Wednesday, November 5, 2014

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 5


சூலை 26, 1921 அன்று பம்பாய் துறைமுகத்திற்கு வந்து இறங்கிய போசு முதல் வேலையாகக் காந்தியை சந்தித்தார்.
தன் முன்னால் அடக்கமாகக் கைகளைக் கட்டி நின்று கொண்டு இருந்த அந்த இளைஞனை உற்றுப் பார்த்தார் காந்தி. ஐ.சி.எஸ்.(I.C.S) முடித்துவிட்டால் கவர்னர் ஜெனரலாக ஆகலாம், உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றலாம், அளவற்ற அதிகாரம் குவிந்துகிடக்கும், இந்திய அமைச்சர்களைக் கூட இவர்கள் மதிக்க வேண்டாம் அத்தனைப் பெரிய பதவியை உதறித் தள்ளிவிட்டு வந்திருக்கிறார் இவர்.
மெதுவாகப் பேசத் தொடங்கினார்.
காந்தி: உண்மையிலேயே தேச சேவையில் உங்களுக்கு அத்தனை நாட்டமா?
போசு: ஆமாம்.
காந்தி: இந்த வேகம் என்றும் நிலைத்து இருக்குமா?
போசு: நிச்சயம்.
காந்தி: அப்படியானால் நீங்கள் உடனடியாகக் கல்கத்தா சென்று மாகாணத் தலைவரான சி.ஆர்.தாசை சந்திக்கவும்.
காந்திக்கு அடுத்து இவர்தான்    என்று சொல்லும் அளவிற்குப் பொது வாழ்க்கையில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் சி.ஆர்.தாசு.
இவர் 1906ல் காங்கிரசில் இணைந்தார். அந்நியப் பொருட்களை நிராகரிப்பது, சுதேசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையைக் காந்திக்கு முன்னரே முன்வைத்தவர் இவர்தான் தேசபந்து என செல்லமாக மக்களால் அழைக்கப்பட்டவர்.
சற்றும் தாமதிக்காமல்    கல்கத்தா விரைந்தார் போசு. சித்தரஞ்சன் தாசிடம் தன்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டார். ஐ.ஏ.எஸ். புதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்று தீர்மானமாகச் சொன்ன அந்த இளைஞரை பெருமிதம் பொங்கப் பார்த்தார் தாசு.
உறுதியான குரலில் பேசினார் போசு.
போசு: நான் காந்தியை சந்தித்தேன், அவர்தான் உங்களிடம் அனுப்பிவைத்தார்.
சி.ஆர்.தாசு: நீங்கள் என்ன செய்யவிரும்புகிறீர்கள்?
போசு: இந்தியாவின் சுதந்திரத்திற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும்.
சி.ஆர்.தாசுக்கு போசு மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. போசின் குரலில் தொனிந்த உறுதியை அவர் கண்டுகொண்டார். தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவத்தை உதறித்தள்ள முடிந்த ஒருவரால் கட்டாயம் நிறைய சாதிக்க முடியும். அதுவும் இல்லாமல் காந்தியின் தேர்வு என்றுமே தவறாது என்று தாசுக்குத் தெரியும்.
கல்கத்தாவில் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டபோது போசு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது போசின் வயது 25 மட்டுமே. அசப்பில் ஒரு மாணவனைப் போலவே தோற்றமளித்த போசு, பிற மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்தார். கூடுதலாக நிறைய வாசிக்கவும் செய்தார். லண்டனில் இருந்த போதே அவரை ஈர்த்த வரலாற்றை இன்னமும் ஆழமாக ஆய்வு செய்யத் தொடங்கினார். குறிப்பாக ரசியா,அயர்லாந்து நாடுகளில் விடுதலைப்போராட்டங்களை வாசிக்க வாசிக்க புதிய நம்பிக்கை அவருக்குள் படர்ந்தது.
