Friday, March 8, 2013

பாகிஸ்தான் உளவாளிக்கு ஜெய்ப்பூரில் விசாரணை! ஐ.எஸ்.ஐ.-க்கு போன CODE WORD தகவல்கள்!!


பொக்ரானில் கைது செய்யப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் உளவாளியிடம் இருந்து, முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக ராஜஸ்தான் போலீஸ் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள உளவாளிக்கு சுமார் 35 வயது இருக்கும். கம்ப்யூட்டர் நிபுணரான இவரது பெயர், சும்மார் கான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22-ம் தேதி நடைபெற்ற இந்திய விமானப்படையில் “Iron Fist” பயிற்சியில் நடைபெற்ற சில ராணுவ விபரங்களை பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவருக்கு சும்மார் கான் சங்கேத வார்த்தைகளில் அனுப்பிக்கொண்டு இருந்தபோது கைது செய்ததாக ராஜஸ்தான் போலீஸ் சொல்கிறது. (“Iron Fist” பயிற்சியின்போது எடுக்கப்பட்ட போட்டோ மேலேயுள்ளது)
ராஜஸ்தான் போலீஸ் உளவுத்துறை டி.ஜி.பி. தால்பாத் சிங் திங்கார், “இந்த நபர் தொடர்பாக எமக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து, எமது கண்காணிப்பு வளையத்துக்குள் அவரை வைத்திருந்தோம். “Iron Fist” பயிற்சியின்போது இவர்மீது மிகக் கவனமாக கண் வைத்திருந்தோம். அன்றைய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை பாகிஸ்தானுக்கு நிச்சயம் கொடுப்பார் என்று ஊகித்திருந்தோம்.
எமது ஊகம் தப்பவில்லை. அவர் தகவல் அனுப்பிக்கொண்டிருந்தபோது எம்மிடம் சிக்கினார்.
அவர் அனுப்பிய தகவல்கள் சங்கேத வார்த்தைகளில் இருந்தன. அவை டீகோடிங் செய்யப்பட்டு விட்டன. சரியாக சொல்ல வேண்டுமானால், இந்த தகவல்கள் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.-யின் கீழ் இயங்கும் உப பிரிவான FIU-க்கு (Financial Monitoring Unit) அனுப்பப்பட்டது” என்றார்.
நேற்று விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டுவரப்பட்ட சும்மார் கான் தெரிவித்த தகவல்களில் இருந்து, அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் வைத்து ஐ.எஸ்.ஐ.யால் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளார். சமீப காலத்தில் சான்டான் ஃபயரிங் ரேஞ்ச், லாத்தி, பொக்ரான் ஆகிய இடங்களில் நடைபெற்ற ராணுவ விவகாரங்கள் தொடர்பாக தகவல்களை அனுப்பி வைத்துள்ளார்.
அவரால் அனுப்பப்பட்ட தகவல்களில் ராணுவ முக்கியத்துவம் பற்றி தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்தில் (Central Interrogation Centre, Jaipur) வைத்து, தற்போது மத்திய உளவுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment