இந்து-முஸ்லிம் மோதல்கள் ஏற்படுவது ஏன்?
இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.
150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? இன்று, முஸ்லிம்கள் இந்துக்களின் இல்லங்களில் வாடகைக்கு வீடு கிடைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவில் எங்காவது குண்டு வெடித்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யத் திறனற்ற காவல்துறையினர் (அறிவியல்பூர்வமாக விசாரணை மேற்கொள்வதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு இல்லை), அரை டஜன் முஸ்லிம்களைக் கைது செய்து பிரச்னைக்குத் ‘தீர்வு’ கண்டுவிடுகிறார்கள். இவ்வாறு கைதானவர்களில் பலர் சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தபிறகு கடைசியில் அப்பாவிகள் என்று தீர்ப்பளிக்கப்படுகிறார்கள்.
இதன் விளைவாக, முஸ்லிம்கள் இந்தியாவில் அந்நியப்பட்டு கிடக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானில், நிலைமை இதைவிட மோசம். அங்கே சிறுபான்மையினர் தீவிரவாதிகளிடமும் மதவாதிகளிடமும் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போது தோன்றியது?
1857 இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. 1857க்கு முன்பு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒன்றாகவே வாழ்ந்தனர். சில கருத்துவேறுபாடுகள் இருந்தன. ஆனால், இரு சகோதரர்களுக்கும் இரு சகோதரிகளுக்கும் இடையில்கூட இப்படிப்பட்ட வேறுபாடுகள் எழுவது உண்டு அல்லவா?
இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த முஸ்லிம்கள் பல கோயில்களை உடைத்தது உண்மை. ஆனால் அவர்களுடைய வழி வந்த முஸ்லிம் தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் வகுப்பு ஒற்றுமையைக் கடைப்பிடித்தனர். ஒருவகையில், தங்கள் நலனுக்காகத்தான் அவர்கள் இதைச் செய்தனர். காரணம், அவர்கள் ஆட்சி செய்யவேண்டியவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்து கோயில்களை உடைத்தால் உடனே கலவரம் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஒருவரும் கலவரத்தை விரும்பவில்லை. முகலாயர்கள், ஆவாத் நவாபுகள், ஆர்காட் முர்ஷிதாபாத், திப்பு சுல்தான், ஹைதரபாத் நிஜாம் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் மத ஒற்றுமையை வளர்ப்பவர்களாகத்தான் இருந்தார்கள்.
1857ல் முதல் சுதந்தரப் போர் வெடித்தபோது, இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகவே பிரிட்டனை எதிர்த்தனர். கலகத்தை அடக்கியபிறகு, பிரிட்டிஷார் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்தியாவைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டுமானால் அதற்கு ஒரே வழி, பிரித்து ஆள்வதுதான். சர் சார்லஸ் வுட், (இந்திய செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) வைஸ்ராய் லார்ட் எல்ஜின் என்பவருக்கு 1862ல் எழுதிய குறிப்பு இது. ‘இந்தியாவில் நாம் அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்குக் காரணம் ஒருவருக்கு எதிரான இன்னொருவரை நிறுத்தி மோதவிட்டதுதான். இதை நாம் தொடர்ந்து செய்தாகவேண்டும். ஒரே மாதிரியான உணர்வை அவர்கள் பெற்றுவிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்யுங்கள்.’
பிரித்து ஆளவேண்டும்!
ஜனவரி 14, 1887 அன்று விஸ்கவுண்ட் க்ராஸ் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் டுஃப்பரின் என்பவருக்கு இவ்வாறு எழுதுகிறார். ‘மத ரீதியிலான இப்படிப்பட்ட பிளவு நமக்குச் சாதகமாக இருக்கும். இந்தியக் கல்விமுறை குறித்தும் பாடப் புத்தகங்கள் குறித்துமான உங்கள் விசாரணை கமிட்டியின் மூலம் சில நன்மைகளை அடையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.’
ஜார்ஜ் ஹாமில்டன் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் கர்சனுக்கு இவ்வாறு எழுதினார். ‘இந்தியாவை நாம் ஆள்வதற்குத் தடையாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம்தான்… படித்த இந்தியர்களை இரு பிரிவுகளாக (இந்துக்கள், முஸ்லிம்கள்) பிரிக்கமுடிந்தால் நம் பிடியை உறுதிபடுத்திக்கொள்ளமுடியும். இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கும்படியாக நம் பாடப்புத்தகங்களை நாம் திட்டமிட வேண்டும்.’
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமை ஏற்படவேண்டுமென்றே இப்படிப்பட்ட திட்டங்கள் 1857க்குப் பிறகு தீட்டப்பட்டன. பல்வேறு வழிகளில் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டது.
- மதத் தலைவர்களுக்கு லஞ்சம் : பிரிட்டிஷ் கலெக்டர் ரகசியமாக ஒரு பண்டிட்ஜியைச் சந்தித்து, பணம் கொடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசச் சொல்வார். அதே போல் ரகசியமாக ஒரு மௌல்வியைச் சந்தித்து பணம் கொடுத்து இந்துக்களுக்கு எதிராக அவரைப் பேச வைப்பார்.
