Thursday, November 6, 2014

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 14


subash-14-21938 சனவரி இறுதியில் கல்கத்தா வந்து சேர்ந்தார் போசு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியலில் நேரடியாகப் பங்கேற்க முடிவு எடுத்திருந்தார். இந்தமுறை அவருக்குப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்கத்தா மேயராக இருந்தபோது அவர் ஏற்படுத்திய ஆரோக்கியமான மாற்றங்களை யாரும் மறந்துவிடவில்லை. போசுவிற்குப் பிறகு, அப்படி ஒரு தலைவர் அவர்களுக்குக் கிடைக்கவும் இல்லை. சுறுசுறுப்புடன் தனது பணிகளை ஆரம்பித்தார் போசு. 51வது காங்கிரசு மகாசபை ஹரிபுராவில் கூடுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் வாசிப்பதற்கு ஒரு நீண்ட உரையைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறோம். அவற்றை எவ்வாறு செயல்படுத்தப்போகிறோம் உள்ளிட்ட முக்கிய சங்கதிகள் அனைத்தும் இந்த உரையில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதிகநேரம் பிடிக்கும் வேலை இது. ஒரு குழுவாக அமர்ந்து பேசி விவாதித்து, திட்டமிட்டு ஒவ்வொன்றாக பட்டியலிட்டால் கூட சில நாட்கள் பிடிக்கும் ஆனால் போசுவிற்கு அதற்கெல்லாம் அவகாசம் இல்லை, அவசியமும் இல்லை ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தவர், காங்கிரசு     என்னசெய்ய வேண்டும், காங்கிரசு தலைமை என்ன செய்ய வேண்டும் போன்ற அத்தனை விடயங்களும் அவருக்கு அத்துப்படி.
படுக்கைஅறைக்குச் சென்று கதவைச் சாத்திவிட்டு ஒரு இரவில் பக்கம் பக்கமாக எழுதத்தொடங்கினார். மறுநாள் வீங்கிப்போன முகத்துடன் கதவைத் திறந்தார். உதவியாளர் ஓடிவந்தார். உடனடியாக சரத் சந்திராவிடம் ஒப்படையுங்கள் டைப் செய்து முடிந்தவுடன் நேராக ஹரிபுராவுக்குக் கொண்டு வந்துவிடுங்கள் என்றார் போசு.
உதவியாளர்: நீங்கள் ஒருமுறை பார்க்க வேண்டுமா?
போசு: அவசியமில்லை.
ஹரிபுராவில் போசுவிற்கு அமோகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 51வது மாநாடு என்பதைக் குறிக்கும் வகையில் 51 காளைகளைக் கொண்ட மாபெரும் ரதம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ரதத்தில்தான் போசை அமரவைத்து மேடைக்குக் கொண்டு சென்றனர்.
திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டார் போசு. எத்தனைப்பெரிய கூட்டம் எவ்வளவு உற்சாகம். இந்த சக்தியை மட்டும் சரியான முறையில் ஒன்றுதிரட்ட முடிந்தால் பிரிட்டன் எம்மாத்திரம்.
தனது உரையைத் தொடங்கினார் போசு. மனித குலத்தின் இருப்பை, உள்ளது உள்ளபடி படம் பிடிப்பதாக அமைந்தது அந்த உரை. எத்தனையோ பெரிய பெரிய அரசாங்கங்களும், நாகரீகங்களும் இருந்த இடம் தெரியாமல் சிதறிப்போனதைச் சாட்சியங்களோடு முன்வைத்தார்.
subash-14-1பிரிட்டனின் அசுரசக்திக்குக் காரணம் பல நாடுகளைப் பிரிட்டன் அடிமைப்படுத்தி வைத்திருந்ததுதான் என்று லெனின் கூறியிருப்பதை நினைவுபடுத்தினார். பிரிட்டன் ஒரு மாபெரும் சக்தி, அவர்களை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்னும் பழமைவாதக் கருத்தைத் தகர்த்து எறிந்தார். பிரிட்டன்தான் உலகத்தின் தலைமை என்பது பொய், பல இடங்களில் பிரிட்டன் விழி பிதுங்கி நிற்கிறது. அயர்லாந்தை எடுத்துக்கொள்ளுங்கள், பாலஸ்தீனத்தை எடுத்துக்கொள்ளுங்கள், எகிப்து, ஈராக் இரு நாடுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். இத்தாலியும், ஜப்பானும் பிரிட்டனை மும்முரமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளையும் விட்டுவிடுங்கள். ரசியா ஒன்றே போதும் ரசியா என்ற பேரைக் கேட்டாலே ஏகாதிபத்திய நாடுகள் கலங்கி நிற்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் சுறுசுறுப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. தன் தொண்டையை செருமிக்கொண்டு இறுதி வாக்கியத்தைப் பேசி முடித்தார் போசு. பிரிட்டனை நாம் சிதறடிக்க வேண்டும், பிரிட்டன் பலத்தை வீழ்த்த வேண்டும் அப்போதுதான் இந்தியா விடுவிக்கப்படும். இந்தியா மட்டுமல்ல இந்தியாவைப் போலவே அடிமைப்பட்டிருக்கும் பலநாடுகளுக்கும் அப்போதுதான் விடுதலை கிடைக்கும். காங்கிரசு கட்சி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் இவைதான் என்று பட்டியலிட்டார்.
  1. தன்னார்வலர்களை ஊக்குவிக்க வேண்டும், இவர்களது உதவிகொண்டு மக்கள் சக்தியை ஒன்றுபடுத்த வேண்டும்.
  2. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை நிர்வகிப்பதற்குத் தேவையான பயிற்சிகளை இப்போதே ஆரம்பித்துவிட வேண்டும். பொறுப்புமிக்க இளைஞர்களை இப்போதே கண்டுபிடித்து அவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளித்து தலைமைப் பண்புகளை வளர்த்திட வேண்டும்.
  3. தொழிற்சங்கங்களும், விவசாயிகள் நல அமைப்புகளும் உருவாக்க வேண்டும்.
  4. கட்சிக்குள் உள்ள இடதுசாரி சிந்தனைவாதிகளை ஒரே அணியில் குவிக்க வேண்டும். அவர்கள் சோசலிசப் பாதையை ஏற்க வேண்டும்.
  5. பிரத்யேக வெளியுறவுத் துறையை அமைக்க வேண்டும்.
  6. பிற நாடுகளுடன் சுமூகமான தொடர்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, சிலோன், சியாம், மலாய் பகுதிகள்.
போசு பேசி முடித்ததும் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அனைவருக்கும் வண்டி வண்டியாகச் சந்தேகங்கள்.
கேள்வி: பிரிட்டனை நிச்சயம் நாம் வீழ்த்திவிடுவோமா?
பதில்: நிச்சயமாக நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களை விரட்டப்போகிறோம்.
கேள்வி: சோசலிசம் பற்றி பேசினீர்கள் அது நமக்குத் தேவையா?
பதில்: ஏழ்மை ஒழிய வேண்டும், படிப்பறிவு பெருக வேண்டும் என்றால் சோசலிசம் தேவை, சோசலிசம் இல்லாமல் சமூக பொருளாதார, அறிவியல் வளர்ச்சி இல்லை.
கேள்வி: காங்கிரசின் உடனடி நடவடிக்கை என்னவாக இருக்கும்?
பதில்: மக்கள் அனைவரையும் தயார்படுத்துவது.
கேள்வி: எதற்குத் தயார்படுத்துவது?
பதில்: மிகப்பெரிய தியாகங்களுக்கு.
கேள்வி: காங்கிரசின் வழிமுறைகள் எப்படி இருக்கும்?
