Tuesday, January 22, 2013

பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
பதினாறு மணி நேர மின்வெட்டால் இருண்ட தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் புழுங்கி சாகிறார்கள். மின்சாரம் இன்றி கண் முன்னே அழியும் பட்டறை, விசைத்தறி, மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், தண்ணீரின்றி கருகும் பயிர்கள், கண்ணீரிலும் கடனிலும் தத்தளிக்கும் விவசாயங்கள், தூக்கமின்றி தவிக்கும் நோயாளிகள், முதியவர்கள். தூங்காமல் அழும் குழந்தைகள், வேலையிழந்து, இரவில் தூக்கமிழந்து பட்டினிச்சாவை நெருங்கும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளி வர்க்கம். நாள்தோறும் டெங்குவிற்கு பலியாகும் எண்ணற்ற அப்பாவி உழைக்கும் மக்கள். எப்போது மின்சாரம் வரும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கே தெரியாத அவலம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான்கே மாதங்களில் மின்வெட்டைப்போக்கி மிகை மின் மாநிலமாக்கிக் காட்டுவோம் என்று சொன்னார் முதலமைச்சர் ஜெயலலிதா. அட்சிக்கு வந்து இன்று 17 மதங்கள் ஆகின்றன. ஆனால், மின்வெட்டு 16 மணி நேரமாக அதிகரித்தது தான் நடந்துள்ளது. அது மட்டுமல்ல, 2013 ஜூன் மாதம் வரை நிலைமை மாறாது என்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் விசுவநாதன். பொய் சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கிய ஜெயலலிதா பேச மறுக்கிறார். எப்போது மின்சாரம் வரும் எனப் போராடினால் அம்மாவின் சார்பில் போலீசின் தடிக்கம்பு தான் வருகிறது. தினந்தோறும் மறியல், தடியடி மண்டை உடைந்தது என்ற செய்திதான் வருதேயன்றி, இத்தனை ஆயிரம் பேர் அடிபட்ட பின்பும் மின்சாரம் வந்தபாடில்லை. இந்நிலையில்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் மக்களிடத்தில் மாவட்டந்தோறும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்கள். மின்வெட்டை குறைக்கவோ மின் உற்பத்தியை அதிகரிக்கவோ வழி தெரியாமல் இந்த அரசாங்கம் தவிக்கவில்லை. வழி இருந்தும் வேண்டுமென்றே செய்ய மறுக்கிறது என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.இது ஆதாரமற்ற குற்றச் சாட்டு அல்ல. அதாரத்துடன் கூறுகின்றோம்.

