Sunday, January 6, 2013

1971:இந்திய-பாகிஸ்தான் போர்: CIA வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்கள்!


1971:இந்திய-பாகிஸ்தான் போர்: CIA வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்கள்!



1971- இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியாவின் நோக்கம் பங்களாதேஷை உருவாக்குவது மட்டுமல்ல. அதற்கும் மேலாக பல திகைப்பூட்டும் நோக்கங்களை உள்ளடக்கியதாக இருந்தது. பாகிஸதானின் முக்கிய பகுதிகளையும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் கைப்பற்றி பாகிஸ்தானை நிர்மூலமாக்குவதுதான் அப்போரின் மறைமுகமான நோக்கமாக இந்தியா கொண்டிருந்தது. இதன் மூலம் எக்காலத்திலும் இந்தியாவை எதிர்க்க முடியாத அளவிற்கு  பாகிஸ்தானை பலவீனப்படுத்த வேண்டும் என இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்திராவின் அந்த திட்டம் அவரதுஅமைச்சரவையில் இருந்த ஒரு  CIA உளவாளியால் தவிடுபொடியாக்கப்பட்டது. இந்திராவின் ஆசை பங்களாதேஷை உருவாக்குவதோடு தடுத்து நிறுத்தப்பட்டது. CIA யின் ஏஜண்டாக பணியாற்றிய அந்த கேபினெட் அமைச்சர் யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இதுவே இந்தியாவின் மிகப் பெரும் உளவு மோசடியாக  பலரால் கருதப்படுகிறது.

நூலாசிரியர் அனுஜ் தார் தான் எழுதியுள்ள “CIA’s Eye on South Asia” என்ற நூலில் மேற்கண்ட தகவலகளை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள் தொடர்பாக CIA பல ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்ட ரகசிய ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நூலை அனுஜ் தார் எழுதியுள்ளார். 

சமீபத்தில் வெளியிடப்பட்ட CIA  யின் ரகசிய ஆவணங்கள்  1971  ல் நடந்த போர் சம்பவங்களை தெளிவாக விளக்கவில்லை. ஆயினும் அவை இந்திய CIAஏஜென்ட், மேற்கு பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தும் இந்தியாவின் திட்டத்தை முன்கூட்டியே அமெரிக்க ஏஜென்சிக்கு தெரிவித்ததையும், அதனை தொடர்ந்து நடைபெற்ற அதிரடி அரசியல் திருப்பங்களையும் தெளிவாக விளக்குகிறது. அனுஜ் தார் அந்த CIA ஏஜென்ட் இந்திராவின் அமைச்சரவையில் இருந்த ஒரு காபினெட் அமைச்சர்  என உறுதியாக கூறுகிறார்.

டெல்லியில் நடந்த ரகசிய அமைச்சரவை கூட்டத்தில் பேசும்போது இந்திரா காந்தி, தான் பங்களாதேஷை உருவாக்க மட்டும் போரை தொடக்கவில்லை என்றும், பாகிஸதானின் முக்கிய பகுதிகளையும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் கைப்பற்றி பாகிஸ்தானை முழு அளவில் தோற்கடிக்கப்போவதாகவும், இதன் மூலம் எக்காலத்திலும் இந்தியாவை எதிர்க்க முடியாத அளவிற்கு  பாகிஸ்தானை பலவீனப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார். இச்செய்தி அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்திய CIAஏஜெண்டால் CIA ஏஜென்சிக்கு தெரிவிக்கப்பட்டது. CIA  தனது அறிக்கையினை அமெரிக்க அதிபர் நிக்சனிடம் சமர்ப்பித்தது.

CIA யின் அறிக்கையினை படித்ததும் கோபமடைந்த நிக்சன் பதட்டத்துடன் இந்த பெண் (இந்திரா காந்தி) நம்மை ஏமாற்றி விட்டார் என்று கூறினார். கிழக்கு பாகிஸ்தான் (தற்போது பங்களாதேஷ்) மீது போர் தொடுக்கப்போவதில்லை என்று தன்னிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு (உண்மையில் இந்திரா அவ்வாறு வாக்குறுதி கொடுத்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை) தற்போது மேற்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் தாக்க இந்திரா முனைவதை கண்டித்த நிக்சன், இச்செயலுக்கு இந்திரா கண்டிப்பாக விலை கொடுக்க வேண்டிவரும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்சிங்கரிடம் தெரிவித்தார்.

