Thursday, November 6, 2014

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 16

போசு காங்கிரசு தலைமைப் பதவியில் எப்படிச் செயல்பட்டார் என்பதை பட்டாபி சீத்தாராமையா கூறியது:
Portrait of Dr. Pattabi Sitaramayya.காங்கிரசு தலைவர்கள் பெரும்பாலும் அதிகமாக பேச வேண்டியிருக்கும், அவர்கள் மௌனமாக இருக்கவே முடியாது, அவர்கள் பேச வேண்டிய அவசியம் இருந்து கொண்டிருக்கும், ஆனால் போசுக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் மனம் பெற்றிருந்த உறுதியினை உடல் பெறவில்லை. அவரால் பல தடவை காரிய கமிட்டிக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசமுடியவில்லை. அவர் பேசிய கூட்டங்களை எண்ணிக்கையில் கூறிவிடலாம். ஆனால் கூட போசு உடலை, வருத்திய நோயைப் பற்றிக் கவலையே இல்லாமல் பேசுவதையும், கூட்டங்களில் கலந்து கொள்வதையும், செய்து கொண்டு தன் பொறுப்புகளை திறம்படவே நிர்வகித்து வந்தார். இந்தியாவில் பல மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்தார். பலவற்றைப்பற்றியும் திறமையுடனும் தனக்கே உரிய வழியிலும் பேசினார்.
1938- செப்டம்பரில் டெல்லியில் நடக்க இருந்த அகில இந்திய காங்கிரசு கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கிளம்பி வரும் வழியில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கான்பூரில் சற்றுத் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு பின் அகில இந்திய காங்கிரசு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்பொழுது பாதியில் வந்து கலந்து கொண்டார். மிகவும் பொறுமையாகவும் தமக்கு ஆதரவு தேடாமலும், தாம் நினைப்பதைச் சாமர்த்தியமாகச் சொல்வதில் வல்லவர் போசு. அவர் யாருடனும் விவாதத்தில் ஈடுபட்டதில்லை. தனக்கு பிடிக்காத கருத்துகளுக்கு கூட, மற்றவர்கள் பெருவாரியானவர்கள் கூறும் கருத்துக்கு மறுப்பேதும் கூறாமல் மதிப்புக்கொடுத்து நடந்து கொண்டார். போசு காங்கிரசு தலைவராக இருந்தபொழுது கட்டாக் நகரில் தம் தந்தையார் கட்டியிருந்த ஒரு பெரிய வீட்டைக் காங்கிரசு கட்சிக்கே அர்ப்பணித்தார். 1938 மே மாதம் 10ம் தேதி பம்பாய் மாநகராட்சி சார்பில் போசுக்கு ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பில் கலந்து கொண்டு பேசுகையில் தாம் ஒரு காங்கிரசு தலைவராக இதில் பங்குகொள்ளவில்லை.
ஒரு சாதாரணமான காங்கிரசு தொண்டனாகவே பங்கேற்பதாகவும் மற்றும் தாம் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் மேயராக இருந்தபோது கல்கத்தா மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகவும் பின்னர் மாநகராட்சி மேயராகவும் தாம் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி விவரித்து விட்டு, ஏழை எளிய மக்களுக்குத் தேவையான குடிதண்ணீர், சுகாதார வசதி, வீட்டு வசதி ஆகியவற்றை பூர்த்தி செய்வதே மாநகராட்சியின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்துவதாகவும் பேசினார். வியன்னாவில் தாம் இருந்தபோது வியன்னா நகர மாநகராட்சி செயல்படும் விதத்தை நகர மேயரோடு தொடர்பு கொண்டு அறிந்த விவரங்களையும் லண்டனில் உள்ள பர்மிங்காம் நகரசபை நகராட்சி வங்கி ஒன்றையே நடத்தி வருவதையும் அரசியலின் அரிச்சுவடியே நகர சபைகளில்தான் தொடங்குகிறது என்று பிரிஸ்ஹெரால்ட் லாஸ்கி முதலிய ஆங்கிலேய அறிஞர்கள் குறிப்பிட்டிருப்பதையும் பண்டைய இந்தியாவில் இருந்த மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்கள் அடைந்திருந்த முன்னேற்றத்தையும் ஒரு கல்லூரிப் பேராசிரியரைப் போல விளக்கமாக எடுத்துரைத்தார்.