சமச்சீர் மின்வெட்டை உடனே அமலாக்கு

தமிழகத்தின் அன்றாட மின் தேவை 12000 மெகாவாட். பற்றாக்குறை 4500 மெகாவாட். தற்போதைய உற்பத்தி 7500 மெகாவாட் மட்டுமே. போதிய மின் உற்பத்தி இல்லை என்கிறது அரசு. ஆனால் இந்த பற்றாக்குறையை தமிழகம் முழுவதற்கும் சமமாக பகிர்ந்து மின் வெட்டை அமல்படுத்தாமல் ஹீண்டாய், ஃபோர்டு, ரெனால்டு நிசான், டைம்லர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு 1800 மெகாவாட்டில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம். சென்னைக்கு 2200 மெகாவாட்டில் 23 மணி நேர மின்சாரம். இலட்சக்கணக்கில் சிறு குறு தொழில் நிறுவனங்கள், விவசாய பம்ப் செட்டுகள், கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் தமிழகத்திற்கு 3500 மெகாவாட்டில் 16 மணி நேர மின்வெட்டு. இந்த அநீதி அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தெரியாதா?
சென்னையில் பன்னாட்டு நிறுவனங்கள், மால்கள், நட்சத்திர விடுதிகள், அதிகாரவர்க்கம் பணக்காரர்கள் இருப்பதால் சென்னைக்கு சலுகை. கிராமங்களில் விவசாயத்துக்கு மின்சாரம் இல்லை. சென்னையில் கடைவீதிகளில் ஆடம்பர விளக்கு அலங்காரங்கள், ஏ.சி. இன்னபிற. விசைத்தறி, சிறுதொழிலுக்கு மின்சாரம் இல்லை. கார் கம்பெனிக்கு சலுகை விலையில் மின்சாரம். அவன் வெளியில் வாங்கலாம், ஜெனேரேட்டரில் உற்பத்தி செய்ய முடியும். இருந்தும் சலுகை. நமக்கு மின்வெட்டு. இது என்ன நியாயம்? பற்றாக்குறை என்றால் பகிர்ந்துண்பதுதானே நீதி? கக்கூசுக்கு ஏ.சி. போட்டிருப்பனுவனுக்கு 23 மணி நேர தடையில்லா மின்சாரம். வெளிச்சத்துக்கு ஒரு பல்பும், கொசுக்கடிக்கு ஒரு மின்விசிறியும் பயன்படுத்தும் ஏழைக்கு 16 மணி நேர மின்வெட்டா? சமச்சீராக மின்சாரத்தை விநியோகித்தால் மின் வெட்டின் பெரும்பகுதியை ஒரே நாளில் குறைக்க முடியும்.

முடக்கி வைத்திருக்கும் அரசு மின்நிலையங்களை உடனே இயக்கு

தமிழ்நாடு மின்வாரியத்திற்க்கு சொந்தமான குத்தாலம் மற்றும் வழுதூரில் உள்ள எரிவாயு மின்நிலையங்கள் பழுது நீக்கப்பட்டு இயங்கினால் 288 மெகாவாட் உடனே நமக்கு கிடைக்கும். தனியார் மின் நிலையங்கள் இலாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக மேற்டி அரசு நிறுவனங்களை முடக்கி வைத்திருப்பதைத் தவிர வேறு காரணம் என்ன? மேலும் உற்பத்திக்கு முழுமையாக பரிசோதிக்கப்பட்டு மின்சார கட்டமைப்பில் இணைக்கப்பட்டு உற்பத்திக்கு தயாராக உள்ள மேட்டூர், வடசென்னை, வள்ளூர் அரசு மின் உற்பத்தி நிலையங்களை உடனே இயக்கினால் இதன் மூலம் 1547 மெகாவாட் மின்சாரம் உடனே பயன்பாட்டிற்கு கிடைக்கும். இருந்தும் இயக்காமல் இருப்பதற்க்கு காரணம் என்ன? ஆந்திர மாநிலம் சிம்மத்திரி அனல் மின்நிலையத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை நாம் கேட்டு பெறாததால் சட்டத்திற்கு புறம்பாக மத்திய அரசு ஆந்திர மாநிலத்திற்கே தாரைவார்த்துள்ளது. ஆகமொத்தம் 2025 மெகாவாட் மின்சாரத்தை அரசு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்காமல், தமிழக அரசு முடக்கி வைத்துள்ளது. ஆனால் இதற்கு காரணமோ விளக்கமோ கூறப்படுவதில்லை. இது அரசுத்துறையின் திறமையின்மை அல்ல.

டாமின் குவாரிகளிலிருந்து கிரானைட் திருடுவதற்கு பி.ஆர்.பி.க்கு எல்லா அரசுகளும், அதிகாரிகளும் துணை நின்றது போல, தனியார் தொலைபேசி வளருவதற்காக பி.எஸ்.என்.எல் சேவையை அரசும் அதிகாரிகளும் திட்டமிட்டே முடக்குவது போல, ஆம்னி பஸ் முதலாளிகளின் கொள்ளைக்காக அரசுப் பேருந்துகளை நொண்டியாக்கி வைத்திருப்பதைப் போலத்தான் இதுவும். அரசு மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்க வேண்டுமானால், மின் உற்பத்தி, விநியோகத்திலிருந்து தனியார் முதலாளிகள் அகற்றப்பட வேண்டும்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அரசுடமையாக்கு