போசிற்கு சிரிப்பு வந்தது.
(எல்லோரும் தீவிரவாதிகள் என்று சொல்கிறார்களே, இவரிடம் கட்சி போனால் பிறகு இவர் என்ன செய்வாரோ என்பதுதான் அந்தக் கேள்விக்குப்பின்னால் ஒளிந்திருந்த பயம்.)
பதில்: ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம், அகிம்சை எல்லா முறைகளையும் காங்கிரசு பின்பற்றும்.
கேள்வி: அப்படியென்றால் அகிம்சை வழிப்போராட்டம் மட்டும்தான் இருக்கும். இல்லையா?
பதில்: இருக்கலாம்?
காங்கிரசு தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மறு நிமிடமே தனது பணிகளை ஆரம்பித்தார் போசு.
இந்தியாவின் சந்துபொந்துகள் அனைத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். திட்டக்குழுக்களைக் கூட்டினார், நிறைய விவாதித்தார். இந்தியாவின் உடனடிப் பிரச்சனைகள் என்னென்ன?, உடனடி தேவைகள் என்னென்ன? என்று பட்டியலிட்டார். இந்து-முஸ்லீம் இருவருக்குமிடையே நல்லுறவு மலர என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். ஜின்னாவைப் பலமுறை சந்தித்துப் பேசினார். அப்போது முஸ்லீம் லீகின் தலைவராக ஜின்னா இருந்தார். அவர் மூலமாக ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்தார், ஆனால் பயனில்லை.
subash-14-41938- மத்தியில் தேசிய திட்ட மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டுக்குத் தலைமை வகிக்குமாறு நேருவிடம் கேட்டுக்கொண்டார். முக்கிய அறிவியல் வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். பல அரசியல் தலைவர்களுக்குக் கூட போசு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. எதற்காக இந்த மாநாடு? அறிவியல் ஆட்களும், பொருளாதார ஆட்களும் என்ன செய்யப்போகிறார்கள். அரசியலுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கப்போகிறோம் அதற்கு இவர்களது உதவி நமக்குத் தேவை. இன்னமும் பிரிட்டன் நம்மைவிட்டு அகலவில்லையே, அதற்குள் எதற்கு இத்தனை முன்னேற்பாட்டுத் திட்டங்கள். இதுவே தாமதம் என்று நான் நினைக்கிறேன்.
முதல் மூன்று, நான்கு மாதங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பிறகு ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் ஆகிற காரியம் இல்லை ஐயா?. இருக்கிற காலத்தை நல்லபடியாகக் கழித்துவிட்டுப் போய்விடுவோம். பிரிட்டனே பார்த்து ஏதாவது சமரசம் செய்துகொண்டால்தான் உண்டு. இவரது பிரச்சனை என்ன தெரியமா? இவர் நிறைய கனவு காண்பவராக இருக்கிறார், கனவு காண்பது சுலபமானது, ஆனால் அதை நிறைவேற்ற முடியாதே.
பல மூத்த தலைவர்கள் இப்படி ஏனோதானோ என்று இருப்பதைப் பார்க்கும்போது கோபம் வந்தது போசுவிற்கு. அவர்களுடைய புலம்பல்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் தான் விரும்பிய பாதையில் சென்று கொண்டிருந்தார் போசு.
ஒருமுறை அவரது நண்பர் திலீப் ராயுடன் காங்கிரசு கட்சியுடன் ஏற்பட்ட உளைச்சலை விவாதித்துக் கொண்டிருந்தார். சுபாசு எதற்கு உனக்கு இத்தனை கஷ்டம், பேசாமல் இந்த அரசியல் களத்தை விட்டு வெளியேறிவிடலாமே? உனக்குச் சிறிது நிம்மதியாவது கிடைக்கும்.
எனக்கு நிம்மதி கிடைக்கும் இந்தியாவுக்கு?

No comments:

Post a Comment