Tuesday, January 29, 2013

பின்லேடன் கொலை – எப்படி உதவினார் பாகிஸ்தான் டாக்டர்?

இஸ்லாமபாத், பாகிஸ்தான்: பின்லேடனின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள சி.ஐ.ஏ.மேற்கொண்ட முறைகள் பற்றிய தகவல்கள், ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புதிதாக வெளியாகியுள்ள தகவல், ஒரு பாகிஸ்தானிய டாக்டர், எப்படி உதவினார் என்பது!
இந்த டாக்டர் (பெயர் வெளியிடப்படவில்லை) பாகிஸ்தான் அரசு சுகாதாரத் துறையில் சீனியர் பதவியில் இருப்பவர். சி.ஐ.ஏ.க்காக அவர், தனக்குக் கீழ் பணிபுரியும் சில நர்ஸ்களை உபயோகித்து தகவல் திரட்டிக் கொடுத்தார்.
சி.ஐ.ஏ., பின்லேடன் மறைந்து வாழ்ந்த வீட்டைக் கண்காணித்து வந்ததில், அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பது தெரியவந்திருந்தது. இவர்களில், பின்லேடனின் மனைவிகளும், குழந்தைகளும் அடக்கம்.
அந்த வீட்டைத் தாக்குவதற்குமுன், அங்கிருப்பவர்களில் யார் யார், உண்மையிலேயே பின்லேடனின் குடும்பத்தினர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சி.ஐ.ஏ. விரும்பியது. அதற்காகவே இந்த பாகிஸ்தானிய டாக்டரை ரகசியமாக அணுகியது சி.ஐ.ஏ. (பாகிஸ்தானிய அரசுக்குத் தெரியாமல்தான்!)
உதவ முடிவுசெய்த டாக்டரிடம், ஒரு திட்டத்தைப் போட்டுக் கொடுத்தது சி.ஐ.ஏ.
சி.ஐ.ஏ.யின் திட்டப்படி, சுகாதார ஊழியர்களை அந்த ஏரியாவுக்கு, இந்த டாக்டரால் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வீடுவீடாகச் சென்ற அவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து ஊசி போட்டனர். அந்த வகையில் பின்லேடனின் வீட்டுக்குள்ளும் அவர்களால் நுழைய முடிந்திருந்தது.
பின்லேடனின் வீட்டிலிருந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட நர்ஸ்கள், ஊசிகளில் படிந்த குழந்தைகளின் ரத்தத்தை பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர். இந்த ரத்த சாம்பிள்களை வைத்து டி.என்.ஏ. சோதனைகள் செய்யப்பட்டன. (பின்லேடனின் டி.என்.ஏ. சாம்பிள் ஏற்கனவே சி.ஐ.ஏ.யிடம் இருந்தது.)
இரண்டையும் ஒப்பிட்டு, பின்லேடனின் குழந்தைகள் சி.ஐ.ஏ.யால் அடையாளம்  காணப்பட்டனர். அதன் பின்னரே, அந்த வீட்டின்மீது அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. பின்லேடன் கொல்லப்பட்டார்.
இப்போது, இந்தத் தகவல் எப்படி வெளிவந்தது என்று அறிய ஆவலாக இருக்கிறதா? சி.ஐ.ஏ.க்கு உதவிய டாக்டர்,  இப்போது பாகிஸ்தானிய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்!

No comments:

Post a Comment