அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக மறைந்து கொள்ள அட்டகாசமான இடம்! 05
நான்காம் பக்க தொடர்ச்சி
பாகிஸ்தானுக்கு விமானம் ஏறத் தயாராக இருந்த தஹ்ஸீனை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த உடனேயே, அவரது வீடு எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் சோதனையிடப்பட்டிருந்தது. ஃபெயர்ஃபக்ஸில் அமைந்திருந்த அவரது வீட்டின் பெறுமதி, அரை மில்லியன் டொலர்கள்.
இங்கும் ஒரு சுவாரசியமான விஷயம், அவரது வீட்டைச் சோதனை செய்வதற்கான உத்தரவில் கையொப்பமிட்டிருந்த அமெரிக்க நீதிபதியின் வீடுகூட தஹ்ஸீனின் வீட்டிலிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளியே இருந்தது.
சோதனையின்போது அவரது வீட்டில் பேராபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் தஹ்ஸீன் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அவர்கள், அல்-காய்தாவின் திட்டமான அமெரிக்காவில் குடிநீரில் கிருமிகளைக் கலந்து, பேரழிவை ஏற்படுத்தும் திட்டத்துடன் ஒப்பிட்டனர்.
தஹ்ஸீனின் வீட்டிலிருந்து எஃப்.பி.ஐ. கைப்பற்றிய, அரபு மொழியிலிருந்த ஆவணங்களில் இருந்த விடயங்களை மொழி பெயர்த்த போது, அதில் அவர் அமெரிக்க ரகசியங்களை உளவு பார்க்கப் போட்டிருந்த திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன.
“நாங்கள் வட அமெரிக்காவில் இருப்பதால் நிறைய விடயங்களை அறிந்து கூற முடியும்” என்றும் “நாங்கள் உளவுச் செய்திகளைப் பெற வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உளவு நிறுவனங்களையே குறி வைத்திருக்கிறோம்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் பற்றிய புத்தகம் ஒன்று போல் ஸ்பெர்ரியால் எழுதப்பட்டிருந்தது. “உளவு: எவ்வாறு தீவிரவாதிகளின் உளவாளிகள் வாஷிங்டனில் ஊடுருவுகிறார்கள்” என்ற இந்தப் புத்தகம் வெளியானபோது விற்பனையில் சக்கைபோடு போட்டது.
இந்தப் புத்தகத்தில் போல் ஸ்பெர்ரி, “தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களை முன்னிறுத்தி, அதன் பின்னணியிலேயே இயங்குகின்றனர்” என்று கூறுகிறார்.
தொண்டு நிறுவனங்களைக் கண்காணிக்குமாறு, எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்குத் தனது புத்தகத்தில் அறிவுரை கூறியிருக்கும் ஸ்பெர்ரி, “தொண்டு நிறுவனங்களின் பின்னணியில், தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறைகள் கடந்த அக்டோபர் 2004 வரை சிந்தித்தது இல்லை” என்றும் கூறுகிறார்.
No comments:
Post a Comment