தகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1:
“மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது குடிமக்களின் அடிப்படை உரிமை.” பேச்சளவில் சொல்லப்பட்ட இந்த விடயத்தை உண்மையாக்க கொண்டு வரப் பட்டது தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். விகடன் வெளியீடாக வந்த’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை எழுதி இருப்பவர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி. இந்த நூல் முழுக்க பரக்கத் அலியின் உழைப்பு தெரிகிறது. இயன்றவரை எந்த வித ஒளிவுமறைவுமின்றி தன்னுடைய சேகரிப்புகளை எழுத்தாக்கம் செய்துள்ளார். இது புத்தக விமர்சனம் அல்ல. அதைத் தாண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டம் எவ்வாறு இந்தியாவிலும் மாநிலங்களிலும் சட்டமாக்கப் பட்டுள்ளது என்பதையும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இக்கட்டுரை படைக்கப் படுகிறது.
‘மக்களாட்சி மாண்பைக் கொண்ட தேசம் ‘ என மார்தட்டிக் கொள்ளும் இந்தியா மக்களைத் தனிமைப் படுத்தியே வந்தது. தேர்தல் திருவிழாக்களில் மட்டுமே குடிமக்கள் எஜமானர்களாக இருந்தார்கள். நிர்வாகம் பற்றி தகவல்கள் கேட்கப் பட்டாலும் அவைகள் குப்பைத் தொட்டிக்குச் சென்றதே ஒழிய, முறையான விளக்கம் அளிக்கப் படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் எதையும் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் சட்டப் பிரிவு 19-ல் சொல்லப்பட்ட பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் எல்லாமே எல்லாத் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதுதான்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஐ.நா சபையின் சார்பில் டில்லியில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஜவகர்லால் நேரு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். ” தகவல்கள் வேறு பட்டதாகவோ முரண்பட்டதாகவோ இருக்கலாம். பல்வேறு மாறுபட்ட வேறுபட்ட கருத்துகளின் குழப்பங்களின் மத்தியில்தான் உண்மை வெளியாகும். உண்மையான சுதந்திரமான தகவல் அறியும் உரிமையில் இருந்துதான் கருத்தாக்கம் உருவாக முடியும். அதிலிருந்து உண்மையை எடுத்துக் கொள்ள முடியும்”.
உலகத்தோடு ஒப்பிடுகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தியா மிகவும் பின் தங்கி விடவில்லை என்பது உண்மைதான். இந்தியாவில் இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாடு, கோவா, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா,அஸாம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய ஒன்பது மாநிலங்களில் இந்தச் சட்டம் கொண்டு வரப் பட்டிருந்தது.
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கான பிரச்சாரம் 1970 களில் தொடங்கப்பட்டதும், ஜனதா மற்றும் தேசிய முன்னணி ஆட்சிகளில் பலமுறை முயன்றும் அவை தோல்விகளில் முடிந்தன. முதன் முதலில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது தமிழகம் தான் !. தமிழக அரசால் 1997 மே 4 ம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்து சட்டம் இயற்றப் பட்ட போதிலும் , இச்சட்டத்தில் பல குறைகள் இருந்தன. பொதுமக்கள் தகவல் பெற வேண்டுமானால் துணை ஆட்சியாளர் மற்றும் அதற்கு மேலுள்ள அதிகாரிகளிடம் மட்டுமே தகவல்களைப் பெற முடியும் என்று சொன்னது சட்டம். மேலும் கேட்ட தகவல்கள் கிடைக்காத பட்சத்தில் , அரசால் அறிவிக்கப்பட்ட அதிகார அமைப்பிடம் மேல் முறையீடு செய்யலாம். இந்த அதிகார அமைப்பு எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த அதிகார அமைப்புக்கு எதிராக உரிமை மற்றும் குற்ற வழக்கு போன்ற எந்தவித சட்ட நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள முடியாது என தமிழக அரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சொல்லப் பட்டிருந்ததால் இச்சட்டம் பயனற்றுப் போனது. அரசு மற்றும் அதிகார அமைப்பின் செயல்பாடுகளில் என்னென்ன தகவல்களைப் பெற முடியும் என்ற தகவல்கள் தெளிவாக இல்லாததும், தகவல் கேட்டவரின் மனுக்கள் சம்பந்தப்பட்டவரைப் போய் சேர்ந்ததா என்பதை உறுதி செய்யும் அம்சங்கள் சட்டத்தில் சொல்லப் படாததால், இச்சட்டம் கடைசியில் உதவாமல் போய் விட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 நிறைவேறுவதற்கு முன்னால் தேசிய
