Wednesday, November 5, 2014

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 3

பிரசிடென்சி கல்லூரியில் சி.எப்.ஒட்டன் என்பவர் பேராசிரியராக இருந்தார். இவருக்கு இந்தியர்கள் என்றால் பிடிப்பதில்லை. வெள்ளைத்தோல் கொண்டவர்களே உயர்ந்தவர்கள் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். இந்தியர்கள் சிறு தவறு செய்தாலும் கடுமையான தண்டனை தருபவர். அப்படித்தான் ஒருமுறை ஒரு மாணவர் சிறு தவறு செய்ததற்கு அந்த மாணவனின் கன்னத்தில் அறைந்துவிட்டார். எதிரில் இருந்த போசு இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இத்தனை மிருகத்தனமாக நடந்துகொண்ட ஒட்டன் மீது கோபம் கோபமாக வந்தது. இதை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டார் போசு.
அன்றைய வகுப்புகள் நிறைவடைந்ததும் போசு தனது சக மாணவர்களை ஒன்றுதிரட்டினார். பேராசிரியர் ஒட்டனுக்கு பாடம் கற்பிக்க அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மறுநாள் வகுப்பறையில் ஒரு மாணவனைக்கூட காணவில்லை. வகுப்பிற்குச் சென்ற ஆசிரியர்கள் குழம்பிப் போய் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினார்கள். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை, இதுவரை மாணவர்கள் இப்படி நடந்துகொண்டதே இல்லை.
உடனடியாக மாணவர்களை அழைத்துப் பேசினார் ஏன் யாரும் வகுப்பறைக்கு வரவில்லை?.
ஒட்டன் போன்ற ஆசிரியர்கள் இருக்கும் வரை நாங்கள் யாரும் வகுப்பறைக்குள் வரமாட்டோம் என்று தெரிவித்தனர். ஒட்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரது செயல் கண்டிக்கப்பட்டது.
போசின் போராட்ட குணத்திற்குக்    கிடைத்த முதல் வெற்றி இது.
மாணவர்கள் போசை புதிதாக பார்த்தார்கள். எப்படி இவருக்கு இத்தனை தைரியம் வந்தது என்று அதிசயித்தனர்.
மாணவர் சங்கம் ஏற்பட்டபோது போசையே தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.
ஒரு பக்கம் ஆன்மீகத் தேடல், மறுபக்கம் தனது சமூகம் குறித்த விழிப்புணர்வு இரண்டும் சம அளவில் கலந்திருந்தன போசிடம்.
கல்கத்தாவில் டிராம் வண்டிகள் பிரபலம். ஒருமுறை போசு டிராம் வண்டியில் பயணித்த போது வெள்ளைக்காரர்கள் செய்த செயல்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, எதிர் இருக்கையில் காலை நீட்டி உட்கார்ந்திருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு அருகிலேயே பல இந்தியர்கள் நிற்கக்கூட இடமில்லாமல் சிரமப்பட்டு நின்று கொண்டிருந்தனர்.
இந்தியர்கள் என்றால் இத்தனை இளக்காரமா? கோபம் தலைக்கேறியது போசிற்கு.
ஒட்டன் மீண்டும் போசை சீண்டினார்.
பாடம் எடுத்துக்கொண்டு இருக்கும் பொழுது இந்தியர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று இந்தியர்கள் மீதான தனது வெறுப்பை அவர் மாணவர்கள் மத்தியில் கக்கினார்.
இந்தியர்கள் அடிமைகளாக இருப்பதற்குத்தான் லாயக்கு, அப்படி இருப்பதைத் தவிர அவர்களால் வேறு எப்படியும் இருக்க முடியாது.
போசு பல்லைக்கடித்துக் கொண்டு பொறுமை காத்தார். அன்று மாலை ஒட்டன் தாக்கப்பட்டார். ஓர் ஆசிரியரை அதுவும் வெள்ளைக்காரரை மாணவர்கள் அடித்து உதைத்த செய்தி தீ போலப் பரவியது. இதைச் செய்தது போசாகத்தான் இருக்கமுடியும் என்று தலைமை ஆசிரியர் திடமாக நம்பினார்.
போசு மற்றும் அவரது நண்பர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந்தக் கல்லூரியிலேயே அதிக தொந்தரவு கொடுப்பது நீதான் என்றார் தலைமையாசிரியர்.
மிக்க நன்றி என்றார் போசு.
இனி நீ எந்தக் கல்லூரியிலும் இரண்டு வருடங்கள் சேரமுடியாது.
மிக்க நன்றி.
போசு கல்லூரியிலிருந்து வெளியேறிய அதே சமயம் கல்கத்தாவின் முகம் மாறிக்கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக பல மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களுள் பலர் பிரசிடென்சி கல்லூரியைச் சேர்ந்தவர்கள். கல்கத்தா நிலவரம் சானகிநாத்தைச் சென்றடைந்தது. உடனடியாக போசு கட்டாக் வரவழைக்கப்பட்டார்.
