சித்தரஞ்சன் தாசு விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்ததும் ஒரு புதிய திட்டம் தீட்டினார். பிரிட்டிசு அதிகார அமைப்பில் சட்டசபை தான் பிரதானமான அங்கம் எனவே சட்டசபையை உடனயாகக் கைப்பற்றியாக வேண்டும். சர்க்காரை (அரசாங்கத்தை) எதிர்க்க இதை விட சிறந்த வழிமுறை வேறு இருப்பதாகத் தெரியவில்லை.
எதிர்பார்த்தபடியே காங்கிரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
சிந்திக்காமல் அவசரப்படுகிறீர்கள், அதிரடியாக இப்படியெல்லாம் திட்டமிடக்கூடாது என்றது காங்கிரசு.
சட்டசபைகளைக் கைப்பற்றுவது அத்தியாவசியமானது அவ்வாறு செய்யாவிட்டால் தன்னாச்சி அமையாது என்றார் தாசு.
சட்டசபைக்குள் நாம் சென்றுவிட்டால் பிறகு பிரிட்டிசு அரசை எதிர்க்க முடியாமல் போய்விடும் என்றது காங்கிரசு.
காந்தியின் வார்த்தைகளை வேதவாக்காக ஏற்றுச் செயல்பட்டுவந்தது காங்கிரசு. ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குங்கள் என்று காந்தி சொன்னால் தொடங்கினார்கள், ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறேன் என்று அவர் சொன்னால் இவர்களும் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார்கள். காந்தி எடுக்கும் முடிவுகள் அத்தனையும் காங்கிரசு எடுக்கும் முடிவுகள்தான்.
வாக்குவாதம் முற்றி காந்தி ஆதரவாளர்களுக்கும், தாசு ஆதரவாளர்களுக்கும் இடையே இடைவெளி விழுந்தது. ஒரு கட்டத்தில் இனியும் காங்கிரசோடு ஒத்துப்போவது இயலாது என்று சுயராச்சியக் கட்சி என்னும் பெயரில் ஒரு புதிய அமைப்பைத் தொடங்கினார் தாசு. பிரசாரத்தையும் சுடச்சுட முடுக்கி விட்டார். ஃபார்வேர்டு(Forward) எனும் ஆங்கில தினசரிப் பத்திரிக்கையைத் தொடங்கினார். இதற்கு ஆசிரியராக யாரைப் போடலாம் என்று ஒரு விநாடி கூட சிந்திக்கவில்லை தாசு.
புதிய பதவி, புதிய பொறுப்புகள் போசு ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தார். லண்டனிலேயே ஐ.சி.எஸ். (I.C.S) அதிகாரியாகப் பொறுப்பேற்று கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?. கை நிறைய சம்பளம் கிடைத்திருக்கும். எல்லாரும் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்ப்பார்கள், மரியாதை கிடைக்கும், மதிப்பு கூடும், ஆனால் அடாவடி அரசாங்கத்திடம் தானே கைகட்டிப் பணிவிடை செய்ய வேண்டியிருக்கும்?.
சுயராச்சியப் போராட்டத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டது தன் வாழ்நாளில் எடுத்த மிகச்சிறந்த முடிவு என்று ஆனந்தத்துடன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் போசு.
மத்திய சட்டசபை மற்றும் மாகாண சபைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. தினசரி பத்திரிகை தயாரிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். சுயராச்சியக் கட்சி தொடங்கப்பட்டது. ஏன், அதன் நோக்கம் என்ன, காங்கிரசுக்கும் சுயராச்சியக் கட்சிக்கும் என்ன வேறுபாடு?, இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா?, சுயராச்சிய கட்சி வெற்றி பெற்றால் அவர்கள் மக்களுக்காக என்ன செய்வார்கள்?, அத்தனைக் கேள்விகளுக்கும் ஃபார்வேர்ட் (Forward) பத்திரிகையில் விடைகள் இருந்தன.
எதிர்பார்த்தபடியே, தேர்தலில் சுயராச்சியக் கட்சி வெற்றி பெற்றது. கல்கத்தா மாநகராட்சி தேர்தலிலும், சித்தரஞ்சன் தாசே வெற்றி பெற்றார். போசின் முழுமையான ஒத்துழைப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்த வெற்றி சாத்தியமில்லை என்பது தாசுக்குத் தெரியும். போசை தக்க முறையில் கௌரவப்படுத்த விரும்பினார் அவர்.
