Wednesday, November 5, 2014

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 7


போசின் திடீர் கைதால் கல்கத்தா கொதிக்கத் தொடங்கியது. அவசர அவசரமாக போசைக் கல்கத்தாவிலிருந்து மண்டலே சிறைக்குக் கொண்டு சென்றார்கள். இந்த முறை சிறை அவரைப் படுத்தி எடுத்துவிட்டது. கடுமையான இருமல், விட்டு விட்டு காய்ச்சல் காரணமாக மளமளவென்று எடை குறைந்துவிட்டது. படுத்த படுக்கையாக ஆகிவிட்டார், உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது ஆனால் அதை உணரக்கூட முடியவில்லை.
போசின் உடல்நிலை பற்றிய விவரம் சிறிது சிறிதாக வெளியே கசியத் தொடங்கியது, போராட்டம் வலுத்தது, உடல்ரீதியாக முற்றிலும் கலங்கிப்போயிருந்த போசிற்கு மேலும் ஒரு அடி விழுந்தது.
1925ல் சித்தரஞ்சன் தாஸ் காலமானார். அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார். வாழ்க்கையே முடிந்துபோனதுபோல் இருந்தது. தனது பெற்றோர்களை விட, காந்தியைவிட போசு அதிகம் நேசித்தது சித்தரஞ்சன் தாசைத்தான். அவர் இனி இல்லை என்ற நினைப்பு போசை உலுக்கியது.
போசு தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். என்னுடைய அரசியல் வாழ்க்கை இத்தோடு நிறைவடைந்துவிட்டது.
1926ல் வங்க சட்டசபைத் தேர்தலில் போசின் பெயர் முன்னிறுத்தப்பட்டது. சிறையில் இருந்தபடியே வெற்றியும் பெற்றார். அப்போதும்  கூட அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது அரசு.
போசை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்னும் முழக்கத்துடன் மக்கள் வீதியில் இறங்கினார்கள், கலவரங்கள் வெடித்தன. அப்போதைய கவர்னர் லிட்டன் வெலவெலத்துப்போனார். மண்டலே சிறையிலிருந்து போசை ரங்கூனுக்குக் கொண்டு சென்றனர், ஓர் உறுதிமொழியையும் வெளியிட்டனர்.
போசை இப்போதைக்கு விடுவிக்க முடியாது. ஆனால் அவரது மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தகுந்த மருத்துவ வசதிகள் செய்துத் தரப்படும்.
இப்படிச் சொன்னார்களே தவிர யாரும் சிறு துரும்பையும் அசைக்கவில்லை. கல்கத்தா மக்கள் கொடிபிடித்தபடி நடுவீதிகளில் இறங்கினர். போசை உடனடியாக விடுவிக்கவேண்டும் அல்லது அவரை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்து முற்றிலும் குணமடையும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும்.
அரசு சிந்தித்தது. ஐரோப்பாவிற்கு அனுப்பி அவருக்கு மருத்துவம் பார்ப்பது என்பது இயலாத காரியம், அதிக பணச்செலவு ஆகும், மருத்துவம் பார்க்காமல் சிறையிலேயே வைத்திருப்பதும் ஆபத்துதான். இருக்கிற உடல்நிலைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். சிறைக்குள் எதாவது ஆகித் தொலைத்தால் பிறகு இத்தனைப் பெரிய மக்கள் கூட்டத்திற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதற்காக அவரை அப்படியே விட்டுவிடவும் முடியாது ஒரு முடிவுக்கு வந்தனர். போசை விடுதலை செய்ய இரண்டு நிபந்தனைகளை விதித்தனர். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை போசு தேர்வு செய்து கொள்ளலாம்.
1.தான் செய்தது தவறு என்று போசு ஒப்புக்கொள்ள வேண்டும்.
2.இந்தியாவை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
சகோதரர் சரத் சந்திராவுக்கு ஒரு கடிதம் எழுதினார் போசு.
கடவுள் என்னை எப்படிச் சோதிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ, அப்படியே சோதிக்கட்டும். அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நமது பாரத சமுதாயம் முன்பு செய்த பாவங்களுக்கு நான் இப்போது பிராயச்சித்தம் செய்வதாக நினைக்கிறேன். இதில் எனக்கு துளிகூட துக்கமில்லை, மாறாக மகிழ்ச்சியே அடைகிறேன்.