கட்டாக் வந்து சேர்ந்ததும் தன் தாய்தந்தையரிடம் நிலைமையை விளக்கினார் போசு. ஒட்டன் தாக்கப்பட்டதற்கான காரணத்தையும் விளக்கினார்.
நீ செய்ததைக் குறித்து வருத்தப்படுகிறாயா? என்றார் சானகிநாத்.
சிறிதும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் சரியான ஒரு காரணத்திற்காக நான் போராடியிருக்கிறேன் என்பதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சியே.
சுபாசு, உன்னைப் பார்ப்பதற்கு எனக்குப் பெருமையாக இருக்கிறது என்றார் ஜானகிநாத் புன்னகைத்தபடி.
சுகாட்டிசு தேவாலய கல்லூரியின் தலைமை ஆசிரியரை சென்று சந்தித்தார் போசு. தத்துவம் பயிலத் தனக்கு மிகுந்த விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார்.
போசை அவருக்கு உடனே பிடித்துப்போனது. ஜூலை 1917-ல் போசு கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1919ல் ஆண்டு பி.ஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆனால் டிராம் வண்டியில் நடைபெற்ற சம்பவங்கள் போசைக் கொதிக்க வைத்தது. இந்தியாவை வெள்ளைக்காரர்கள் ஆள்கிறார்கள் என்கிற அளவில்தான் போசு தெரிந்து வைத்திருந்தார். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவையே அவர்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்கள் என்னும் உண்மையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது பார்வையைக் கூராக்கிக் கொண்டு நிறைய வாசிக்கத் தொடங்கினார் ஒன்று தெளிவாகப் புரிந்தது. பிரிட்டன் இந்தியாவை ஆக்கிரமிக்கவில்லை, மொத்தமாகக் கொள்ளையடித்து சுரண்டிக் கொண்டிருந்தது. பள்ளிகளில், சாலைகளில், வீடுகளில், டிராம்களில், தெரு ஓரங்களில் அனைத்து இடங்களிலும் அவர்கள் பரவியிருக்கிறார்கள்.
சானகிநாத் மகிழ்ச்சியில் இருந்தார். எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் போசு பி.ஏ முடித்துவிட்டார். இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு எப்படியாவது ஐ.சி.எஸ்   (ICS) படிப்பிலும் தேறிவிட்டால் பிறகு சுபாசைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய      அவசியமே இருக்காது. ICS என்பது இன்றைய IAS பதவி. ஐ.சி.எஸ் ஒரு உயர்ந்த பதவி அதில் கிடைக்கும் மரியாதையே தனி.
போசை அழைத்து கேட்டார் சானகிநாத்,
சுபாசு நீ ஐ.சி.எஸ் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம் உனக்கு சம்மதமா?
சம்மதம்தான் என்று தலையை அசைத்தார் போசு. அப்படியானால் நீ உடனடியாக லண்டன் செல்ல வேண்டும்.
லண்டனா? இப்போதேவா? என்றார் போசு.
நாளை வரை நேரம் இருக்கிறது யோசி என்றார் தந்தை.
எம்.ஏ உளவியல் படிக்க வேண்டும் என்பது போசின் கனவு. இந்நிலையில் லண்டன் போக முடியுமா? என்று தன் தந்தை கேட்டதும் அவருக்குத் தயக்கம். ஐ.சி.எஸ் படிப்பதில் உள்ள சிரமங்களையும் அவர் அறிவார். சிரமம் என்றால் வசிப்பதில் மட்டுமல்ல, முதலில் லண்டன் பல்கலைக்கழகத்தில் பிரவேசம் கிடைக்கவேண்டும், இன்னும் எட்டு மாதங்களே இருக்கின்றன. அதற்குள் நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்துகொள்ள வேண்டும். பெரிய சவால்தான் சந்தேகமில்லை.
இது தவிர வேறு ஒரு குழப்பமும் இருந்தது. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் நாடு பிரிட்டன். இதை நேரடியாகக் கண்டுகொண்டவர் போசு. அப்படியிருக்க ஐ.சி.எஸ் படிப்பதற்காக லண்டன் போவது ஒரு முரண்பாடுதானே!
போகலாமா வேண்டாமா? குழப்பத்தில் இருந்த போசை தேற்றி, அவரை சம்மதிக்க வைத்தவர் சரத்சந்திரா. 1919 இறுதியில் போசு லண்டனுக்குப் பயணமானார்.

No comments:

Post a Comment