பின்லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் பற்றிய சில விபரங்கள் வெளியிடப்படுவதை, சி.ஐ.ஏ. அனுமதித்திருக்கிறது. இவர், அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளருடன் ஒரு சந்திப்பை நடாத்தியிருக்கிறார் என்பது பற்றிய செய்தியை விறுவிறுப்பு.காம் வெளியிட்டிருந்தது. (அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)
இவரை அடையாளப்படுத்த, ‘ஜோன்’ என்ற ஒற்றைப் பெயரை மாத்திரம் வெளியிட அசோசியேட்டட் பிரஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுதியிருந்தோம். அதைத் தவிர, இவரது வேறு அடையாளங்களையோ, உருவ அமைப்பைப் பற்றியோ வெளியே சொல்வதில்லை என உறுதிமொழி வாங்கப்பட்டுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்திருந்தது.
இவரது அடையாளம் வெளியானால், பின்லேடனின் மரணத்துக்குக் காரணமாக இருந்த இவர், அல்-காய்தாவினரால் இலக்கு வைக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
சி.ஐ.ஏ.யில் பின்லேடன் வேட்டை புரொஜெக்டில் ஜோன் ஈடுபட்டிருந்த 10 வருடங்களில் அவர், தனக்குக் கொடுக்கப்பட்ட பதவி உயர்வை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். பின்லேடனைப் பிடித்த பின்னர்தான் பதவி உயர்வு என்று பிடிவாதமாக, அதே பதவியில் தொடர்ந்திருக்கிறார்.
பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அங்கு இருப்பவர் அவர்தான் என்பதை உறுதிப்படுத்திய நபரும் இந்த ஜோன்தான்.
இவரது உறுதிப்படுத்தல் கிடைத்த பின்னரே, பின்லேடன் வேட்டைக்கான நாள் குறிக்கப்பட்டது. அமெரிக்க அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர்களில் சென்று அந்த ஒப்பரேஷனை நடாத்துவதை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவும் மற்றையவர்களும் பார்ப்பதற்கு வசதியாக லைவ் ஒளிபரப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஜனாதிபதியுடன் அதே அறையில் இருந்து அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்கு இந்த ஜோனும் அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் ஒரு போட்டோ மாத்திரம் வெள்ளை மாளிகை அதிகாரிகளால் வெளியே ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட போட்டோவில் ஜோனின் முகம் தெரியாதபடி பார்த்துக் கொள்ளப்பட்டது.
இந்தக் கட்டம்வரை எல்லாமே சிறப்பாக நடந்தன.
“கொடுக்கப்பட்டுள்ள போட்டோவில் பிரேமுக்கு வெளியே நிற்பவர்தான், ஜோன்” என்று கூறியிருந்தார்கள். அந்த போட்டோவின் பிரேமுக்கு வெளியே நின்றிருந்த அவரது உடல் பகுதி மாத்திரம் போட்டோவில் தெரிந்தது.
அது மாத்திரமா? அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற டை தெளிவாகத் தெரிந்தது. போட்டோவில் தெரிந்த அவரது ஒரு பகுதி உடலமைப்பிலிருந்து, சராசரியைவிட அதிக உயரமுடைய நபர் என்பதும் தெரிந்தது.
முதலாவது போட்டோ வெளியிடப்பட்ட இரு தினங்களின்பின், வெள்ளை மாளிகை வேறு சில போட்டோக்களையும் வெளியிட்டது. அந்த போட்டோக்கள் ஒன்றில், மஞ்சள் டை அணிந்த, சராசரியைவிட அதிக உயரம் உடைய நபர் ஒருவர் நின்றிருந்தார்.
ஜோன் யங் என்ற புலனாய்வு எழுத்தாளர், இந்த விபரங்களை வைத்துக் கொண்டு, மர்ம மனிதராக சி.ஐ.ஏ.யால் உருவகப்படுத்தப்பட்ட நிஜ ஜோன் யார் என்பதைக் கண்டுடித்ததாக, நியூயோர்க் ஆப்சேர்வர் பத்திரிகை விஷயத்தை வெளியே கொண்டு வந்திருக்கின்றது.
போட்டோ பிரேமுக்கு வெளியே அவர் நிற்கும்போது அணிந்திருந்த மஞ்சள் டையும், அவரது முகம் தெரியும் போட்டோவிலுள்ள மஞ்சள் டையும் ஒன்றுதான் என்பது ஆய்வில் நிருபிக்கப்பட்ட பின்னரே, இந்த விபரங்கள் அடங்கிய கட்டுரையை பிரசுரிக்க நியூயோர்க் ஆப்சேர்வர் பத்திரிகை தயாரானது.
கட்டுரையைப் பிரசுரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டவுடன் சி.ஐ.ஏ.யின் லாங்க்லி தலைமைச் செயலகத்தைத் தொடர்பு கொண்ட நியூயோர்க் ஆப்சேர்வர் பத்திரிகை, “நீங்கள் மர்ம மனிதராக வைத்திருக்கும் ஜோன் யார் என்பதை நாம் கண்டு பிடித்து விட்டோம். அது பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?” என்றும் கேட்டிருக்கின்றது.
இந்தக் கட்டுரை வெளியாகாமலிருக்க சி.ஐ.ஏ. கடும் முயற்சிகளைச் செய்தது. ஆனால், கட்டுரை வெளியாகி விட்டது.
சி.ஐ.ஏ.யின் துணை இயக்குனர் ஜோன் மெக்லோகிளின், “உங்களை எச்சரிக்கிறேன். அந்த மனிதரின் பெயரை வெளியிடாதீர்கள்” என்று கூறியது மாத்திரம், பத்திரிகையால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கட்டுரையையும் போட்டோவையும் வெளியிட்டுள்ள பத்திரிகை, அவரது பெயரை மாத்திரம் வெளியிடவில்லை.
அமெரிக்கர்களால், ‘சூப்பர் ஸ்பை’ என்று கொண்டாடப்பட்டும், மர்ம மனிதராக வைக்கப்பட்டிருந்த ஜோனின் முகம், இப்போது வெளியே தெரிந்து விட்டது.
No comments:
Post a Comment