காங்கிரசு கட்சியில் போசுக்கு இருந்த புகழை குறைக்கும் ஒரு திட்டத்தினை ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அதற்கு பிரிட்டிசு பத்திரிகைகளும் சூழ்ச்சிக்கு துணை நின்றதினால் காங்கிரசு தலைவர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமையை உருவாக்கி, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றது. காரியக்கமிட்டியில் உள்ள காந்திஜியின் ஆதரவாளர்களான வல்லபாய்பட்டேல், ராஜாஜி, ஜம்னாலால் பஜாஜ், ஜே.பி.கிருபளானி, மௌலானா அபுல்கலாம் ஆசாத் முதியவர்களுக்கு சுபாசு சந்திரபோசின் தீவிரவாதத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று மக்கள் மத்தியில் பரவச்செய்தது. பின் ஆங்கிலேயர்களின் அரசியல் திட்டத்தினை ஏற்க கூடாது என்று ஹரிபுரா காங்கிரசு மகாசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் சில காங்கிரசு தலைவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் ஆங்கிலேயர்கள் அந்த அரசியல் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்தால் காங்கிரசு அதனை ஏற்றுக் கொள்ளும் என்றும் பிரிட்டிசு ஊடகங்கள் செய்திகளையும் அறிக்கைகளும் வெளியிட்டன.
போசு கீழ்காணும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
காங்கிரசு தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அரசியல் திட்டத்தைப் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும், செய்திகள் மான்செஸ்டர் கார்டியன் என்ற பத்திரிகையில் நான் பார்த்தேன். இந்த செய்திகளுக்கு திட்டவட்டமான ஒரு அத்தாட்சி எதுவும் கிடைக்காத வரைக்கும் நாம் அதை நம்பக்கூடாது, கவலைப்படவும் கூடாது. ஆனால் நாட்டுமக்களும், காங்கிரசு தொண்டர்களும் இது போன்ற செய்திகளை பார்த்துக் குழப்பமடையக் கூடாது என்பதற்காகவே இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். காங்கிரசு சில மாகாணங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளதால் ஆங்கிலேய அரசுடன் சுமூகமாக இணைந்து செயல்படும் என்று யாரும் எண்ண வேண்டாம். காங்கிரசில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநில சுயாட்சிக்கு எதிரான பிரிட்டிசு அரசியல் திட்டத்தை யாரும் புகுத்த முடியாது. அப்படி முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடியும். ஒருவேலை அந்த முயற்சி வெற்றி பெற்றால் காங்கிரசு பிளவுபட நேரிடும்.
இந்திய வரலாற்றில் நெருக்கடிமிக்க இந்த நேரத்தில் காங்கிரசு கட்சியிலோ அல்லது அதைச் சார்ந்த மக்களிடத்திலோ சிறிதளவு பலவீனத்தைக் காட்டினாலும் இந்திய சுதந்திரத்திற்கு அது மிகப்பெரிய துரோகமாகக் கருதப்படும். தற்பொழுது நடைபெறும் சூழலில், நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டுப் பேசினால் பிரிட்டிசு அரசாங்கம் நமது சுதந்திரத்தினைத் தடுத்து நிறுத்த முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் கனவிலும் ஏற்கமுடியாத ஆங்கிலேயர்களின் அரசியல் திட்டம் யாரோ ஒரு காங்கிரசு தலைவரின் சமரச மனப்பான்மையால் அல்லது முயற்சியினால் வெற்றி பெற்றால், நான் காங்கிரசின் தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறுவேன். அப்போதுதான் என்னால் எந்த சமரசத்துக்கும் இடமின்றி தேசநலன் கருதி போராட முடியும். போசின் இந்த அறிக்கை நாடெங்கும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது.
காங்கிரசின் தலைவர் பதவியில் உள்ள ஒருவர் வதந்திகளின் அடிப்படையில் இவ்வளவு கடுமையான அறிக்கையை வெளியிடுவதா என்று சில காங்கிரசு தலைவர்கள், காந்தியின் ஆதரவாளர்கள் அறிக்கையை வெளியிட்டனர். அவர்களில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கியமானவர். இதனைத் தொடர்ந்து 1938 சூலை 15ம் தேதி போசு மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். நான் சூலை 9ம் தேதி வெளியிட்ட அறிக்கை பொதுவான அறிக்கையே தவிர பத்திரிகையில் விவாதத்தில் ஈடுபடுவதற்காக அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். காங்கிரசுக் காரர்களையும் நாட்டின் மக்களையும் குழப்பக் கூடிய சூழ்ச்சி செய்து செய்திகளை ஆங்கிலேயர்கள் வெளியிடும் பொழுது, அதனை எதிர்த்து மறுத்து அறிக்கை நான் விடாவிட்டால் தலைவர் கடமையிலிருந்து தவறியவனாவேன். அறிக்கையில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினேன் என்றால் அதற்குக் காரணம் ஆங்கிலேயர்களின் அரசியல் திட்டத்தினை நான் கடுமையாக எதிர்ப்பதினால் ஆகும்.
ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு தரும் செயல்களில் ஈடுபட்டு, காங்கிரசுக்காரர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள் என்று நம்புகிறேன். எழுச்சி கொண்ட இந்தியாவில் ஒன்றுபட்ட தேசிய கோரிக்கையை இன்னும் நீண்ட காலத்திற்கு பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தால் புறக்கணிக்க முடியாது என்ற நம்பிக்கையைப் பெற்று தங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை தவிர்த்து உறுதியோடு நிற்கும்படி அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறே அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்பார்கள் என்றும் நம்புகிறேன். ஆனால் தலைவர் போசின் இந்த இரண்டாவது அறிக்கைக்கு பின்னும் காந்தியின் ஆதரவாளர்கள் போசை குறைகூறுவதை நிறுத்தவில்லை.
தேசமக்களும் குறிப்பாக இளைஞர்கள் இளம் தலைமுறையினர், இளமையும் எழுச்சியும் கொண்டவர்கள் தலைவர் போசை ஆதரித்தனர். வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், ஒரிஸாவிலும் குறிப்பாக தென் மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான ஆதரவாளர்கள் போசை உறுதியாக ஆதரித்து நின்றனர். காங்கிரசு சில மாகாணங்களில் அரசாக செயல்பட்டதினால் சில பிரச்சினைகளும் தலைத்தூக்கின. இந்தியாவுக்கு சுதந்திரம் அடைந்தது போன்று ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த ஆரம்பித்தனர். அதில் முக்கியமான ஒன்று மொழிவாரிய மாநிலக்கோரிக்கையும் ஒன்று. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் கவனிக்கப்படவேண்டிய கோரிக்கையை மக்கள் காங்கிரசு அமைச்சரவை பெற்றதால் கோரினர். வடக்கே பெரும்பாலனோர் இந்தி பேசியதனால் அங்கு மொழிவாரிய மாநில கோரிக்கை எழவில்லை. தென் பகுதியில் வெவ்வேறு மொழிபேசும் மக்கள் இருந்ததினால் இங்கு தான் மொழிவாரி மாநில கோரிக்கை அதிகமாக தலைதூக்க ஆரம்பித்தது. சட்ட சபையிலும் குழப்பம் ஏற்பட்டது இதனால் இந்த மொழிவாரிப் பிரச்சினையை சரிசெய்யும் பொருட்டு காங்கிரசின் தலைவர் போசு காங்கிரசு காரியக் கமிட்டியைக் கூட்டி பிற்காலத்தில் மொழிவாரிய மாநிலங்கள் அமைப்பது குறித்து காங்கிரசு திட்டம் வகுக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றி சகல மொழியினருக்கும் நம்பிக்கையூட்டினார்.
இதுபோன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்ள முற்போக்கு சிந்தனையுடன் காங்கிரசில் அன்று இருந்த தலைவர்கள் செயல்படவில்லை என்றே எண்ண வேண்டும். ஏனெனில் மொழிவாரி மாநில பிரச்சனைகள் தோன்றிய உடன் அதனைத் தடுப்பதற்கு என்ன தேவை என்று சிந்தித்து செயல்பட்டவர் போசு. 1920 லிருந்து ஆரம்பித்து வந்த இந்த மொழிவாரி மக்கள் பிரச்சினைக்கு அப்போது இருந்த காங்கிரசு கட்சியினால் தீர்வு காண இயலவில்லை. இப்பிரச்சினையை அறிந்த போசு, காங்கிரசு காரியகமிட்டியில் அது குறித்து சிந்தித்து தீர்மானம் ஒன்றை செயல்படுத்தினார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவான செயல்திட்டம்தான் இந்தியாவில் நேருவின் அரசாங்கத்தில் JVP குழுவாக அமைக்கப்பட்டது. அது J ஜவஹர்லால் நேரு, V வல்லபாய் பட்டேல், P பட்டாபி சீத்தாராமய்யா இக்குழுவின் மூலம் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது.
No comments:
Post a Comment