தான் படித்தவற்றை வகுப்பறையில் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர்களுக்குப் புரியும் மொழியில், புரியும் விதத்தில் வரலாற்றைப் போதித்தார். பாடம் எடுத்தார் என்பதை விட பிரசாரம் செய்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
இந்த சமயத்தில் பிரிட்டன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.
முதல் உலகப்போரில் பிரிட்டன் சார்பாகப் பல இந்திய வீரர்கள் கலந்துகொண்டதைக் கௌரவப்படுத்தும் வகையில் தனது நன்றியை வெளிக்காட்ட விரும்பி, வேல்ஸ் இளவரசரை இந்தியாவிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பிவைப்பதாக அறிவித்தது. இவரது வருகை இந்தியர்களைக் கவரும் என்பது பிரிட்டனின் நினைப்பு.
அப்போது இந்திய வைசிராயாக இருந்தவர் லார்ட்ரீடிங். தன்னுடைய திறமையை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு என்று அவர் நினைத்தார். இளவரசர் இந்தியாவுக்கு வருகை தரும்போது இந்தியா ஓர் அமைதிப் பூங்காவாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
காங்கிரசு இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தது. இளவரசர் வருகைதரும் தினத்தில் இந்தியா எங்கும் முழுநீள வேலைநிறுத்தம் நடத்த வேண்டும் என்று காந்தி கேட்டுக்கொண்டார்.
காந்தியின் வார்த்தை ஒவ்வொன்றையும் ஏற்றுச் செயல்படுபவர் தாசு. கல்கத்தா இவருடைய ஆளுமைக்கு உட்பட்ட நகரம். அதனால் இந்தப் போராட்டத்தில் கல்கத்தா முழு வெற்றி பெற வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்தது. அடுத்து என்னென்ன செய்வது என்று மனதிற்குள் ஒரு திட்டம் தயாரித்துக் கொண்டிருந்த சமயம் திடீரென்று ஒரு சிந்தனை தோன்றியது. பேசாமல் இந்தப் பொறுப்பை போசிடம் ஒப்படைத்தால் என்ன?
போசின் திறமை மீது முன்னரே அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. தேசியக் கல்லூரியில் போசு காட்டிய தீவிரத்தையும்,மாணவர்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கையும் நன்கு அறிவார்.
போசை அழைத்துப்பேசினார் தாசு.
சுபாசு, இது உனக்கு முதல் முக்கியப்பணி. இதை மட்டும் நீ செய்துமுடித்துவிட்டால் ஒட்டுமொத்த கல்கத்தாவும் நீ சொல்வதைக் கேட்கும்.
ஐ.சி.எஸ்(I.C.S)தேர்வில் வெற்றி பெற்றதற்கு எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாரோ அதைவிட அதிகமான மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் போசு. இளவரசரின் மானத்தைக் கப்பல் ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை என்று முடிவுகட்டிக் கொண்டார்.
1921- நவம்பர் 17ம் நாள் வேல்ஸ் இளவரசர் பம்பாய் துறைமுகத்தை அடைந்தார். சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட இளவரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் சுறுசுறுப்புடன் காட்சியளிக்கும் பம்பாய் ஏன் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அடுத்து கல்கத்தா பம்பாயே பரவாயில்லை என்று சொல்லும்படி இருந்தது அந்த நகரம். சாலைகள் வெறிச்சோடியிருந்தன, கைவண்டி, மோட்டார் வண்டி, ட்ராம் எதுவுமே இல்லை. சிறிய பெரிய கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. அத்தனைத் தெருக்களும் துக்கம் அனுசரிப்பதைப் போல அமைதியுடன் இருந்தன.
