்களைத் தவிர பிறர் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும்.
5.ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக் கொண்டதற்காகச் சிறைபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர்.
உடன்படிக்கை கையெழுத்தானதன் தொடர்ச்சியாக காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். போசு உள்பட பலர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றபடி காந்தி-இர்வின் ஒப்பந்தம் தீவிரமாக விமரிசிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் வெறும் கண்துடைப்புதான் என்று வேறு சிலர் கூறினர். போசு என்ன சொல்லப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் அத்தனை பேரும் ஆர்வம் காட்டினர்.
காந்தியை நேரில் சந்தித்துப் பேசிய பிறகே இந்த உடன்படிக்கை குறித்த எனது கருத்தைத் தெரிவிப்பேன் என்றார் போசு.

No comments:

Post a Comment