இந்திய CIA ஏஜென்டின் ரகசிய தகவலின் அடிப்படையில்  நிக்சன் மேற்கு பாகிஸ்தானை (தற்போதைய பாகிஸ்தான்) இந்திய தாக்குதலில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் நேரடியாக இறங்கினார். ஒரு பெரிய ஜனநாயக நாடு தான் விரும்பும் அநீதி அனைத்தையும் செய்ய முடியும் என்ற கொள்கையை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் எனில்,  அது சர்வதேச நீதியையும், ஐக்கிய நாடுகள் சபையையும் அழித்துவிடும் என்று நிக்சன் கூறினார். மேற்கு பாகிஸ்தானை தாக்கும் திட்டத்தை இந்தியா கைவிடுவதற்கு   ரஷியா இந்தியா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு ரஷியா செய்ய முடியாமல் போனால்  அது அமெரிக்க  ரஷிய போராக மாற வாய்ப்புண்டு என்று நிக்சன் ரஷியாவை தனிப்பட்ட முறையில் மிரட்டினார். கிஸ்சிங்கர் ஐநாவுக்கான சீன பிரதிநிதியை ரகசியமாக சந்தித்தார்.அப்போது அவர் இந்தியCIA ஏஜென்டின் ரகசிய தகவலை சீன பிரதிநிதியிடம் தெரிவித்தார். மேலும் ரஷியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடங்கியுள்ள போர், பின்னாளில் சீனாவுடன் இந்தியாவும், ரஷியாவும்  செய்யவிருக்கும் போருக்கான  ஒத்திகையாக இருக்கலாம் என அவர் சீனாவை எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து ரஷியாவின் முதல் துணை வெளியுறவு துறை அமைச்சர் வாசிலி குஸ்நெட்சோவ் டெல்லி வருகை தந்தார். அவர் இந்தியா தனது தாக்குதலை கிழக்கு பாகிஸ்தானோடு (பங்களாதேஷ்) நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மேற்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை தாக்கக் கூடாது என்றும் இந்தியாவை வற்புறுத்தினார். ஏனெனில் இந்தியாவின் அத்தகைய நடவடிக்கை துணைக்கண்டத்தில் அமெரிக்க  ரஷிய போருக்கு வழி வகுத்துவிடும் என கவலை தெரிவித்தார்.  இந்தியா மேற்கு பாகிஸ்தானை தாக்காது என்ற உறுதிமொழியை இந்தியாவிடம் பெற்று கொண்ட குஸ்நெட்சோவ், அத்தகவலை 1971, டிசம்பர் 16 அன்று அமெரிக்காவிடம் தெரிவித்தார். அதை கேட்டதும் நிக்சன் நாம் சாதித்து விட்டோம்; ரஷியா நமது வேலையை செய்து முடித்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்தியாவின் உண்மையான இலக்காக இருந்த மேற்கு பாகிஸ்தானை நிக்சன் காப்பாற்றி விட்டதாக கிஸ்சிங்கர்  பாராட்டினார். CIAஆவணங்களை ஆதாரமாக கொண்டு மேற்கண்ட தகவல்களை தன் புத்தகத்தில் அனுஜ் தார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவை மிரட்ட அமெரிக்கா தனது மிகப்பெரிய அணுசக்தி போர் கப்பலை வங்காள விரிகுடாவில் நிறுத்தியது. ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவின் பலத்தை பறை சாற்றும் வகையில் அந்த  போர் கப்பல் நிறுத்தி வைக்கப்படிருந்தது.  இந்திய CIA ஏஜென்ட் அளித்த  ரகசிய அறிக்கையின் விளைவாகவே அமெரிக்க அரசு மேற்கண்ட நடவடிக்கையை எடுத்தது.

1971  ல் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை முதன் முதலாக  இந்திராவின் அமைச்சரவையில் CIA ஏஜென்ட் இருந்ததை  வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து டிசம்பர் -1971-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின்  ஆசிய பிராந்திய செயல் திட்டம், இந்திய பிரதமர் இந்திராவின் நெருங்கிய அமைச்சரவை சகா ஒருவரின் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தது.

பிற்காலத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், இரு துணை பிரதமர்கள் ஜெகஜீவன் ராம், Y B சவான் ஆகியோர் 1971 போரின் பொது இந்திய  CIAஏஜெண்ட்களாக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அமெரிக்க அரசு தன ரகசிய ஆவணங்களை வெளியிடும் வரை இந்திய  CIA ஏஜெண்ட் ஒருவர் இந்திராவின் அமைச்சரவையில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாமல்தான் இருந்தது. CIA தனது நம்பிக்கைகுரிய ஏஜென்ட் ஒருவரை இந்திய அரசின் கேபினட்டில் கொண்டிருந்தது என்ற வாதத்திற்கு அமெரிக்க அரசின் ஆவணங்கள் இன்று அசைக்க முடியாத ஆதாரங்களாக விளங்குகின்றன.

CIA வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் இந்திய CIA ஏஜென்டின் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெயரை வெளியிட்டால் அது இந்திய அமெரிக்க அரசின் உறவை பாதிக்கும் என்பதாலும், ஏஜென்சிக்கு புதிய ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுத்தும் என்பதாலும் இந்திய CIA ஏஜென்டின் பெயரை அமெரிக்க அரசு வெளியிடவில்லை என அனுஜ் தார் கூறுகிறார். ஆயினும் அந்த ஏஜென்ட் யார் என்பதை இந்திய அரசு உறுதியாக அறிந்திருக்கும் என அவர் மேலும் கூறுகிறார்.

ஒவ்வொரு நாடும் பிற நாட்டு அரசாங்கங்களின் ரகசியங்களை உளவு பார்க்க ஏஜெண்ட்களை நியமிப்பது வழக்கமானதுதான். இந்தியாவும் இப்பணிகளுக்காக R & AW ஏஜென்சியை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவின் கேபினட் அமைச்சர் ஒருவரே CIA  ஏஜெண்டாக இருந்தது மிகப்பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திலும் CIA  எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது. மேலும் 1971 ஆம் ஆண்டு போரில் இந்தியா தனது நோக்கத்தில் முழு வெற்றி பெறமுடியாமல் போனதற்கு இந்திய CIA ஏஜெண்ட்தான் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அன்று இந்தியாவின் போர் ரகசியம் வெளி வராமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவின் பூகோள அமைப்பும், பாகிஸ்தானின் பூகோள அமைப்பும் நிச்சயம் வேறாயிருக்கும்.

No comments:

Post a Comment