- மறைக்கப்பட்ட வரலாறு : தொடக்கத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பல இந்து கோயில்களை இடித்தது உண்மை. ஆனால், பிற்காலத்தில் வந்த கிட்டத்தட்ட அனைவரும் (அக்பர் போன்றவர்கள்) இந்து கோயில்களுக்கு தொடர்ச்சியாக மானியங்கள் அளித்தும் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளில் கலந்துகொண்டும் மத ஒற்றுமையை வளர்த்தனர். ஆனால் நம் குழந்தைகளுக்கு இந்த இரண்டாவது பாகம் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. கஜினி முகமது சோமநாதர் கோயிலை உடைத்தார் என்றுதான் அவர்கள் வரலாற்றில் கற்கிறார்களே தவிர, திப்பு சுல்தான் போன்றவர்கள் இந்து விழாக்களில் பங்கேற்றார்கள் என்பதைக் கற்பதில்லை.
- தூண்டிவிடப்பட்ட மோதல்கள் : வகுப்புவாத மோதல்கள் அனைத்தும் 1857க்குப் பிறகே உருவாகின. பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது இசை வாத்தியங்களை ஒலிக்கவிடுவது, இந்து விக்கிரகங்களை உடைப்பது என்று மத உணர்வுகளைத் தூண்டிவிடும்படியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்படி வகுப்புவாதம் என்னும் நஞ்சு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நம் சமூகத்தில் புகுத்தப்பட்டது. 1947ல் பிரிவினை ஏற்படும்வரை இந்தச் செயல்பாடு தொடர்ந்தது. இப்போதும்கூட மத வெறுப்பை வளர்த்துவிட்டு குளிர் காய்பவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும்போதும் தொலைக்காட்சி சானல்கள் என்ன சொல்கின்றன? இந்திய முஜாஹிதின் அல்லது JeM அல்லது HUJI என்று ஏதாவதொரு அமைப்பு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாக எஸ்எம்எஸ் வந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு ஈமெயிலையோ எஸ்எம்எஸ்சையோ எந்தவொரு விஷமியும் யாருக்கும் அனுப்பிவைக்கமுடியும் அல்லவா? ஆனால், இதை மறுநாளே டிவியில் சொல்வதன்மூலம் எப்படிப்பட்ட தாக்கத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள் தெரியுமா? அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள், குண்டு வீசுபவர்கள் என்று இந்துக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், 99 சதவிகித மக்கள், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அமைதியையும் நன்மையையுமே விரும்புகிறார்கள்.
பாபர் மஸ்ஜித், ராம் ஜென்மபூமி கிளர்ச்சியின்போது, மீடியாவில் ஒரு பிரிவினர் (குறிப்பாக இந்தி அச்சு ஊடகம்) கர சேவகர்கள் போலவே செயல்பட்டதை மறக்கமுடியுமா?
பெங்களூரு பதட்டம்
‘அசாமில் நீங்கள் முஸ்லிம்களைக் கொன்றிருக்கிறீர்கள் எனவே இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.’ பெங்களூரு மற்றும் பிற இடங்களில் வசிக்கும் வடகிழக்கு இந்தியர்களுக்குச் சமீபத்தில் இப்படிப்பட்ட எஸ்எம்எஸ் செய்திகள் அனுப்பப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே, இது பதட்டத்தை ஏற்படுத்தியது. பெங்களூரு முஸ்லிம்களுக்கு இந்த விஷயம், தெரியவந்ததும் அவர்கள் வடகிழக்கு இந்தியர்களுக்கு உடனடியாக விருந்து தயார் செய்தார்கள். யாரோ சிலரின் தவறான வதந்திகளை நம்பாதீர்கள், முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களுக்கு எதிரிகள் அல்லர் என்றும் தெரியப்படுத்தினார்கள்.
இத்தகைய இழிவான வழிமுறைகளைச் சிலர் கையாள்வதை இந்தியர்கள் உணரவேண்டிய தருணமிது. சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் ஒன்றுபோல் மதித்து நடப்பதுதான். மாமன்னர் அக்பர் காட்டிய வழி இது. அவர் அனைத்து மக்களையும் ஒன்றுபோல் மதித்தார். அக்பர், அசோகர் போன்ற உயர்ந்த ஆட்சியாளர்களை உலகம் இதுவரை கண்டதில்லை. (Hinsa Virodhak Sangh Vs. Mirzapur Moti Kuresh Jamat குறித்த என் தீர்ப்பை இணையத்தில் பார்க்கலாம்.)
1947ல் இந்தியா சுதந்தரம் அடைந்தபோது, அதீதமான மத விருப்பங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. பாகிஸ்தான் தன்னைத் தானே ஓர் இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது போல் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்று நேருவுக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் அப்போது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், நம் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இந்தியா இந்து நாடு அல்ல அது மதச்சார்பற்ற நாடு என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதனால்தான், ஒவ்வொரு அம்சத்திலும் நம் அண்டை நாடான பாகிஸ்தானைக் காட்டிலும் நாம் மேலான நிலையில் இருக்கிறோம்.
மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பதல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதாகும். மதத்துக்கும் அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதாகும். அரசுக்கு மதம் கிடையாது என்பதாகும். என்னைப் பொருத்தவரை, இந்தியா ஒன்றுபட்டு இருப்பதற்கும் வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதற்கும் ஒரே மார்க்கம், மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதுதான்.
(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).
14 November 2012 வரலாறு 1857 சிப்பாய் புரட்சி, இந்தியா, இந்து, மதவாதம், முஸ்லிம், வகுப்புவாதம், வரலாறு
No comments:
Post a Comment