எந்த லட்சியத்திற்காக நான் அவதிப்படுகிறேனோ அந்த லட்சியம் மட்டும் சாகாது என்பது திண்ணம். மக்களும் அந்த லட்சியத்தை அடைந்தே தீருவார்கள்.
இதற்கிடையே பல வதந்திகள் பரவத் தொடங்கின. உண்மையில் போசு இறந்துவிட்டார் அரசு வேண்டுமென்றே இந்தச் செய்தியை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று பலரும் பேசிக்கொண்டனர். மெல்ல மெல்ல பரபரப்பு தொற்றிக்கொண்டது. அரசு ஏதோ சதி செய்கிறது என்று பலர் நினைத்தனர்.
1927 மே 15ம் தேதி கல்கத்தாவிலுள்ள அவுட்ராமுக்கு போசு கொண்டு வரப்பட்டார்.
செய்தி அறிந்து ஒட்டு மொத்த கல்கத்தாவும் திரண்டு விட்டது. பகல் சரியாக 11 மணிக்கு அரோண்டா எனும் கப்பல் கல்கத்தா வந்து சேர்ந்தது. அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர் போசின் சகோதரர் சரத் சந்திரபோசு கப்பலுக்குள் நுழைந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு டோலி வெளியே வந்தது உள்ளே எலும்பும் தோலுமாக போசு. போசை மீண்டும் உயிருடன் பார்த்த மகிழ்ச்சி ஒரு புறம், இப்படி குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறாரே என்னும் துக்கம் ஒருபுறம். மறுநாள் போசு விடுதலை செய்யப்பட்டார்.
போசின் விடுதலை குறித்து காந்தி, யங் இந்தியாவில் மே 26-ம் தேதி ஒரு கட்டுரை எழுதினார்.
சுபாசு சந்திர போசை விடுதலை செய்த வங்க அரசிற்கு என் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்ள  விரும்புகிறேன். சுபாசை விடுதலை செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கிளர்ச்சி செய்ததால் அரசு அவரை விடுதலை செய்யவில்லை. கல்கத்தா கார்ப்பரேசன் பிரதம அதிகாரியான இவர் குற்றமற்றவர் என்று அறிந்து அரசு விடுதலை செய்தார்களோ என்றால் அதுவுமில்லை. அவருக்கோ, பொதுமக்களுக்கோ இன்னதென்று தெரியாத ஒரு குற்றத்தைச் செய்ததாக இவ்வளவு கால தண்டனை போதுமென்று நினைத்து இப்போது அரசு விடுதலை செய்ததா என்று கேட்கலாம். அதுவுமில்லை பின் எதற்காக இந்த விடுதலை? புகழ்பெற்ற இந்த கைதியின் இந்த தேகநிலை படுமோசமாக இருப்பதாக அரசு டாக்டர்கள் கருதினார்கள். உயிருக்கே ஆபத்து எனவும் அறிந்தார்கள். அதன் பேரிலேயே வங்க அரசு அவரை விடுதலை செய்திருக்கிறது.
சமூகத்திற்கு சுபாசு ஆபத்தானவர் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆளைக் கொல்ல எண்ணுபவர் அல்லது அனைவரும் அவரைப் பற்றிக் கூறுவது போல உறுதிவாய்ந்த நெஞ்சுடையவர் என்றிருந்தால் இப்பொழுது மட்டும் அவர் நோயாளியாக இருக்கிறார் என்பதால் இந்த ஆபத்துக்களெல்லாம் போய்விட்டனவா? சிறையில் அவர் இறந்துவிடுவாரோ என்று அரசு எதற்குப் பயப்பட வேண்டும்? இந்த மாதிரி மரண ஆபத்து ஏற்பட்டிருக்கும் எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்வது அரசு வழக்கமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர் உடல்நிலை கெட்டிருப்பதற்காக விடுதலை செய்வதாக இருந்தால் அது கெட ஆரம்பித்தபோதே விடுதலை செய்திருக்கலாமே?
