Sunday, January 20, 2013

போபால் பயங்கரம்!

1984 போபால் பயங்கரத்தை மீண்டும் நினைவுபடுத்தவேண்டிய அவசியம் வந்துவிட்டது. இந்தப் பேரழிவுக்குக் காரணமான ஓர் அமெரிக்க நிறுவனத்தை (இப்போது அதன் பெயர் டௌ கெமிக்கல்ஸ்) அரசாங்கம் இந்த நிமிடம் வரை தாங்கிப் பிடித்துக்கொண்டு இருப்பது வேதனையளிக்கிறது. செய்தி அறிய இங்கே. சற்றே விரிவான ஒரு அறிமுகம் கீழே.

0

போபால், டிசம்பர் 2, 1984. போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு பகுதிவாசிகள் உறங்க ஆரம்பித்தபோதே நச்சுப் புகை கசிய ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் ஐந்து லட்சம் பேர். துடிக்கத் துடிதுடிக்க எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். என்ன, ஏது என்று தெரியவில்லை. உறக்கம் கலைந்த எரிச்சல் கண்களுக்கு. ஆனால், மார்பு முழுவதும் ஏன் எரியவேண்டும்? ஏன் இத்தனை இருமல்? கை, கால்கள் ஏன் பின்னிக்கொள்கின்றன? இதென்ன சாத்தானின் வேலையா? முன்னரே இறந்து போன குழந்தைகளை தூக்கிக்கொண்டு வாசலுக்கு ஓடினார்கள் பெண்கள். தடுக்கி விழுந்தார்கள். வாசல் முழுவதும் பிணங்கள். அலறவேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. அன்றைய தினம் இறந்துபோனவர்கள் மட்டும் 8000 பேர்.

1984-ல் குழி தோண்ட ஆரம்பித்தவர்கள் இன்னமும் தோண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய தேதி வரை நச்சு வாயு தாக்குதலால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 22,000. பிரசவம் என்றாலே துடிதுடித்துப்போகிறார்கள் பெண்கள். ஆணா பெண்ணா? கறுப்பா சிவப்பா? அப்பா ஜாடையா அம்மா ஜாடையா? அக்கறையில்லை அவர்களுக்கு. ஐயோ கடவுளே, குழந்தை உயிருடன், முழுமையாக இருக்குமா?

ஓர் உயிர் முழுமையாக பிறப்பது அங்கே அபூர்வம். கைகள் இருக்கும். இரண்டல்ல. இரண்டரை. அல்லது மூன்றேகால். இடுப்புக்குக் கீழே கால் இருக்கவேண்டிய பகுதியில் கை. மார்புக்கு வெளியில் துருத்தியபடி துடிக்கும் இதயம். உடைந்த வாய். பானை போல் வீங்கிய தலை. வேலை செய்யாத சிறுநீரகம். ரத்த ஓட்டம் இல்லாத உடல். பார்வையற்ற மூன்று கண்கள். பின்பக்கம் வால். சில சமயம், இன்னதுதான் என்று கண்டுபிடிக்கவே இயலாத வகையில் கனமாக ஒரு மாமிசத் துண்டு பிரசவம் ஆவதுண்டு.

ஒரு வேளை குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்துவிட்டால் நாள்பட நாள்பட குறைபாடுகள் ஒவ்வொன்றாக வெளியில் வர ஆரம்பிக்கும்.சிறிநீரகக் கோளாறு, சுவாசக் குறைபாடுகள், மனஅழுத்தம். இன்னும் நிறைய. இன்றைய தேதியில், 1,20,000 பேருக்கும் அதிகமானவர்கள் தீவிர மருத்துவ சிகிச்சை பெறாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த நச்சு வாயு கசிந்தது யூனியன் கார்பைடு என்னும் ரசாயன நிறுவனத்திலிருந்து. அந்த நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்ஸன். பாய்ந்து சென்று அவரை அமுக்கினார்கள். ஒரு சில நாள்கள். தன் கோட் மீதும், டை மீதும் படிந்திருந்த தூசியை ஊதிவிட்டபடியே வெளியில் வந்துவிட்டார் அவர். வந்த கையோடு, அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார். குட்டியூண்டு பூட்டு ஒன்றை காசு கொடுத்து வாங்கி ஃபாக்டரிக்கு வெளியில் பூட்டிவிட்டார்கள். ஆச்சு.

