ஐ.டி துறை நண்பா… புத்தகக் கண்காட்சியில் வினவு, நூல் ஆறு
அன்பார்ந்த நண்பர்களே புதிய கலாச்சரத்தில் வெளியான அமெரிக்க திவால் கட்டுரையும், வினவில் வெளியான ஐ.டி துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற கட்டுரையும் இதையோட்டி நடந்த விவாதங்களும் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அதில் வந்த முன்னுரையே இங்கே பதிவு செய்கிறோம்.
முன்னுரை:
ஐ.டி என்று பரவலாக அறியப்படும் தகவல் தொழில் நுட்பத் துறை சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. வீட்டு வாடகை உயர்ந்தது முதல் நட்சத்திர விடுதிகளின் வார விடுமுறைக் கொண்டாட்டம் வரை பல்வேறு விசயங்களில் இந்தத் துறையின் செல்வாக்கும் நமக்கு தெரிந்த விசயம்தான். தீடீரென்று பலரது வாழ்க்கையை ஜாக்கி வைத்து தூக்கிய பெருமையும் இத்துறைக்கு உண்டு. ஒரு காவியம் போல வியந்தோதப்படும் இந்தத் துறையின் இன்றைய நிலை என்ன?
மென்பொருள் தயாரிக்கும் அந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமையென்றால் கூதூகலம் அனைவரையும் பற்றிக் கொள்ளும். வாரத்தின் விடுமுறை நாட்களைக் கொண்டாடுவதற்கு நிறுவனமே பல பொழுது போக்கு ஏற்பாடுகளைச் செய்யும். ஊழியர்களின் பிறந்த நாளுக்கு பரிசு, மூன்று வேளையும் உயர்தர உணவு இலவசமாக அளிக்கப்பட்டது என அந்த பொற்காலம் சுபீட்சமாகத்தான் இருந்தது சில மாதங்களுக்கு முன்பு வரை. அதன் பிறகு என்ன ஏது என தெரியாமல் அந்தப் பொற்காலத்தின் கூரைகள் ஒவ்வொன்றாய் விழ ஆரம்பித்தன. இலவச உணவு ரத்து செய்யப்பட்டது. பல ஊழியர்கள் நீக்கப்பட்டனர். முக்கியமாக வெள்ளிக்கிழமை மாலையில்தான் இந்த ஆட்குறைப்பு வைபவங்கள் நடந்தேறின. மகிழ்ச்சியை அளித்து வந்த அந்த நாள் இப்போது பீதியை பற்றவைக்கும் நாளாக மாறியது.
அந்த நிறுவனத்தின் வயது எட்டென்றால் அந்த கூரூப் லீடர் ஏறக்குறைய ஆறு வருடங்கள் வேலை செய்திருக்கிறார். சம்பளம் ரூ.30,000. திருமணம், சொந்தவீடு, வங்கிக் கடன் என பல திட்டங்கள் அந்த சம்பளைத்தை வைத்து செயல்படுத்தியிருக்கிறார். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை அவரது வேலை பறிக்கப்பட்டதாக ஆணை வருகிறது. உத்தரவு வந்த சில மணித்துளிகளுக்குள்ளாகவே அலுவலக கணினி அவரது உத்தரவுகளுக்கு ஆட்பட மறுக்கிறது. விரக்தி கொப்பளிக்க அவர் கதறி அழுகிறார். தன் வேலை பறிக்கப்படும் அளவுக்கு எந்த குறையையும் செய்ய வில்லையே என அரற்றுகிறார். அவரது முன்னாள் சக ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்துகின்றனர். அவரது அழுகைக்கு பின்னே அந்த சம்பளத்தின் தரத்திற்கேற்ப கட்டியமைக்கப்பட்டிருந்த வாழ்க்கை இனி வாழ முடியாத ஒன்றாக மாறிவிட்டது அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கிறது. இனி அவர் புதிய வேலைக்கு முயன்றாலும் பழைய சம்பளத்தில் பாதி கிடைத்தால் பெரிய விசயம் எனுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஏன்?