கல்கத்தா நகராட்சித் தலைவராக (மேயர்) போசு நியமிக்கப்பட்ட போது சுயராச்சியக் கட்சிக்குள் பலத்த எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் தோன்றின.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டனர். முதலில் கல்லூரித் தலைவர், பிறகு பத்திரிகை ஆசிரியர், இப்போது இந்தப் பதவியா? முந்தைய நாள் வந்து சேர்ந்த ஒரு நபரை ஏன் இந்த அளவுக்கு தாசு நம்பவேண்டும்?.
என்னதான் ஐ.சி.எஸ்(I.C.S.) படித்திருந்தாலும், இத்தனைப் பெரிய பொறுப்பை அவருக்கு வழங்கியதில் துளி நியாயமும் இல்லை.
படித்திருந்தால் போதாது அனுபவம் என்று ஒன்று இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்கிற செயல் கிடையாது. இவர் என்னதான் செய்யப்போகிறார் என்று பார்ப்போமே!.
தான் எடுத்த முடிவில் தாசு தெளிவாகவே இருந்தார். எந்தவொரு சச்சரவையும் அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இந்தப் பதவிக்கு போசை விடச் சிறந்த நபர் கிடைக்க வாய்ப்பில்லை என்று அவருக்குத் தெரிந்திருந்தது.
27 வயதே ஆன போசு அத்தனைத் தடைகளையும் தாண்டி தலைவர்(மேயர்) பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பதவி கைக்கு வந்ததும் போசு மேற்கொண்ட முதல் நடவடிக்கை அவரது எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்தது. தனக்குச் சம்பளமாகத் தரப்பட்ட 3000 ரூபாயை 1500 ரூபாயாகக் குறைக்கச் சொல்லி போசு உத்தரவிட்டார்.
போசுக்கு இது முதல் முக்கியப்பதவி. அடிமனதில் தேங்கிக் கிடந்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றிடத் துடித்தார். கல்வி, சுகாதாரம் எதுவொன்றையும் விட்டுவைக்கக்கூடாது என்று வரிந்து கட்டிக்கொண்டார்.
மாநகராட்சி பணியாளர்களை ஒன்று கூட்டினார். அந்நிய அரசை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் நீங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறீர்கள் அல்லவா?
ஆமாம் இருக்கிறோம் என்றது கூட்டம்.
ஒரே நாளில் இது நிகழ்ந்துவிடாது கிடைக்கும் வாய்ப்புகளை அவ்வப்போது நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் முதல்கட்டமாக நான் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் நீங்கள் அனைவரும் சம்மதிப்பீர்களா?
கூட்டம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தது.
நாம் முதலில் மனதளவில் இந்தியக் குடிமகன்களாக மாற வேண்டியது அவசியம். நம் வாழ்வில் நச்சு போல் கலந்துள்ள ஆங்கிலேயப் பழக்கவழக்கங்களை நாம் உடனடியாகக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்.
உண்மைதான்!
நாளை முதல் உங்கள் அனைவரது சீருடைகளும் மாறப்போகிறது. இனி யாரும் அரசு உடுப்புகளை அணிய வேண்டாம், இன்றே உங்கள் அனைவருக்கும் கதர் ஆடைகள் அளிக்க உத்தரவிட்டுள்ளேன், நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒட்டுமொத்த மாநகராட்சி பணியாளர்களும் கதர்ஆடை அணிய ஆரம்பித்தனர். உயர் அதிகாரிகள் முதல் அடிமட்டப்பணியாளர்கள் வரை அத்தனைபேரும் கச்சிதமாகக் கதர் அணிந்து அலுவலகம் வந்தனர்.
அடுத்த அடியை எடுத்துவைத்தார் போசு. புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்குத் தேசியப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார். வெள்ளைக்கார துரைமார்களின் பெயர்களை அழித்து ஒழித்தார்.
வெள்ளையர்கள் இதுவரை அளித்து வந்த பாராட்டுப் பதக்கங்களையும் நன்மதிப்புச் சான்றிதழ்களையும் உடனடியாக நிறுத்தினார். ஆசைப்பட்ட அத்தனை மாற்றங்களையும் உடனுக்குடன் ஏற்படுத்தத் துடித்தார் போசு.
சின்னப்பயல் இன்னும் எத்தனை காலத்துக்கு இதையெல்லாம் செய்வானோ என்று ஏளனமாகப் பார்த்த அனைவரும் அதிசயத்துடன் வாய் பிளந்து நின்றனர். மேயர் பதவி வந்தால் இத்தனை நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று கல்கத்தாவாசிகள் முதல் முறையாகப் புரிந்துகொண்டது அன்றுதான். போசுக்கு முன்னால் பதவி வகித்த அத்தனை பேரும் அரசாங்கம் கூறியதை மட்டுமே செய்தனர். அரசாங்கம் மகிழ வேண்டும் என்பதில்தான் அவர்களின் குறியாக செயல்பாடாக இருந்தது.
போசின் அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு கலவரமடைந்தது அரசு. இவரை இப்படியே விட்டுவைத்தால் இன்னமும் என்னவெல்லாம் செய்வார் என்று நினைத்துப் பார்க்கவே அவர்களுக்கு அச்சமாக இருந்தது.
1924 அக்டோபர் 25-ம் தேதி போசு வீட்டுக் கதவை கல்கத்தா காவல் ஆணையர் (Police commissioner) தட்டினார். அது அதிகாலை நேரம் போசு இன்னமும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவேயில்லை.
என்ன விடயம்? இத்தனை அதிகாலையில் வந்திருக்கிறீர்களே?
காவல் ஆணையர் மெல்லிய குரலில் சொன்னார்.
உங்களைக் கைது செய்யப்போகிறோம்!.
போசுக்கு ஒன்றுமே புரியவில்லை.
எதற்காக இந்தக் கைது என்று தெரிந்துகொள்ளலாமா?
இதோ இதைப் பாருங்கள்!
தன்னிடம் இருந்த ஆணையை போசிடம் காட்டினார்.
ரெகுலேசன் III- 1818, பெங்கால் குற்றவாளி சட்டத்தின்படி இன்னாரைக் கைது செய்ய உத்தரவிடுறோம் என்றது. அந்த ஆணை புரியாத புதுசட்டமாக இருந்தது.
1. ரகசியமாக ஆயுதங்களைத் தருவிக்கிறார்.
2. வெடிமருந்துகளைத் தயாரிக்கிறார்.
3. காவல் அதிகாரிகளைக் கொல்லத் திட்டம் தீட்டி வருகிறார்.
4. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்காகத் தனி அடியாள்படை வைத்திருக்கிறார்.
அப்போதுதான் போசுக்கு அந்த சூழ்ச்சி புரிந்தது. இரவோடு இரவாக வைசிராய் ஓர் அவசரச்சட்டத்தைப் பிறப்பித்திருந்தார் அதாவது, யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம்,. விசாரணை தேவையில்லை, காரணம் தேவையில்லை சட்டத்தை பிரயோகித்துப் பார்க்க தன்மீதுதான் முதல்வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டார் போசு.
கைது படலம் தொடர்ந்தது. வங்க அரசு கொத்துக் கொத்தாக பல இளைஞர்களைக் கைது செய்து போசு ஆதரவாளர்கள் என்று அவர்களுக்குப் பெயர் வைத்தது.
சட்டசபை உறுப்பினர்களைக் கூட அரசு விட்டுவைக்கவில்லை.
ஒரு விடயம் தெளிவாகத் தெரிந்தது போசுக்கு, தன்னைக் கண்டு அரசு அச்சம் அடைகிறது என்று புன்னகைத்துக்கொண்டார்.
போசு கைது செய்யப்பட்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சித்தரஞ்சன் தாசு தன்னையும் அரசாங்கம் கைது செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநகராட்சி கூட்டத்தில் உணர்ச்சிப் பொங்கப் பேசினார்.
தேசபக்தி ஒரு குற்றம் என்றால் நானும் ஒரு குற்றவாளிதான் நானும் இதே குற்றத்தைத்தான் செய்திருக்கிறேன் என்னையும் கைது செய்யுங்கள் என்றார்.
No comments:
Post a Comment