கமிட்டி மேல் கமிட்டி வைத்தார்கள். யூனியன் கார்பைட் மீதும் ஆண்டர்ஸன் மீதும் வழக்குப் பதிவு செய்தார்கள். அமெரிக்காவுக்கு ஃபேக்ஸ் அனுப்பினார்கள். கூரியரில் குற்றப்பத்திரிகை. கூடவே இரண்டு கோரிக்கைகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தா. ஆண்டர்ஸனை இந்தியாவுக்கு அனுப்பு.

எங்களைக் கேட்காதே யூனியன் கார்பைடை கேட்டுக்கொள் என்றது அமெரிக்கா. அமெரிக்கக் கம்பெனிதான். ஆனால் இயங்கிக்கொண்டிருந்தது இந்தியாவில் அல்லவா? நாங்கள் பாதுகாப்புடன்தான் வேலை செய்துகொண்டிருந்தோம். இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்றே எங்களுக்குத் தெரியாது என்று உதட்டைப் பிதுக்கியது யூனியன் கார்பைட். இந்தியா முன்வைத்த மனுவை கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, ரொம்ப அதிகம் என்று முணுமுணுத்த அதிகாரிகள் வேண்டுமானால் பத்து, பதினைந்து பர்செண்ட் தருகிறோம் ஓகேவா என்று கண்ணடித்தார்கள். ஆண்டர்ஸன்? ரிடையர்மெண்ட் வாங்கிவிட்டார். ஏதோ ஒரு ரிசார்ட்டில் கடற்கரை மணலில் பல வண்ணக் குடையின் கீழே காலை நீட்டி அமர்ந்து ஆரஞ்சு பழச் சாறு உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்.

நவம்பர் 1988-ல் உச்ச நீதிமன்றத்தின் உந்துதலால், யூனியன் கார்பைடு அழுதுக்கொண்டே 470 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக அளிக்க முன்வந்தது. அதாவது, இந்தியா விண்ணப்பித்திருந்த தொகையில் இருந்து வெறும் பதினைந்து சதவீதம் மட்டுமே. ஐந்து லட்ச சொச்சம் பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகை பிரித்துக்கொடுக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது.

இந்த நிமிடம் வரை பல ஆயிரம் டன் ரசாயன நச்சு பொருள்கள் போபால் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. நிலத்தடி நீரில் நஞ்சு. கிணற்றில், குழாய் நீரில் நஞ்சு. பெண்களின் மார்பில் சுரக்கும் பாலில் என்னவோ ஒரு பெயரில் எத்தனையோ சதவீத நஞ்சு கலந்திருப்பதாக ஒரு மருத்துவ குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. ஆக, அடுத்தடுத்த தலைமுறைக்கும் சேர்த்தே குழி தோண்டவேண்டியிருக்கும்.

இன்னும் எத்தனை லட்சம் பேர்? எத்தனை லட்சம் குழந்தைகள்? இன்னும் என்னென்ன கோர நோய்கள் போபாலைத் தாக்க காத்திருக்கின்றன? ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை மீட்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஒரு தெளிவான திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை. எவ்வளவு செலவு ஆகும்? தெரியவில்லை.

1993-ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பு இது. பசி, பட்டினி, பிரசவம், நோய் என்று போபாலில் இருந்து ஒரு பெட்டிஷன் கூட அமெரிக்காவுக்கு வரக்கூடாது. ஒரு டாலர் கூட இங்கிருந்து இனி கிடைக்காது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள், குமுறி வெடிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நாளும் புதுப்புது வியாதிகள். இறப்பு சதவீதம் உயர்ந்துகொண்டே போகிறது. எல்லாவற்றையும் விட கொடுமையான மற்றொரு தகவல், யூனியன் கார்பைட் கொடுத்த அந்த கொஞ்ச நஞ்ச நஷ்டஈடும் பெரும்பாலான மக்களுக்கு போய்ச் சேரவில்லை. அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் என்று யார் யாரோ இடையில் புகுந்து பொய்க் கணக்குக் காட்டி சுருட்டிக்கொண்டுவிட்டார்கள். எங்கே சென்று, யார் சட்டையைப் பிடிப்பது?

2001ம் ஆண்டு யூனியன் கார்பைட் நிறுவனத்தை டௌ கெமிக்கல்ஸ் (Dow Chemicals) என்னும் நிறுவனம் சுவீகாரம் செய்துகொண்டது. வியட்நாம் மீது அமெரிக்கா நடத்திய யுத்தத்தில் (1959-1975)அமெரிக்காவுக்குத் துணை போன நிறுவனம் இது. அமெரிக்காவின் ஆர்டரை ஏற்றுக்கொண்டு, நாபாம் (Napalm) என்னும் திரவத்தை வேண்டிய மட்டும் உற்பத்தி செய்து கொடுத்தவர்கள் இவர்கள். ஆனால், சில ஆயிரம் பேர்களை மட்டுமே இந்தத் திரவியம் கொன்றது. கஸ்டமர் சேடிஸ்ஃபேக்ஷன் இல்லை. அடடா சொதப்பிவிட்டதே என்று வருத்தப்பட்ட டௌ, மெனக்கெட்டு ஓவர்டைம் செய்து கூடுதல் வீரியமுள்ள ஏஜெண்ட் ஆரஞ்சு என்னும் ரசாயனத்தை தயாரித்துக்கொடுத்தது. அப்படியே அள்ளிச்சென்று வானத்தில் இருந்து தூவிக்கொண்டே சென்றனர் அமெரிக்கர்கள். இந்த முறை பாதிக்கப்பட்ட வியட்நாமியர்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொட்டது. ஆஹா என்றது அமெரிக்கா. பலே, பலே!

அன்று அனுபவித்த அதே எரிச்சலை மீண்டும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் போபால் மக்கள். கோபம். வெறுப்பு. தவிரவும், துக்கம். அமெரிக்கா கைவிரித்துவிட்டது. யூனியன் கார்பைடு என்று ஒரு கம்பெனியே இன்று இங்கே இல்லை. ஆண்டர்ஸன் ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்திய அரசாங்கம்? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அத்தனை பேரும்? பெயரை மாற்றிக்கொண்டால் விட்டுவிடுவீர்களா? எங்களுக்குப் பணம் வேண்டும். நீங்கள் கொடுக்கும் பிசாத்துப் பணம் செத்துப் போனவர்களைத் திருப்பித் தராது. ஆனால், உடைந்து போய் கிடக்கும் எங்கள் குழந்தைகளின் கன்னங்களை சரிசெய்ய எங்களுக்குப் பணம் வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காண்பிக்கலாம். பிறக்கும் அத்தனை குழந்தைகளின் கன்னங்களிலும் யூனியன் கார்பைட் மாறிமாறி அறைந்துக்கொண்டிருக்கிறது. இனி, நாங்கள் எந்தக் காற்றை சுவாசிப்பது? எந்த நீரை அருந்துவது? என்ன சாப்பிடுவது? இதற்கெல்லாம் யார் காரணம்? நாங்கள் என்ன செய்யவேண்டும்? எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்?

போபால் மக்களுக்கு இன்னமும் விடை கிடைத்தபாடில்லை.

No comments:

Post a Comment