Monday, January 7, 2013


தன் நாட்டிற்கு தேவையானவை நிறைவேறுவதற்க்கு இடைஞ்சலாக இருக்கும் பிற நாடுகளை தண்டிக்கவேண்டும் என்பது எல்லா நாடுகளுக்கும் இருக்கும் ஆவல் தான். சில நாடுகளால் முடியும். பிற சில நாடுகளால் முடியாது. இன்று எஞ்சிய ஒரே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவால் இதுவரை சர்வ சாதரணமாக பிற நாடுகளின் மீது படையெடுக்க முடிந்திருக்கிறது. போரிடுவதற்கு முன் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை எதிரி நாடல்ல. தன் நாட்டிற்க்குள் இருக்கும் காங்கிரஸ் தான். கேப்பிட்டால் ஹில் அனுமதிக்கு பிறகு தான் எதுவும் செய்ய முடியும் என்ற ஒரு நிலை இருந்து வந்திருக்கிறது. கால காலமாய் நிர்வாகச் சிறகிற்க்கும், சட்டச் சிறகிற்க்கும் பிரச்சனைகள் இருந்தாலும், சட்டச் சிறகை உரிய மரியாதையுடன் நடத்தியும், வீட்டோ பலத்தை விரயமாக்காமலும், தக்க விவாதங்களுக்குப் பிறகே வழி வழியாக வந்த குடியரசுக் கட்சிகளும், ஜனநாயக கட்சிகளும் பிற நாடுகளின் மேல் போர் தொடுத்திருக்கிறது. 60களின் இறுதிகளில் ஜனநாயக கட்சியின் லிண்டன் ஜான்சன் நடத்திய வியட்நாம் போர், அதற்கு பின் 90களின் ஆரம்பங்களில் குடியரசு கட்சியின் முதலாம் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் நடத்திய ”ஆப்பரேஷன் டெஸர்ட் ஸ்ட்ராம்”  ஆகியவைகள் கூட இந்தக் கோட்பாடுகளை மீறவில்லை. சட்டச் சிறகில் இருக்கும் சில நல்ல இதயங்கள் எப்பொழுதுமே அமெரிககாவின் அநீதியான போர்களுக்கு உடன் படாமல் முட்டுக் கட்டை போட்டு வந்திருக்கிறார்கள். அதனால் தான் தினந்தோறும் ஒரு போர் என்று அமெரிக்கா கிளம்பி விடாமல் தடுக்க முடிந்து வந்தது. ஆனால் சமீப காலங்களில் காங்கிரஸிர்க்கு அழுத்தங்கள் கொடுக்கும் ஒரு சில யுக்திகளை கையாண்டு வந்திருக்கிறது நிர்வாகச் சிறகு. இந்த அழுத்தங்களின் முன் வாயில்லா பூச்சியாக படிந்து போகும்படி சட்டச் சிறகின் கட்டுப்பாடு மற்றும் சமன்படுத்தும் இயந்திரம் பழுது அடைந்து வருகிறது.

(Operation Desert Storm - Courtesy - Wikipedia)