இளவரசரை அசத்த வேண்டும் என்று பிரியப்பட்ட லார்ட் ரீடிங் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. இத்தனைக்கும் பின்னால் இருப்பது யார் என்பதைக் கண்டறிய அவருக்கு நீண்ட காலம் பிடிக்கவில்லை. சி.ஆர்.தாசிடம் போசு வந்து சேர்ந்த நாள் முதலாக அவரையும் அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருந்தனர். புதியவர் இளைஞர்தான் என்றாலும் போசு ஒரு தீவிரமான நபர் என்கிற அளவில் அவரை ஒரு சந்தேக வட்டத்திற்குள் அடக்கி வைத்திருந்ததும் உண்மை. ஆனால் கல்கத்தா நகரையே நிறுத்தி வைக்கும் ஆற்றல் அவரிடம் உண்டு என்பதை ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போசைக் குறைத்து மதிப்பிட்டது தவறாகிவிட்டது என்று வருந்தினார் ரீடிங்.
பிற பகுதிகளைக் காட்டிலும் கல்கத்தாவில் வேலைநிறுத்தம் முழுமையாக வெற்றி பெற்றதைக் கண்டு மனம் குளிர்ந்து போனார் தேசபந்து. ஒரு சிறந்த போராட்ட வீரர் என்றுதான் போசை அவர் முன்னால் எடைபோட்டிருந்தார். ஆனால் கல்கத்தா சம்பவத்திற்குப் பிறகு தன் முடிவை மகிழ்ச்சியுடன் மாற்றிக்கொண்டார் அவர். போசு ஒரு போர் வீரர் மட்டுமல்ல போர் வீரர்களை நடத்திச் செல்லும் அபார ஆற்றல் கொண்ட ஒரு தலைமை சக்தி.
போசை கட்டியணைத்து நெகிழ்ந்து போனார் தாஸ்.  இனியும் போசை விட்டுவைப்பது அறிவீனம் என்பதை உணர்ந்து கொண்டது அரசு, போசு பற்றிய ஒரு தெளிவான குற்றச்சாட்டை முன்வைக்கக் கேட்டுக்கொண்டது. உளவாளிகள் போல் சில நபர்கள் போசை பின் தொடர்ந்தனர்.
இவர் ஒரு முக்கிய காங்கிரசு பிரமுகர் என்றது ஒரு குழு, இவர் முக்கியத் தீவிரவாதி ஆபத்தானவர் என்றது மற்றொரு குழு. அதெப்படி ஒரே நபரைப் பற்றி இருவேறு அறிக்கைகள் வரமுடியும்? மீண்டும் நபர்களை அனுப்பி போசை தீவிரமாகக் கண்காணிக்கச் சொன்னார்கள். முன்னால் சொன்ன அதே கருத்துகளை இரண்டு குழுக்களும் சமர்ப்பித்தன.
தாசோடு நெருக்கமாக இருக்கிறார் அவருடைய வலதுகரம் போலச் செயலாற்றுகிறார். தாசும் காந்தியும் மிகநெருக்கம். காந்தி ஆபத்தற்றவர் எனவே போசும் ஆபத்தற்றவர் இது முதல் குழுவின் கண்டுபிடிப்பு.
காந்தியோடு போசு நெருக்கமாக இல்லை. பல விடயங்களில் முரண்படுகிறார். சில பல தீவிரவாத அமைப்புகளுடன் நெருக்கமாகப் பழகுகிறார், முளையிலேயே கிள்ளிவிட்டால் ஆபத்து  இது இரண்டாம் குழுவின் கண்டுபிடிப்பு.
இரண்டாம் குழுவின் கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. போசு கைது செய்யப்பட்டார் அவருக்கு ஆறு மாத (6)கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. என்னது? ஆறுமாத தண்டனையா? இது அநியாயம் இல்லையா? இத்தனைக் குறைந்த தண்டனையைப் பெற்ற நான் என்ன ஆடு,கோழியையா திருடினேன்? போசு உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தைகள் இவை.
விரைவில் தேசபந்துவும் கைதானார். தனக்குக் கிடைத்த முதல் சிறைதண்டனையை எண்ணி எண்ணிப் பூரித்துப்போனார் போசு.

No comments:

Post a Comment