ஐ.எஸ்.ஐ.-யின் விசாகபட்டினம் ஆபரேஷன் ஏன்?-2
முதல் பக்க தொடர்ச்சி
மத்திய உளவுத்துறைகள் என்றால், பரவலாக அறியப்பட்டவை, ரா, ஐ.பி., சி.பி.ஐ. (இவர்கள் நிஜத்தில் உளவுத்துறை அல்ல, புலனாய்வு அமைப்பு) ஆகியவைதான். அதிகம் வெளியே பிரபல்யம் இல்லாத வேறு சில உளவு அமைப்புகளும் மத்தியில் உண்டு. அதில் ஒன்று, டி.என்.ஐ. (DNI – Directorate of Naval Intelligence)
ராவின் ஒரு டீமும், இந்த டி.என்.ஐ.-யின் ஒரு டீமும் இணைந்து செய்த ஆபரேஷன்தான், பாகிஸ்தானிய SLOC சென்டர் ஒட்டுக்கேட்பு.
ஒட்டுக் கேட்டல் எப்படி நடைபெற்றது என்றால், கடலின் அடியே (பாகிஸ்தான் கடற்படை நடமாட்டங்கள் இருக்கும் கடற்பிராந்தியத்தில்) தரையில் ஒரு கம்பிவலைப் பின்னலும், கடல் மட்டத்தோடு மேலும் கீழுமாக மிதக்கும் வகையிலான ஆன்டனாக்களும், பாகிஸ்தான் SLOC சென்டர் உரையாடல்களை, சிக்னல்களாக கிரகித்தன என்று சொல்லப்படுகின்றது.
இந்த சிக்னல்களை வைத்து எதுவும் செய்ய முடியாது. அவற்றை ஒலி வடிவுக்கு மாற்ற வேண்டும். விசாகபட்டினம் Eastern Naval Command பிரத்தியேக மையம் ஒன்றில்தான் இந்த சிக்னல்கள் ஒலி வடிவத்துக்கு மாற்றப்படுகின்றன என்கிறார்கள் இந்த விவகாரம் பற்றி தெரிந்தவர்கள்.
பாகிஸ்தானிடம் இருந்த பழைய கடல் உபகரணங்களும், அவற்றின் புராதன தொழில்நுட்பமும் ஏற்படுத்திக் கொடுத்த பாதுகாப்புப் பலவீன நீக்கல்களுக்கு ஊடாக ராவின் உதவியுடன் டி.என்.ஐ. இதைச் செய்திருந்தது என்று தெரிகிறது.
1999 அல்லது 2000-ம் ஆண்டிலேயே இந்த ஒட்டுக்கேட்டல் நடைமுறை சிறிய அளவில் தொடங்கி விட்டதாக இப்போது சொல்கிறார்கள்.
அது எப்போது தொடங்கியிருந்தாலும், மிக மிக குறைவான எண்ணிக்கை ஆட்களுக்கே தெரிந்திருந்த இந்த அதி ரகசிய ஒட்டுக்கேட்டல், 10 வருடங்களுக்கு மேல் யாருக்கும் தெரியாமல் நடத்திருக்கின்றது. பாகிஸ்தானின் உளவுப் பிரிவு ஐ.எஸ்.ஐ., இவ்வளவு நீண்ட காலமாக, தங்கள் கடற்படைக்கு எதிராக நடந்த இந்த ஆபரேஷன் பற்றி ஏதும் தெரியாமல் இருந்திருக்கிறது.
இரு ஆண்டுகளுக்குமுன் ஐ.எஸ்.ஐ. டில்லிக்குள் ஊடுருவ விட்ட நபர் (அழகி!) ஒருவர், கடற்படை அதிகாரி ஒருவரை வசப்படுத்தியதில் இந்த கதை அவர்களுக்கு தெரியவந்தது என்கிறார்கள். அழகி கராச்சிக்கு பறந்துவிட்டார். கடற்படை அதிகாரி ‘உள்ளே’ இருக்கிறார்.
இப்ந்த விவகாரம் தெரிய வந்த பின்னரே, ஐ.எஸ்.ஐ. விசாகபட்டினம் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கலாம் என்றும், விசாகபட்டினம் மீது கண் வைத்திருக்க, ‘யாராலும் எதிர்பார்க்க முடியாத’ இடமான யாழ்ப்பாணத்தை ஐ.எஸ்.ஐ. தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுவதுதான், வெளிநாட்டு உளவு வட்டாரக் கதை.
அதாவது, தம்மை உளவு பார்த்த மையத்தை, தாமும் உளவு பார்க்க விரும்பியிருக்கிறார்கள். ஆனால், கதை எப்படியோ கசிந்து விட்டது!
No comments:
Post a Comment