அடுத்தக் கட்ட இடைஞ்சல் பன்னாட்டு மன்றம். அமெரிக்க நிற்வாகச் சிறகு பன்னாட்டு மன்றத்தை ஒரு கிள்ளுக் கீரையாகவே மதித்து வந்திருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பன்னாட்டு மன்றம் என்ற அமைப்பு ஒரு உணவு விநியோக இயக்கமே. அமெரிக்கா பன்னாட்டு மன்றத்திற்கு அதற்கு மேல் எந்த ஒரு அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. 2001 இறுதியில் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ”பன்னாட்டு மன்றம் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஈராக்கின் மேல் படையெடுக்கும்” என்று திட்ட வட்டமாக கூறியதும் இன்றைய கால பன்னாட்டு மன்ற பாதுகாப்பு மன்றத்தின் இயலாமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அன்றைய செக்ரட்டரி ஜெனரல் கோஃபி ஆனன் இதை வெளிப்படையாகவே கூறிவிட்டது நினைவிருக்கலாம். அப்படியென்றால் பன்னாட்டு மன்றத்தின் பணிகள் மிகவும் சுறுக்கபட்டுவிடுகிறதா? இது இயற்க்கையாக நடந்து வருகிறதா? இல்லை திட்டமிட்ட சதியா? இறுதியில் பன்னாட்டு மன்றம் அதன் எல்லா அதிகாரங்களையும் இழக்கச் செய்து, அதனை “லீக் ஆஃப் நேஷன்ஸ்”க்கு நேர்ந்த முடிவிற்க்கு தள்ளி விடுவதே உறுப்பு நாடுகளின் எண்ணமா? அதுவும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப்ப் பார்க்கும் பொழுது சதியாக இருக்கலாம் என்பது  நம்பும் படியாகவே உள்ளது.
பன்னாட்டு மன்றம் பல விதங்களில் அமெரிக்க வெளியறவு கொள்கைகள், குறிப்பாக குடியரசு கட்சியின் கொள்கைகள், மேலும் குறிப்பாக ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் கொள்கைகள் மற்றும் ஆசை, அமிலாஷைகளிற்கு நடுவே இடைஞ்சலாக நின்று கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகளை அடியோடு வேறறுக்க ரீகன் காலம் முதல் பல அலோசனை-குழு (think-tank) சிந்தித்துக் கொண்டு தானிருந்தார்கள். 1997ல் அதற்க்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு Project for the New American Century (PNAC) என்று பெயர். (Project Manhattan என்று அணுகுண்டு தயரிப்பிற்கு ஒரு பெயர் இருந்தது நினைவிருக்கலாம்.  PNACக்கும் ஒருவிதத்தில் ஒரு பெரிய அணுகுண்டு தான்). குடியரசு கட்சியின் நியோ-கான் குழு 2006 வரையில் மிகவும் மும்மரமாக இந்த ஏற்ப்பாட்டில் செயல் பட்டு வந்தது. டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், டிக் ஷெய்னி, பால் உல்ஃபாவிட்ஸ், பில் கிஸ்டால் மற்றும் பலர் இதன் மைய அச்சு. அவர்கள் கொளகை “குளொபலைசேஷன்” (வர்த்தக கண்ணோட்டத்தில் அல்ல – அரசியல் கண்ணோட்டத்தில்; ஆனால் வர்த்தகம் உள்ளடங்கியது). அதாவது அமெரிக்கா மேலே, மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவின் கீழே. இதன் அர்த்தம் என்ன வென்றால் உலகை ஆள ஒரு மைய அரசே இருக்கவேண்டும். அந்த மைய அரசு அமெரிக்கா. மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்கா சொல்வது போல் கேட்டு அதன் படி எதிர்ப்பின்றி நடக்க வேண்டும். அப்படி ஒரு ”வேர்ல்ட் ஆர்டர்” வந்தால் செல்லாக் காசாகிப் போய்கொண்டிருக்கும் பன்னாட்டு மன்றத்திற்கு நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம், தன் இஷ்டப்படி ஆடலாம், தன் இஷ்டப்படி பிற நாடுகளைஆட்டி வைக்கலாம் என்பது அமெரிக்காவின் கனவு. இது பகல் கனவல்ல. பீதியை விளைவித்த ஒரு உண்மை. இதைச் செயலாக்கும் முதல் திட்டமே எப்பாடு பட்டாவது ஜார்ஜ் புஷ்ஷை ஜனாதிபதி ஆக்குவது என்பது என் யூகம். அதன் பிறகு நடந்த செப்டம்பர் 11, 2001 திவிரவாத சம்பவங்கள் இவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. வர்த்தக பலத்திற்கு ஈராக்கின் எண்ணெய், ஈரானை முற்றுகையிடல் , ஏன் அணைத்து மத்தியக் கிழக்கு நாடுகளையுமே கைக்குள் கொண்டு வருதல், வட கொரியாவை அடக்குதல் எல்லாம் இதன் பரந்த திட்டங்களின் சில பகுதிகள் தான். சேச்சன்ய தீவிரவாதத்தின் மூலம் ரஷ்யாவிற்கு தலைவலி கொடுத்தல, யுக்ரெய்ன் நாட்டின் உள் நாட்டு குழப்பத்திற்கு துணைபோதல் எனறு பல இடஙகளில் அமெரிக்க கைவைக்கும் பொழுதெல்லாம் PNAC பார்வையில் பார்த்தால் எல்லாவற்றிற்கும் ஒரு உள்ளார்த்தம் இருப்பதாக தோன்றும்.
About these ads

No comments:

Post a Comment