முன்னணிக் கூட்டணி ஆட்சியில் ‘தகவல் அறியும் சுதந்திர சட்டம் -2002′ என்ற
பெயரில் சட்டம் நிறைவேறினாலும் தகுந்த கட்டமைப்புகளுடன் நிறைவேறாததும் பல
ஒட்டைகளுடனும் இருந்தது. ஆகையால் அது மக்களின் எதிர்பார்ப்பிற்குரிய
தீனியைப் போடவில்லை என்பதால் தோல்வியைத் தழுவியது.தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தைக் கொண்டு வருவதில் அருணா ராயின் ‘மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் ‘
என்ற அமைப்பும் ‘ தகவல் அறியும் உரிமை தேசிய மக்கள் பிரச்சார இயக்கமும் (
NCPRI எனப்படும் National Compaign for People Right to Information )தான்
முக்கியப் பங்காற்றியது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் (National Advisory
Counsil ) உறுப்பினரான அருணா ராயின் முயற்சிகளால் தான் தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தையும், வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தையும் மத்திய அரசு
நிறைவேற்றியது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் பல தொண்டு நிறுவனங்களிடம்
கருத்துக்களைக் கேட்டு 35 திருத்தங்களைக் கொடுத்தது. அருணா ராய் உட்பட பல
சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் பாராளுமன்ற நிலைக்
குழு முன் ஆஜராகி தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள். பாராளுமன்ற நிலைக்
குழு தலைவராக இச்சட்டம் கொண்டு வரும் நிலைக் குழுவின் தலைவராக இருந்தவர்
தமிழக காங்கிரஸ் எம்பி யான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீதான அவதூறுகள் என
ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் , வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணம்
மீட்பு, லோக்பாலை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது, விலைவாசி உயர்வு, மின்
வெட்டுப் பிரச்சினை, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என களங்கம்
தெரிவிக்க நூறு விடயங்கள் உண்டு என சொல்பவர்களும் தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தை 2005ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி கூட்டணி நிறைவேற்றி வைத்துள்ளது
ஒரு சாதனையே என பாராட்டுகிறார்கள் .அத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்த
பிறகு ஏண்டா…இச்சட்டத்தைக் கொண்டு வந்தோம் என ஐக்கிய முற்போக்குக்
கூட்டணியும் காங்கிரசும் விழி பிதுங்கி நிற்பதும், இப்போது அவற்றிலிருந்து
பல துறைகளுக்கு விலக்கு அளிக்க பலமுறை முனைந்து மூக்குடை பட்டுக்
கொண்டிருப்பதும் தனிக் கதை.
இதெல்லாம் இருக்கட்டும் . ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005
(Right to Information Act – 2005)’ என்றழைக்கப்படும் RTI மூலம்
உண்மையிலேயே பலனுள்ளதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன
தகவல்கள் கேட்கப் படலாம்? இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள
துறைகள் எவை? இச்சட்டம் மூலம் வினவப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் தகவல் பெற
முடிகிறதா? மனுவை எப்படி அனுப்புவது? யாருக்கு அனுப்ப வேண்டும்? தகவலைத்
தரக்கூடிய பொறுப்பு யாரையெல்லாம் சாரும்?மனுவில் எவ்வாறு கேள்விகள்
கேட்கப்பட வேண்டும்? அப்படி அனுப்பப்படும் மனுவிற்கு தகவல் தரவேண்டியதற்கான
கால அவகாசம் என்ன? மனுவை நிராகரிக்க இயலுமா? தனி நபரின் விவரங்களைப் பெற
இயலுமா?தகவல் தர மறுப்பவர்களுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும்? எந்த
அளவுக்கு அரசியல் தலையீடு உள்ளது? தகவல் அறியும் உரிமைப் போராளிகளுக்கு
பாதுகாப்பு உள்ளதா? மத்திய அரசு இச்சட்டத்திலிருந்து எவற்றிற்கு விலக்கு
அளிக்க முனைகிறது?
இவற்றிக்கான விடையை அடுத்த கட்டுரையில் காண்போம்.
No comments:
Post a Comment