ஆகவே வங்க அரசின் இந்தப்போக்கை கோழைத்தனம் மிகுந்தது என்று சொல்ல நான் துணிவு கொள்கிறேன். ஏனென்றால் மரண நிலையில் இருக்கும் ஒருவரை அவரது உற்றார் மத்தியில் கடைசியாகக் கொண்டு வந்து தள்ளிவிட்டுத்தான் குற்றவாளி இல்லையென நடிக்கும் வங்க அரசின் செய்கை கோழைகளின் செய்கையை ஒத்தது.
தாசின் மரணத்திற்குப் பிறகு தலைமையை ஏற்று நடத்தத் தகுதியான நபர் தாசின் மனைவி வசந்தி தேவிதான் என்று முடிவு செய்தார் போசு, அவரிடம் சென்று பேசவும் செய்தார்.
தாசின் இடத்தை இட்டு நிரப்ப உங்களைவிடச் சிறந்த நபர் கிடைக்க முடியாது, தயவு செய்து நீங்கள் இதை மறுக்கக்கூடாது.
வசந்தி தேவி மறுத்தார் ஒருமுறை திடீரென்று போசை அழைத்தார் வசந்தி தேவி.
பேசாமல் நீங்களே தலைமைப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது அவருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததை நான் அறிவேன். அவர் விரும்புவதும் இதுவாகத்தான் இருக்கும்.
உங்கள் மீது நான் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறேன். ஆனால் தயவுசெய்து என்னை இதில் இழுத்து விடாதீர்கள் என்றார் போசு.
உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இல்லையா? என்றார் வசந்தி தேவி.
நான் பல்வேறு சிந்தனைகளை என் மூளையில் போட்டுக் குழம்பிக்கொண்டிருக்கிறேன் என்றார் போசு.
இதில் குழம்ப எதுவும் இல்லை உடனடியாகத் தயாராகுங்கள். தாசின் சிந்தனையும் போசிற்கு அத்துப்படி. அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, அவர் எதை ஆதரிப்பார், எதை எதிர்ப்பார் அத்தனையும் தெரியும். ஆனால் அதை அப்படியே போசு தொடர்ந்தார் என்று சொல்லமுடியாது. அவ்வப்போது வசந்திதேவியிடம் அவர் ஆலோசனைப் பெறுவது வழக்கம். ஆனால் இது நீணட நாட்களுக்குத் தொடரவில்லை. சிறிது சிறிதாக முழுப் பொறுப்புகளும் இவரிடம் வந்து சேர்ந்தன.
போசைப்போலவே வங்காளத்தில் சென் குப்தாவும் ஒரு முக்கிய நபர். இருவரும் இணைந்து செயல்பட்டிருந்தால் இயக்கம் மேலும் வலுப்பெற்றிருக்கும். ஆனால் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. தொட்டதெற்கெல்லாம் கருத்து வேறுபாடுகள். இதனால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நின்றது. அப்போது மாகாண காங்கிரஸ் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலின் நேரம் அந்த செய்தி காந்தியின் காதுக்குச் சென்றது. இப்படி ஒரு கட்சியில் செயல்படும் இருவர் தமக்குள்ளாக அடித்துக் கொண்டால் அதனால் பாதிக்கப்படுவது இருவரும் தான். முக்கியமாக காங்கிரசு கட்சிக்கும் இது நல்லதல்ல என்று காந்தி எடுத்துக் கூறினார்.
முதலில் சுதாரித்துக் கொண்டது சென் குப்தாதான். தாசின் மாணவர்களாகிய நாம் இருவரும் போட்டி போட்டுக்கொள்வது முறையல்ல என்று கூறி தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். ஆனால் போசு இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.கே.வாசு என்பவர் 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். போசை விட 9 வாக்குகள் இவருக்குக் கூடுதலாகக் கிடைத்தன.
அதற்குள் வங்க மாகாணத் தேர்தல் வந்தது, போசு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார், வெற்றியும் பெற்றார். அகில இந்திய காங்கிரசில் போசிற்குக் கிடைத்த முதல் பெரும் வெற்றி இது.

No comments:

Post a Comment