subash 16-2அந்த வரவேற்பில் பங்குகொண்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முன்னர் மாநகராட்சி வரவேற்பில் கலந்துகொண்ட எந்த தலைவரும் இதுபோன்று உரையாற்றியது இல்லை என்றும், நகரசபைப் பணி என்பது எவ்வளவு உயர்ந்த பணி என்பதைப் புரிய வைத்ததற்காக போசுக்கு பம்பாய் மேயர் நன்றி தெரிவித்தார். போசு உடல் நலம் சரிவரத் தேறாத நிலையிலும் இரவும் பகலும் காங்கிரசு கட்சிப் பணிகளிலேயே தம் முழுகவனத்தையும் செலுத்தி வந்தார். போசு தலைவராக இருந்த சமயத்தில் இந்து முஸ்லீம் இனவேறுபாடு பிரச்சனைகள் அதிகமாக இருந்தது. எனவே இந்து முஸ்லீம் பிரச்சினையைப் பற்றி முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவுடன் பேசித் தீர்க்க முயன்றார் தலைவர் போசு.
அதில் போசுக்கும் ஜின்னாவுக்கும் இடையில் நடந்த பல கடிதம் பரிமாற்றங்களில் சில செய்திகள்.
அன்பார்ந்த திரு.போசு,
இத்துடன் அகில இந்திய முஸ்லீம் லீக் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின் நகல்களை அனுப்பியிருக்கிறேன். கட்சியின் சார்பில் மே14,15 தேதிகளில் நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு இதுவே என் பதிலாகும்.
தங்கள் அன்புள்ள
எம்.ஏ.ஜின்னா
தீர்மானம் 1:
அகில இந்திய முஸ்லீம் லீக் செயற்குழு காங்கிரசு தலைவர் சுபாசு சந்திரபோசு, முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவிடம் கொடுத்த குறிப்புரையையும், கடிதத்ததையும் பரிசீலித்து, முஸ்லீம் லீக்கை இந்தியாவிலுள்ள முஸ்லீம்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்காதவரைக்கும் காங்கிரசு கட்சியோடு இந்து-முஸ்லீம் பிரச்சனை பற்றிப் பேசவே ஒப்பந்தம் செய்து கொள்ளவோ இயலாது என்று இந்த செயற்குழு கருதுகிறது.
தீர்மானம் 2:
இந்த செயற்குழு திரு.காந்தி மே மாதம் 22ம் தேதி எழுதிய கடிதத்தையும் பரிசீலித்தது. காங்கிரசு கட்சி, முஸ்லீம் லீக்கோடு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நியமிக்கும் குழுவில் ஒரு முஸ்லீம் பிரதிநிதியைச் சேர்க்க விரும்புவதை ஏற்க இயலாது என்று கருதுகிறது.
தீர்மானம் 3:
இந்த செயற்குழு இந்தியாவிலுள்ள முஸ்லீம்களைத் தவிர, இதர சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கவும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்கவும், அவர்களது நலன்களைப் பேணவும், அவர்களது பிரதிநிதிகளோடு உரிய சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும், தயாராக இருக்கிறது என்ற முஸ்லீம் லீக்கின் அறிவிக்கப்பட்ட கொள்கையை மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
subash 15-3ஜின்னா அனுப்பிய கடிதம் மற்றும் அத்துடன் இணைத்திருந்த தீர்மானங்களும் கிடைத்தது என்று ஜுன் மாதம் 21ம் தேதி ஜின்னாவுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். பின்னர் 27ம் தேதி அன்று போசு ஜின்னாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,
அன்பார்ந்த திரு.ஜின்னா
6ம் தேதியிட்ட கடிதமும், தீர்மான நகல்களும் கல்கத்தாவுக்கு குறிப்பிட்ட நாளில் வந்து சேர்ந்தன. ஆனால் நான் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் ஜூன் மாதம் 26ம் தேதி கல்கத்தா வந்து சேர்ந்த பின்னரே அவற்றைக் காண நேர்ந்தது. நான் கொடுத்த தந்தி உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். காங்கிரசு காரியக் கமிட்டி, ஜூலை மாதம் 9ம் தேதி கல்கத்தாவில் கூடுகிறது. உங்கள் கடிதமும் செயற்குழுத் தீர்மானங்களும் காங்கிரசு செயற்குழவில் பரிசீலிக்கப்படும். கூட்டம் முடிந்ததும் அதில் எடுக்கப்படும் முடிவுகளை உடனுக்குடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
தங்கள் அன்புள்ள
சுபாசு சந்திரபோசு
அதன் பின்னர் காங்கிரசு செயற்குழு முடிவை விளக்கி சுபாசு ஜின்னாவுக்கு அனுப்பிய கடிதம் வருமாறு.

No comments:

Post a Comment