மின் உற்பத்தியில் தனியார் முதலாளிகளை நுழைத்தது தான் இன்றைய மின் வெட்டுக்கும், கட்டண உயர்வுக்கும் காரணம். அப்பல்லோ மருத்துவமனைக்குச் சொந்தமான பெள்ளைப் பெருமாநல்லூர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தமிழ்நாடு மின்வாரியம் வாங்கும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.17.78. மின்சாரத்தை வாங்காத போது மாநில மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டப்படி செலுத்திய தண்டத் தொகை 330 கோடி ரூபாய்  இவை சில எடுத்துக்காட்டுகள். தமிழ்நாடு மின்சார வாரியம் 1995ல் தனியாரிடமிருந்து செய்த மின்சார கொள்முதல் 4% மட்டுமே, ஆனால் 2005ல் 35% இன்று இன்னும் அதிகம். அரசு மின் நிலையம் இயங்கினால் இவர்களது மின்சாரத்தை வாங்க ஆளிருக்காது மேலும் மின்சாரம் எந்த அளவுக்கு பற்றாகுறையாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் ஈட்ட முடியும். இது தான் நோக்கம்

மின்வெட்டை பொறுக்க முடியாமல், கேட்கிற விலையை கொடுப்பதற்கு நம்மை ஒப்புக் கொள்ள வைப்பது தான் இவர்களது நோக்கம். மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் தனியார் முதலாளிகளிடம் கொடுத்து விட்டது. இதற்குப் பெயர் தான் ஒழுங்குமுறை ஆணையம். இனி ஆண்டுக்கு இரண்டு முறையோ, ஒரு முறையோ கட்டண உயர்வு உண்டு என்று அறிவித்து விட்டார்கள். எனவே இன்றைய மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வரவும், வருங்காலத்தில் மின்வெட்டு வராமல் தடுக்கவும், மின்சாரம் தனியார் மயமாவதை தடுத்தாக வேண்டும்.

மின்வெட்டுக்கு எதிராக அடையாள உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்துவிட்டோம். உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தும் ஒன்றும் ஆகவில்லை. மண் குதிரைகளான சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பி பயனில்லை. மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது. மின்வெட்டை சகித்துக் கொள்ளவும் முடியாது. எதைச் செய்தால் மின்சாரம் வருமோ அதைச் செய்ய வேண்டும். அரசு அதிகாரத்தை முடக்கும் வகையில் மக்கள் அதிகாரம் என்ற பவரை நம் கையில் எடுத்தால் பவர் (மின்சாரம்) வந்தே தீரும்.

அமெரிக்க வால்ஸ்ட்ரீட் போராட்டத்தில் இலட்சக் கணக்கான மக்கள் பலநாட்கள் அங்கேயே முகாமிட்டு சட்டத்தை முடக்கி நத்திய போராட்டத்தால் அமெரிக்க அரசாங்கம் பணிந்தது. இட ஒதுக்கீடுகேட்டு குஜ்ஜார் இன மக்கள் ஆயிரக் கணக்கில் பல நாட்கள் தண்டவாளத்தை மறித்து அரசை முடக்கியதால் அரசை முடக்கியதால் ராஜஸ்தான் அரசு பணிந்தது.

மின் வெட்டுக்கு எதிரான நமது போராட்டம்.. .. .. கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களாய் ஓரணியில் திரள்வோம்! வெற்றி பெறுவோம்!

தமிழக அரசே!
  • சமச்சீர் மின்வெட்டை உடனே அமலாக்கு!
  • முடக்கி வைத்திருக்கும் அரசு மின் நிலையங்களை உடனே இயக்கு!
  • தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அரசுடமை ஆக்கு!

No comments:

Post a Comment