Sunday, January 6, 2013

மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு லஷ்கர்-இ தொய்பா பயிற்சி! - பாக். அதிகாரிகள் ரகசிய சாட்சியம்.


மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு லஷ்கர்-இ தொய்பா பயிற்சி! - பாக். அதிகாரிகள் ரகசிய சாட்சியம்.



மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு லஷ்கர்  இதொய்பா அமைப்பு தனது பயிற்சி முகாம்களில் பயிற்சி கொடுத்ததாக ஐந்து பாகிஸ்தான் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ரகசிய சாட்சியம் அளித்துள்ளதாக டெய்லி டான் பத்திரிக்கை ஞாயிறன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் உள்ள தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் ஒரு  நீதிமன்றத்தில் பாகிஸ்தான் குற்றபுலனாய்வு துறையை சேர்ந்த ஐந்து ஆய்வாளர்கள் அரசு தரப்பு சாட்சியங்களாக மேற்கண்ட சாட்சியத்தினை அளித்துள்ளார்கள்.   அரசு தரப்பு சாட்சியங்கள்  அளித்த ரகசிய வாக்குமூலத்தை நீதிபதி சௌத்திரி ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் பதிவு செய்தார்.

ஆய்வாளர்கள் தாங்கள் அளித்த வாக்குமூலத்தில், மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சகிர் ரஹ்மான் லக்வி உட்பட அனைத்து தீவிரவாதிகளும் கராச்சி, மன்சிரா, தட்டா மற்றும் முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள லஷ்கர்-இ- தொய்பா பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். இவர்களில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த லக்வி நவீன வெடிபொருட்களை உபயோகப்படுத்துவதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்ததாகவும், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதிக்கான லஷ்கர்-இ-தோய்பா தளபதியாக லக்வி செயல்பட்டார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் சிலருக்கு கராச்சியில் உள்ள கடப் நகரத்திற்கு அருகே உள்ள கடலில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும்  நீதிபதிகளிடம் அவர்கள் தெரிவித்தனர்.

சாட்சியங்களின் வாக்குமூலங்கள் சுதந்திரமாகவும், எந்தவிதமான மிரட்டல் இல்லாமலும் பதிவு செய்யப்பட்டதாக Federal Investigation Agency  யின் சிறப்பு வழக்கறிஞர் சௌத்திரி சுல்பிகர் அலி நீதிபதியிடம் தெரிவித்தார்.
லக்வி, க்வாஜா முஹம்மத் ஹாரிஸ் ஆகியோர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் ஆய்வாளர்களை குறுக்கு விசாரணை செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதை ஆய்வாளர்கள் நேரில் பார்த்தார்களா? என்ற கேள்விக்கு தாங்கள் ஒருபோதும் லஷ்கர்-இ-தோய்பா பயிற்சி முகாம்களுக்கு சென்றது இல்லை என்றும்,     குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயிற்சி பெற்றதை நேரில் பார்த்தது இல்லை என்றும், உளவாளிகள் மூலமாக தாங்கள் மேற்கண்ட  தகவல்களை பெற்றதாகவும்  ஆய்வாளர்கள் பதில் அளித்தனர்.

லக்வியின் வக்கீல் தெரிவிக்கையில், தன்னுடைய கட்சிக்காரர்கள்  மும்பை தீவிரவாத செயல்களில் செயபட்டதற்கான நேரடியான ஆதாரங்களை சாட்சியங்கள் (ஆய்வாளர்கள்)  அளிக்கவில்லை எனவும், உளவாளிகளிடமிருந்து பெற்றதாக கூறும்  தகவல்களை அவர்கள் ஒருபோதும் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
லக்வியோ அல்லது மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களோ அதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளிலோ அல்லது பயிற்சியிலோ ஈடுபட்டிருந்தது குற்ற புலனாய்வு துறைக்கு  முன்பே தெரிந்திருந்தால்  அவர்களுடைய பெயர்கள் ஏன் நான்காவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு அவர்களுடைய நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பு ஒரு பொய்யான கதையை தயாரித்திருக்கிறது என்றும், ஐந்து ஆய்வாளர்களுடைய சாட்சியங்கள் அந்த கதையில் ஒரு அத்தியாயம் என்றும் லக்வியின் வழக்கறிஞர் தெரிவித்தார். மீண்டும் விசாரனையை நீதிபதி டிசம்பர் 1 –ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ரகசிய வழக்கு விசாரணை பற்றி கருத்து தெரிவிக்காத அரசு வக்கீல், சாட்சி அளித்த அதிகாரிகள்  தற்போது மிகுந்த மன நிம்மதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் Voice over Internet Protocol இணைப்பை பெற பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவிற்கு எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்தனர் என்பதற்கான  சாட்சியத்தை இதே ஐந்து  அதிகாரிகள்தான் முன்னர் நீதிமன்றத்தில் அளித்தனர் எனபது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த  Voice over Internet Protocol இணைப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.
நவம்பர் 2008 – ல் மும்பையின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்கியதில்  166 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்தது யார் என்ற விவரம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் நம் ஆசை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குரல்  மாதிரியை பெறுவதற்கே நான்கு வருடங்களாகியும்  முடியாமல்  நம் அரசு நாக்கு தள்ளிவிட்டதே!

No comments:

Post a Comment