அமெரிக்காவில் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலாகி உலகையே ஒரு பொருளாதார வீழ்ச்சியில் தள்ளிய நேரத்தில் அதைப் பற்றி புதிய கலாச்சாரத்தில் ஒரு பெரிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதையே வினவுத் தோழர்களும் அவர்களுடைய இணைய தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். பல வலைப்பூக்களும் இக்கட்டுரையை மறு பிரசுரம் செய்தன. பல ஆயிரம்பேர் படித்த அந்தக் கட்டுரையில் அமெரிக்கா நிறுவனங்கள் திவாலானதின் பின்னணியையும், குறிப்பாக முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத சூதாட்ட பொருளாதரத்தின் இயங்கு விதிகளையும் எளிமையாக விளக்கியிருந்தோம். தனியார் மயம், தாராள மயத்தின் தோல்வியும், அந்த நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு பல ஆயிரம் கோடி ரூபாயில் நிவாரண நிதி அளித்ததின் பின்னே மறைந்திருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோல்வியையும் குறிப்பிட்டிருந்தோம்.
இணையத்தில் வெளிவந்த இக்கட்டுரை பல நூறு வாசகர்களால் பாராட்டப்பட்டது. பலர் மறுமொழிகளின் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அந்தக் கட்டுரையும் மறுமொழிகளும் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரையின் தொடர்ச்சியாக வினவுத் தோழர்கள் ஜ.டி துறையைப் பற்றி ஒரு கட்டுரையை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதில் அமெரிக்கா திவாலின் பிரதிபலிப்பாக இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், ஐ.டி ஊழியர்கள் தமது எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக தொழிற்சங்கங்களில் திரளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் பல வாசகர்கள்- இத்துறையில் பணியாற்றுபவர்கள்- அவற்றை அலட்சியமாக மறுத்தார்கள். தங்களுக்கொன்றும் பாதிப்பில்லை எனவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்கள். சில வாசகர்கள் அந்தக் கட்டுரையின் சாரத்தை ஏற்றுக் கொண்டதோடு ஐ.டி துறையின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிஆதாரங்களுடன் தெரிவித்தார்கள். இங்கே அந்தக் கட்டுரையும் அதற்கான மறுமொழிகளையும் வெளியிட்டுள்ளோம்.
இக்கட்டுரை வெளியிட்டு இன்று ஒரிரு மாதங்கள் முடிந்து விட்டன. இன்று தகவல் தொழில் நுட்பத்துறையின் வீழ்ச்சியும், ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும் யாரும் மறுக்க முடியாத அளவுக்கு கண்கூடான யதார்த்தங்களாக மாறிவிட்டன. இதை முன்னறிந்து சொல்லும்போது மறுத்தவர்கள் இன்று அவர்களது மறுப்பைத்தான் மறுக்கவேண்டியிருக்கும். முதலாளித்துவத்தின் பயங்கரவாதமாய் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகியிருக்கும் இந்த பொருளாதாரச் சுனாமி இந்தியாவை மட்டுமல்ல பல நாடுகளையும் பதம் பார்த்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் 20,000 புள்ளிகளில் கும்மாளமிட்ட மும்பை பங்குச் சந்தை இன்று 10,000த்திற்கே தள்ளாடுகிறது. இந்த இழப்பில் ஏமாந்து பலர் தற்கொலை செய்திருக்கின்றனர்.
முதலாளித்துவத்தின் அநீதியான உலகமயம் எப்படிப் பார்ததாலும் இப்படித்தான் ஒரு அழிவை மக்களுக்கு தர முடியும். இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வதும், அதற்கெதிராய் செயல் படுவதும் காலம் நம்மிடம் கோரும் கடமையாகும். அந்த கடமைக்கு வாசகரை தயார் செய்யும் பணியில் இந்த நூலும் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
தோழமையுடன்
ஆசிரியர் குழூ,
புதிய கலாச்சாரம்.
ஜனவரி, 2009.
பக்கம் – 72, விலை ரூ.35
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment