Monday, January 7, 2013

வரலாற்றை மாற்றிய செங்கோட்டை – 1

செங்கோட்டை – டில்லியில் உள்ள பிரதான சின்னங்களில் ஒன்று. இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த முக்கிய சம்பவங்கள் பல செங்கோட்டையில் நிகழ்ந்துள்ளன. முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் ஷாஜகானால் செங்கோட்டை கட்டப்பட்டது . 1648  தொடங்கி சுமார் 200 ஆண்டுகள் செங்கோட்டை முகலாயர்களின் அரண்மனையாகவும் தர்பாராகவும் இருந்து வந்துள்ளது.
அமைச்சர் பிரதானிகள் படை சூழ, அமீர்களுக்கு மத்தியில் முகலாய அரசர்கள் செங்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். முதலில் ஷாஜகான், அவரைத் தொடர்ந்து அவுரங்கசீப், பின்னர் ஏராளமான மன்னர்கள் செங்கோட்டையில் ஆட்சி செய்திருக்கிறார்கள். அரசர்களைக் காண ஆயிரக்கணக்கான தூதுவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கின்றனர். குதிரை குளம்படி சத்தமும், பேகம்களின் கொலுசொலி சத்தமும் கேட்ட செங்கோட்டை 1857ல் பெரும் சரித்திர மாற்றத்தை எதிர்கொண்டது. மாற்றம் என்பதைவிட மாற்றங்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
முதல் மாற்றத்தில் முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, ஆங்கிலேயர்களின் ஆட்சி உறுதி அடைந்தது. பின்னர், ஏறத்தாழ 90 ஆண்டுகள் கழித்து இரண்டாவது மாற்றம் நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இந்தியா என்ற ஜனநாயக நாடு உதயமானது. இந்த மாற்றங்களுக்குக் காரணமான சம்பவங்கள் ஒருவிதத்தில் செங்கோட்டையில்தான் நடைபெற்றன. செங்கோட்டையில் நடைபெற்ற இரண்டுமே சரித்திர முக்கியத்துவம் பெற்ற வழக்குகள் (இவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு முக்கிய வழக்கும் செங்கோட்டையில் நடைபெற்றது, அது தான் மகாத்மா காந்தி கொலை வழக்கு).
ஒரு வழக்கில், தேச துரோக குற்றச்சாட்டு நாடாளும் மன்னர் மீது சுமத்தப்பட்டது. இன்னொன்று நாட்டை பாதுகாக்கும் இராணுவ அதிகாரிகளின் மீது சுமத்தப்பட்டது. இரண்டு வழக்குகளுக்கும் சரியாக 88 ஆண்டுகள் இடைவேளை இருந்தது. இரண்டு வழக்குகளையும் நடத்தியது ஆங்கிலேய அரசு. முதல் வழக்கு முடிவுற்ற பிறகு, இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆளுமை வலுவடைந்தது. இரண்டாவது வழக்கின் முடிவில் இந்தியா மீதான ஆங்கிலேயர்களின் அதிகாரம் தளர்வடைந்தது. நாம் இப்பொழுது அந்த இரண்டாம் வழக்கைப்பற்றிதான் பார்க்கப்போகிறோம். இருப்பினும் செங்கோட்டையில் நடந்த முதல் வழக்கைப்பற்றி சிறிதேனும் தெரிந்து கொள்வோம்.
0
250 ஆண்டுகளுக்கு மேலாகப் பரந்து விரிந்து இருந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விரைவாக சுருங்கத் தொடங்கியது. 1837ம் ஆண்டு இரண்டாம் பகதூர் ஷா சாஃபர், அவருடைய தந்தையான அகமது ஷா இறந்ததால் பதவிக்கு வந்தார். அப்பொழுது முகலாயர்களின் சாம்ராஜ்ஜியத்தின் விஸ்தீரனம்  செங்கோட்டையுடன் அடங்கிவிட்டது. பகதூர் ஷா பதவி ஏற்கும் சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள அநேக இடங்களைக் கைப்பற்றிவிட்டது, அல்லது தங்கள் வசம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது.
பகதூர் ஷா பேருக்குத்தான் அரசர். அவரை ஒரு பொம்மை அரசராகத்தான கிழக்கிந்திய கம்பெனி நடத்தி வந்தது. பகதூர் ஷாவுக்கு கிழக்கிந்திய கம்பெனி ஓய்வூதியம் கொடுத்தது. மேலும் பகதூர் ஷா ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் வரி வசூல் செய்ய அனுமதியும் வழங்கியது. பகதூர் ஷா செங்கோட்டையில் ஒரு சிறிய படையையும் பராமரித்து வந்தார். அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. அவர் சந்தோஷமாக ஆயிரக்கணக்கான கஜல்கள் எழுதினார். மிர்சா காலிப் என்ற பெரும் புகழ் பெற்ற உருது கவிஞர் பகதூர் ஷாவின் அரசவையைச் சேர்ந்தவர்தான்.
கஜலும் கவிதையுமாக இனிமையாக காலம் கழித்து வந்த 82 வயது பகதூர் ஷா அரசரின் வாழ்க்கையில் விதி சுனாமி போல தாக்கியது. கிழக்கிந்திய கம்பெனி தான் இந்தியாவில் கைப்பற்றி ஆட்சி செலுத்தி வந்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ஒரு ராணுவத்தை உருவாக்கியிருந்தது. அந்த ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர்கள், ஆனால் வீரர்கள் அல்லது சிப்பாய்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள். இந்த சிப்பாய்களுக்கு ஆங்கிலேயர்கள் போர் பயிற்சி கொடுத்து, தேவையான சமயங்களில் மட்டும் ராணுவத்தைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினார்கள். சிப்பாய்களில் இந்துக்களும் இருந்தனர், முஸ்லிம்களும் இருந்தனர்.
கிழக்கிந்திய கம்பெனி 1853ம் ஆண்டு வாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கியைத் தன்னுடைய இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தத் துப்பாக்கியில் காகிதத்தால் சுற்றப்பட்ட வெடிமருந்து நிரம்பிய தோட்டா பயன்படுத்தப்பட்டது. துப்பாக்கியில் அந்த தோட்டாவை நிரப்பவேண்டும் என்றால், தோட்டாவைச் சுற்றி இருக்கும் காகிதத்தை வாயால் கடித்து பிய்த்து எடுக்கவேண்டும். இதில் என்ன சங்கடம் என்றால் அந்த காகிதத்தில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பசை தடவப்பட்டிருந்தது.
இந்துக்களுக்கு மாடு புனிதமானது. அதனால் மாடுகளைக் கொன்று அதனுடைய கொழுப்பில் தயாரிக்கப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்தனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை பன்றி என்பது ஹராம். தீண்டக்கூடாத ஒரு மிருகம். அதனால் அவர்களும் பேப்பர் தோட்டாவைப் பயன்படுத்த விரும்பவில்லை. அவர்கள் இப்படிப் புரிந்துகொண்டார்கள். மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பேப்பர் தோட்டாக்களை நம்மை பயன்படுத்த வைப்பதன் வாயிலாக நம் சாதி, மத நம்பிக்கைகளை வெள்ளையர்கள் போக்கடிக்க முயல்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. கூடுதலாக, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும் இந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறது என்றொரு புரளியும் பரவியது.
விளைவாக, சிப்பாய் புரட்சி வெடித்தது. புராட்சிக்கு என்ஃபீல்ட் தோட்டாக்கள் மட்டும் காரணமில்லை. வாரிசில்லாத இந்திய ராஜ்ஜியங்களைக் கிழக்கிந்திய கம்பெனி எடுத்துக்கொண்டது. அதிகமான நில வரி வசூலிக்கப்பட்டது. ராணுவத்தில் பதவி உயர்வில் ஆங்கிலேயர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் மேற்சொன்ன நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மக்கள் புரட்சியில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். அதனால்தான் 1857ல் ஏற்பட்ட சிப்பாய் புரட்சியை முதல் விடுதலைப் போர் என்று சரித்திர ஆசிரியர்கள் அழைக்கிறார்கள்.
ஆனால் இதற்கும் மன்னர் பகதூர் ஷாவுக்கும் என்ன தொடர்பு? ஒன்றுமில்லைதான். ஆரம்பத்தில், கல்கத்தாவில் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய படைப் பிரிவில் உள்ள ஏனைய சிப்பாய்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மங்கள் பாண்டே கொல்லப்பட்டார். அவருடன் பணிபுரிந்த படைப்பிரிவு கலைக்கப்பட்டது. ஆனால் பெரிய வன்முறை எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், கல்கத்தாவை தொடர்ந்து உத்திரப் பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பெரிய அமளி துமளியே ஏற்பட்டது. சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் கொன்றுவிட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த போர்க்கொடி உயர்த்திய மற்ற சிப்பாய்களையும், ஏனையக் கைதிகளையும் விடுவித்துக் கொண்டு டெல்லியை நோக்கிப் புறப்பட்டனர்.
டெல்லியில் செங்கோட்டையில் பகதூர் ஷாவை சந்தித்து நீங்கள்தான் எங்களுடைய போராட்டத்தை வழி நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பகதூர் ஷா என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். இதற்குள் அவரது அரசவையில் இருந்தவர்கள்  இதுதான் சமயம் என்று புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களுடன் சேர்ந்து கொண்டு கண்ணில் பட்ட ஆங்கிலேயர்களை எல்லாம் தாக்க ஆரம்பித்தனர். ஏராளமான ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உறைவிடங்கள் தாக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போயிற்று. வெகுநாள்களாக கூட்டாமல் இருந்த தன்னுடைய அரசவையை பகதூர் ஷா கூட்டினார். போராட்டத்துக்குத் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
புரட்சி, கலவரம், முதல் விடுதலைப் போர் என்று எப்படி அழைத்தாலும் உண்மை இதுதான். போராட்டம் கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு உட்பட்ட சென்னை மற்றும் மும்பை மாகாணப் பகுதிகளில் மட்டும் புரட்சி ஏதுமில்லாமல் அமைதியாக இருந்தது. ஆனால் வட மற்றும் மத்திய இந்தியாவில் நிலைமை வேறு. ஜான்சியில் ராணி லட்சுமி பாய் போர்கொடி தூக்கினார். கான்பூரில் நானா சாகிப் மற்றும் அவருடைய தளபதி தாத்தியா தோப் எதிர்ப்பு தெரிவித்தனர். கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய மற்ற பகுதிகளிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ராணுவத்தை வரவழைத்து புரட்சியை ஒடுக்கியது. ராணி லட்சுமி போராட்டத்தில் இறந்து போனார். நானா சாகிப் ஆங்கிலேயர்களிடம் அகப்படாமல் நேபாளத்துக்குத் தப்பித்து ஓடியதாக சொல்லப்படுகிறது. தாத்தியா தோப் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மற்ற போராட்ட கைதிகளெல்லாம் பீரங்கியின் முனையில் கட்டப்பட்டு, பீரங்கி குண்டுகளால் சிதறடிக்கப்பட்டனர்.
போராட்டத்துக்கு தலைமை தாங்குவதாக சொன்ன கிழ அரசரும் அவரது சகாக்களும் எங்கே என்று ஆங்கிலேய ராணுவம் தேடியது. பகதூர் ஷா சாஃபரும் அவருடைய மகன்களான மிர்ஸா மொகல், மிர்ஸா கிஸிர் மற்றும் பகதூர் ஷாவின் பேரன் மிர்ஸா அபு பக்கர் ஆகியோரும் ஹுமாயூனின் கல்லறையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே கம்பெனி ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஹட்ஸன், ஹுமாயூனின் கல்லறையை தன்னுடைய வீரர்களுடன் சுற்றி வளைத்தார். பகதூர் ஷாவை கைது செய்தார். பிடிபட்ட பகதூர் ஷாவின் மகன்களும் பேரனும் கொல்லப்பட்டனர். (இதில் பகதூர் ஷாவின் பீபியான ஜீனத் மகாலுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான். காரணம் அவளுடைய புதல்வன் மிர்ஸா ஜவான் பகத் தான் இப்பொழுது அரசரின் அடுத்த வாரிசு).
பகதூர் ஷா செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மீது, சிப்பாய்களுக்கு துணை போனது; 49 பேரைக் கொலை செய்தது; ஆங்கிலேயர்களுக்கு எதிராக தேச துரோகம் செய்தது என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 40 நாள்கள் விசாரணை நடைபெற்றது. நாடாளும் ஒரு அரசரின் மீது தேச துரோகம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தியது சரித்திரத்தில் இதுதான் முதல்முறை.  இறுதிமுறையும்கூட.
0

காந்தி கம்யூனிசத்தை நிராகரித்தது ஏன்?


எகிப்து நாட்டில் இருந்து வந்த ஒரு பிரமுகருக்கு 1937 ஜனவரி 22 அன்று காந்தி அளித்த பேட்டியில் இடம்பெறும் கேள்வி பதில் இது.
கேள்வி : ரஷ்யாவிலுள்ள கம்யூனிசம் தனியார் உடைமைகளுக்கு எதிரானது. நீங்கள் சொத்துரிமை வேண்டும் என்கிறீர்களா?
காந்தி : பலாத்காரம் ஏதுமின்றி கம்யூனிசம் வரக்கூடுமானால், அது வரவேற்கத்தக்கதே. அப்போது உடைமைகள் மக்கள் சார்பாக, மக்களின் பொருட்டு நிர்வகிக்கப்படுமே தவிர, யாருக்கும் தனிச்சொத்து என்று ஏதும் இராது. ஒரு லட்சாதிபதி தமது பல லட்ச மதிப்புள்ள உடைமைகளைத் தொடர்ந்து வைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவற்றை மக்களின் சார்பிலேதான் அவ்வாறு அறங்காவலராக நிர்வகித்து வருவார். பொது நலனைக் கருதி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் அந்த உரிமையை எடுத்துக்கொள்ளலாம்.
அகிம்சையின் வழியில் பொதுவுடைமையை அடைந்துவிடமுடியும் என்னும் காந்தியின் நம்பிக்கையை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. நேரு தன்னிடம் இருந்து மாறுபடுவதை காந்தி உணர்ந்திருந்தார். ‘நேரு நல்விளைவை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறார். நானோ அதனை அடையும் மார்க்கத்துக்கு முதன்மை அளிக்கிறேன். ஒருவேளை நான் அகிம்சையை அளவுக்கு அதிகமாக வற்புறுத்துகிறேன் என்று அவர் நினைக்கலாம். அவருக்கு அகிம்சையில் நம்பிக்கை உண்டு என்ற போதிலும், மாற்று வழிமுறைகளின் வாயிலாக சோஷலித்தைக் கொண்டுவர விரும்புகிறார்.’
இந்தியக் கம்யூனிஸ்டுகளின் வழிமுறையையும் செயல்பாட்டையும் காந்தி விமரித்தார். ரஷ்ய பாணி புரட்சியை இந்தியாவில் கொண்டுவருகிறார்கள் அவர்கள் முயற்சி தவறானது என்றார் காந்தி. அதே சமயம், கம்யூனிஸ்ட் என்று தன்னை அழைத்துக்கொள்பவரையும் தன்னையும் அவர் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளத் தயாராகயில்லை. இந்த ஒப்பீடு அவருடைய முன்முடிவை மேலும் உறுதிபடுத்தியதே தவிர மாற்றியமைக்கவில்லை. கட்சி கம்யூனிஸ்டுகளைவிட நான் எவ்வளவவோ மேல் என்று காந்தி பெருமிதமும் கொண்டார்.
யங் இந்தியாவில் 26 மார்ச் 1931 அன்று இவ்வாறு எழுதினார் காந்தி.
‘நீங்கள் (கம்யூனிஸ்டுகள்) இந்நாட்டை உங்கள்  வழியில் இட்டுச் செல்ல விரும்பினால் நாட்டு மக்களுக்கு நீங்கள் முறையாக உங்கள் நியாயத்தை எடுத்துரைக்கவேண்டும். அதனை வலுக்கட்டாயமாகத் திணிக்கமுடியாது. நாட்டை உங்கள் நோக்குக்குச் சாதகமாக வளைப்பதற்காக நாசகாரச் செயலை மேற்கொள்ள நீங்கள் துணியலாம். ஆயினும் எத்தனை பேர்களை உங்களால் அழிக்கமுடியும்? லட்சோப லட்சம் மக்களையா ஒழித்துக் கட்டுவீர்கள்?’
பகத் சிங் தூக்கிலடப்பட்டு மூன்று தினங்கள் கழித்து காந்தி எழுதும் வாசகங்கள் இவை என்பதை வைத்து பார்க்கும்போது காந்தி அறிந்து வைத்திருந்த கம்யூனிசத்தின் வடிவம் எத்தகையது என்பது புரிய வருகிறது.
1. கம்யூனிசம் என்பது கொள்கையளவில் ஏற்கத்தக்கது. ஆனால், அதை வன்முறை வாயிலாக மட்டுமே நடைமுறைப்படுத்தமுடியும் என்பதை ரஷ்யா நிரூபித்து காட்டியுள்ளது. அங்கும்கூட தனிப்பட்ட முறையில் லெனின் மகத்தான தலைவர் என்றபோதும் வன்முறை துணையுடன்தான் அங்கே அவர் பொதுவுடைமை ஆட்சியை அமைக்கிறார்.
2.  ரஷ்ய பாணி கம்யூனிசத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்தியக் கம்யூனிஸ்டுகள் துடிக்கிறார்கள். அவர்கள் வழிமுறை தவறானது. அதைக் காட்டிலும் அபாயகரமானது நேரு போன்றோர் கம்யூனிசத்தின்மீதும் ரஷ்யாவின்மீதும் கொண்டிருக்கும் ஈர்ப்பு.
கம்யூனிசத்தை காந்தி தன்னுடைய தனிப்பட்ட எதிரியாகவே காந்தி வரித்துக்கொண்டார் என்பது புரிகிறது. அகிம்சை வழியிலான தன்னுடைய போராட்ட முறைக்கு கம்யூனிசம் நேர் எதிரானது என்று அவர் கண்டார். எனில், கம்யூனிசம் என்பது ரஷ்யாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தத்துவம் என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல் அல்லவா?
How to Change the World என்னும் நூலில்  எரிக் ஹாப்ஸ்பாம் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார். கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் முன்வைத்த கோட்பாடுகளைக் கொண்டுதான் கம்யூனிசத்தை மதிப்பிடவேண்டுமே தவிர, ரஷ்யப் புரட்சியைக் கொண்டு மதிப்பிடக்கூடாது என்கிறார் ஹாப்க்ஸ்பாம். அதே போல், சீனாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் தனித்தனியேதான் பரிசீலிக்கவேண்டியிருக்கும். லெனின், மாவோ போன்றோர் கம்யூனிசத்தை அப்படியே நடைமுறைப்படுத்தினார்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார் ஹாப்ஸ்பாம். மார்க்சின் மாணவர்கள் என்றமுறையில் அவர்கள் தங்கள் நாட்டில் நிலவிய பிரச்னைகளுக்கு தாங்கள் அறிந்த வழியில் தீர்வைக் கொண்டுவந்தனர். அந்தத் தீர்வுகளில் உள்ள சரி, தவறுகளை விமரிசிப்பது என்பது மார்க்சியத்தை விமரிசிப்பதாகாது. ‘மார்க்சின் மாணவர்கள் அளித்த பதில்களில் நீங்கள் முரண்படலாம். ஆனால், மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுப்பிய கேள்விகளை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.
இந்தியக் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை, லெனினின் சோஷலிசம், நேருவின் சோஷலிச ஈர்ப்பு, பகத் சிங்கின் புரட்சிகர அணுகுமுறை அனைத்தையும் காந்தி ஒன்றுபோலவே அணுகினார். நேரு, ஈர்ப்பு என்னும் அளவிலேயே இருந்ததால் அவரைத் தன்வசப்படுத்தமுடியும் என்று காந்தி நம்பினார். இந்த நம்பிக்கை மற்றவர்களிடம் ஏற்படாததால் அவர்களையும் அவர்களது வழிமுறைகளையும் அவர் நிராகரித்தார்.
இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்குப் பதில் ‘காங்கிரஸ் ஸ்தாபனத்தை நிலைமாற்றுவித்துக் கைப்பற்றுங்களேன்’ என்று கேள்வி எழுப்பினார் காந்தி. ‘உங்களது கருத்துகளை முழுவீச்சுடன் வெளியீடு செய்வதற்கு தடையேதும் இல்லையே? யாரும் எதையும் நம்பத்தக்க முறையில் வலியுறுத்திப் பேசுவதைச் செவிமெடுக்கும் சகிப்புத்தன்மை கொண்டதாயிற்றே நம் இந்தியா?’
தீண்டப்படாதவர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டியதில்லை, அவர்கள் தங்கள் உரிமைகளை இந்து மதத்தில் இருந்தபடியே கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னது போலவே கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுக்கு வெளியில் இருந்து புரட்சி செய்யவேண்டியதில்லை, காங்கிரஸில் இருந்தபடியே புரட்சி செய்யலாம் என்றார் காந்தி. இந்தியப் பிரிவினையைப் பின்னர் காந்தி எதிர்த்ததும் இந்த அடிப்படையில்தான் என்று புரிந்துகொள்ளலாம்.
- மருதன்
(மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டுரையின் இரண்டாவது அத்தியாயம்). 
1. காந்தியின் சோஷலிசமும் கம்யூனிசமும்

காந்தியின் சோஷலிசமும் கம்யூனிசமும்


‘உண்மையான, வன்முறை தவிர்த்த, தூய இதயம் கொண்ட சோஷலிஸ்டுகளால் மட்டுமே இந்தியாவிலும் உலகத்திலும் சோஷலிச சமுதாயத்தை நிலைநாட்ட முடியும். நான் அறிந்தவரை, இவ்வுலகில் தூய்மையான சோஷலிச நாடு என்று எந்த ஒரு நாட்டையும் சொல்வதற்கில்லை. மேலே விளக்கிய வழிமுறையைப் பின்பற்றாமல் அவ்வாறான சமுதாயம் உருப்பெறுவது அசாத்தியம்.’ ஹரிஜன், ஜூலை 13, 1947ல் காந்தி இவ்வாறு எழுதினார்.  சோஷலிசம், கம்யூனிசம், போல்ஷ்வியம் மூன்றையும் காந்தி இந்த அளவுகோலின் படியே மதிப்பிடுகிறார். காந்தியின் மதிப்பீட்டை கீழ்கண்டவாறு  தொகுத்துக்கொள்ளலாம்.
  • சோஷலிசம் ஓர் உயர்ந்த தத்துவம், உன்னதமான லட்சியம்.
  • கம்யூனிச சமூகம் அமைவது மனிதகுலத்தின் தேவை.
  • போல்ஷ்வியம் வகுப்பு பேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிசெய்கிறது.
  • இந்த மூன்று தத்துவங்களையும் நான் ஏற்கிறேன். ஆனால் மேற்படி லட்சியங்களையும் நோக்கங்களையும் வன்முறை மூலம் அடைவதை ஏற்கவியலாது. வன்முறையை ஒரு கருவியாகக் கொண்டு அமைக்கப்படும் சமூகம் நிலைபெறாது.
நவஜீவன் பிரசுராலயம்  தொகுத்துள்ள மகாத்மா காந்தி படைப்புகள் ஒரு சிறப்புத் தொகுதியில்  இருந்து  (பாகம் 5 : உண்மையின் குரல்), அவருடைய விரிவான கருத்துகளை இனி பரிசீலிக்கலாம்.
இந்தியாவில் பலரும் தங்களை சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்வதற்கு முன்பே, தன்னை ஓர் ‘இயல்பான சோஷலிசவாதியாக’ அடையாளம் காண்கிறார் காந்தி. புத்தகங்கள் மூலமாகப் பெறப்பட்ட சித்தாந்தமாக அல்லாமல் அகிம்சைமூலம் கண்டடைந்த சித்தாந்தம் அது என்கிறார் காந்தி. ரஷ்ய பாணி சோஷலிசம் மீதான அவருடைய விமரிசனமும் முரண்பாடும் இங்கிருந்தே எழுகிறது. ‘தீவிர அகிம்சாவாதியாக இருப்பவர் சமூக அநீதியை (அது எங்கு நிகழ்ந்தாலும் சரி) எதிர்த்துக் கிளர்ந்து எழாமல் வாளாவிருக்க மாட்டார். துரதிருஷ்டவசமாக, மேற்கத்திய சோஷலிஸ்டுகள், நான் அறிந்தவரை, சோஷலிசத் தத்துவக் கோட்பாடுகளை அமல் செய்வதற்கு வன்முறையின் அவசியத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.’ (ஹரிஜன், பிப்ரவரி 20, 1937).
பலவந்ததத்தின்மூலம் ‘கடையனுக்கும் கடையர்க்கான சமூக நீதியையும் பலவந்தத்தினால் பெறமுடியாது.’ மாறாக, ‘வன்முறை தவிர்த்த ஒத்துழையாமை வாயிலாகச் சுதந்தரம் பெறுவதற்கான கலையைக் கற்கும் கடைநிலை மக்களும்கூட அதன் ஒளி வண்ணத் தழலை உணர முடியும்.’
அனைவரும் சமம் என்னும் சோஷலிச நிலையை  ‘கோமகனின் தலையைச் சீவி, கோமகனையும் குடியானவனையும் சமப்படுத்துவதன்மூலம்’ பெறமுடியாது என்கிறார் காந்தி. அவருக்கு அகிம்சையும் சத்தியமும் ‘ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.’ இதே காரணங்களுக்காக, ஒரு ‘சோஷலிஸ்ட் ஆர்வலன் கடவுள் நம்பிக்கையுள்ளவனாக இருத்தல் அவசியம்’ என்கிறார் காந்தி.
கடவுள் நம்பிக்கையில்லாத சோஷலிஸ்டுகள் ஏன் தோன்றுகிறார்கள் என்பதற்கோ, அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஏன் சோஷலிஸ்டுகளாக இல்லை என்பதற்கோ காந்தியிடம் விளக்கமில்லை. அவரே குறிப்பிடும்படி, ‘தெய்வீக புருஷர்களும் பெண்டிர்களும் இருந்து வந்தபோதிலும் இவ்வுலகில் மூடநம்பிக்கைகளும் தழைத்தோங்கியுள்ளன. கடவுள் நம்பிக்கை மிகுந்த இந்து மதத்திலும்கூட சமீப காலம் வரை தீண்டாமை தலைவிரித்தாடி வந்துள்ளது.’
சோஷலிசம், கம்யூனிசம் இரண்டும் மேற்கத்திய சிந்தனைகள் அல்ல, ‘ஈசோபநிஷத்தின் முதல் செய்யுளில் தெளிவுபடக் காணக்கிடைக்கும்’ உண்மைகள். இந்தச் செய்யுளின்படி, ‘பிரபஞ்சமெங்கும் காணப்பெறும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்து விடுக. அதன்பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ்க. பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது.’ (கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி, நூல் 64).
சிலர் பணக்காரர்களாகவும் பலர் ஏழைகளாகவும் நீடிக்கும் பொருளாதார நிலையை காந்தி ஏற்கவில்லை. இந்த நிலை சோஷலிசமே தீர்வு என்பதை தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே தான் கண்டுகொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் தன்னுடைய சோஷலிசத்தின் பொருள் வேறு என்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகள் அடையவிரும்பும் சமத்துவத்தையும் ரஷ்யா பாணியிலான சோஷலிசத்தையும் அவற்றின் நோக்கங்களையும் தனது புரிதலின்பேரில் காந்தி நிராகரிக்கிறார். ஹரிஜன், ஆகஸ்ட் 4, 1946 இதழில் இது குறித்து அவர் பதிவு செய்திருப்பது கீழே.
‘எனது சோஷலிசத்தின் பொருள் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதில் பொதிந்துள்ளது. குருடர், செவிடர், ஊமைகளின் சாம்பலின்மீது நான் என்னை உயர்த்திக் கொள்ள விரும்பவில்லை. சோஷலிசம் பேசுவோர்க்கு இத்தகையோர் ஓர் பொருட்டல்ல என்றே அனுமானிக்கிறேன். உலகாயதமான மேம்பாடு ஒன்றே அவர்களது ஒரே குறிக்கோள். உதாரணமாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கார் கிடைக்கப் பெற வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. எனக்கு அப்படி இல்லை. எனது தனிமனிதப் பண்பியல்களின் மெய்ம்மை நிலை முழுவதும் பரிணமிப்பதற்கான சூழ்நிலையும், சுதந்தரமும் எனக்கு வேண்டும். சிரியஸ் நட்சத்திர மண்டலத்துக்குப் படிக்கட்டுகள் அமைப்பதற்கான பூரண சுதந்தரம் எனக்கிருக்க வேண்டும். அதுபோன்று ஏதேனும் செய்ய விரும்புகிறேன் என்று அர்த்தம் அல்ல. மற்ற சோஷலிசத்தில் தனி மனிதனின் சுதந்தரம் பறிக்கப்படுகிறது. நீங்கள் எதிலும் உரிமை கொண்டாட முடியாது. உங்கள் உடல் மீது கூட உங்களுக்கு அதிகாரம் கிடையாது.’
கம்யூனிசம் பற்றிய காந்தியின் புரிதல் இது. ‘வகுப்பு வித்தியாசங்கள் அற்ற சமூகம். பாடுபட்டு அடையத்தக்க லட்சியம் அது என்பதில் ஐயமில்லை.’ ஆனால், ‘ருஷ்யாவில் இருப்பது போன்ற கம்யூனிசம், அதாவது மக்களின்மீது திணிக்கப்படும் கம்யூனிசம், இந்தியாவுக்கு ஒவ்வாது. வன்முறை தவிர்த்த கம்யூனிசத்தில் எனக்கு நன்மதிப்பு உண்டு.’
ஆக, சோஷலிசம் வேண்டும். ஆனால் அந்த சோஷலிசம் தனிமனித உடைமைகளையும் நுகர்வு உரிமைகளையும் பறிக்கக்கூடாது. கடவுளின் உடைமைகளை தேவைக்கேற்ப பயன்படுத்தி நிறைவடையும் குணத்தை மக்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். இத்தகைய குணம் மக்களிடையே இயல்பாக வளரவில்லையென்றால் பலவந்தப்படுத்தக்கூடாது. பலவந்தப்படுத்தி அதன் மூலம் சோஷலிச சமூகம் உருவானால், ‘நீங்கள் எதிலும் உரிமை கொண்டாட முடியாது. உங்கள் உடல் மீது கூட உங்களுக்கு அதிகாரம் கிடையாது.’ என்று எச்சரிக்கிறார் காந்தி.
பலாத்காரம் அற்ற கம்யூனிசம் சாத்தியம் என்கிறார் காந்தி. ‘அப்படியொரு நிலை வந்தால் உடைமைகளை மக்கள் சார்பாக, மக்களின் பொருட்டு நிர்வகிக்கப்படுமே தவிர, யாருக்கும் தனிச்சொத்து என்று ஏதும் இராது. ஒரு லட்சாதிபதி தமது பல லட்ச மதிப்புள்ள உடைமைகளை தொடர்ந்து வைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவற்றை மக்களின் சார்பிலேதான் அவ்வாறு அறங்காவலராக நிர்வகித்து வருவார். பொது நலன்களைக் கருதி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் அந்த உரிமையை எடுத்துக்கொள்ளலாம்.’
போல்ஷ்வியம் என்பது, ‘தனிநபர் சொத்துரிமை என்கிற முறையமைப்பை ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.’ உடைமை யாவற்றையும் துறப்பது அல்லது உடைமையின்மை என்கிற ‘அறநெறி லட்சியத்தை பொருளாதாரத் துறையில் பொருந்தவைப்பதே அதன் நோக்கம்.’ இந்த நோக்கத்தையும் லட்சியத்தையும், ‘மக்கள் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டால், அல்லது சாத்வீகமாக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை இணங்க வைத்தால், அந்த லட்சியம் மேலானதே ஆகும்.’
ரஷ்யா இந்த உயர்ந்த சிந்தனையை வன்முறையின் மூலம் அடைய முயன்றதால் காந்தி அந்த வழிமுறையை நிராகரிக்கிறார். அதே சமயம், ‘போல்ஷிக் லட்சியத்தின் பின்னால் எண்ணற்ற ஆண், பெண்களின் தூயதான தியாகம் நிறைந்துள்ளது’ என்று ஒப்புக்கொள்கிறார் காந்தி. ‘அவர்கள் தங்களது அனைத்தையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். லெனின் போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த பெருந்த தலைவர்களின் தியாகங்கள் வீண்போகாது. அவர்களது தன்னலம் மறுத்த தியாகங்களின் உயர்ந்த உதாரணம் என்றென்றும் பளீரிட்டுப் பிரகாசிக்கும். காலம் செல்லச் செல்ல அந்த லட்சிய நிறைவை துரிதப்படுத்தும், தூய்மைப்படுத்தும்.’ (யங் இந்தியா, ஜனவரி 15, 1928).
ரஷ்யாவின் சிந்தனையும் தன்னுடைய சிந்தனையும் ஒன்றுதான் என்கிறார் காந்தி. ‘கம்யூனிச லட்சியம் என்ற சொல்லின் சிறந்த உட்கருத்தின்படியே நான் எனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பெருமுயற்சி செய்துவருகிறேன்.’
- மருதன்
(மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டுரையின் முதல் அத்தியாயம்).

லெனினும் இந்திய விடுதலையும்


ஜூலை 1, 1905 அன்று இந்தியன் ஒப்பீனியன் ஏட்டில் காந்தி இப்படி எழுதினார். ‘ரஷ்ய மக்கள் வெற்றி பெற்றால், ரஷ்யாவில் இந்தப் புரட்சியானது இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வாகக் கருதப்படும். நாங்களும்கூட கொடுங்கோன்மைக்கு எதிராக ரஷ்யாவின் பாதையைப் பின்பற்றலாம்.’ புரட்சி வெற்றிபெற்ற பிறகு, 1928ல் காந்தி இவ்வாறு எழுதினார். ‘போல்ஷ்விக் பதாகைக்குப் பின்னர் எண்ணற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் தூய்மையான தியாகம் உள்ளது என்ற உண்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் தங்கள் லட்சியத்துக்காக அனைத்தையும் இழந்தார்கள். லெனின் போன்ற இத்தகைய உயர்ந்த ஆத்மாக்களின் தியாகத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் வீணாகாது.’
1917 ரஷ்யப் புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷி எழுதிய லெனினும் இந்திய விடுதலையும் என்னும் நூல் இந்தப் பணியைச் சீராகத் தொடங்கிவைத்தது.
ரஷ்யப் புரட்சியைக் கண்டு பிரிட்டிஷ் இந்தியா சினமும் அச்சமும் கொண்டிருந்த காலகட்டம் அது. அவ்வாறு அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்பது காந்தியின் கருத்து. போல்ஷ்விக் புரட்சியை அவர் அபாயம் என்று கருதவில்லை. யங் இந்தியாவில் 1920ல் காந்தி எழுதியது.‘போல்ஷ்விக் அபாயம் என்பதை நான் ஒருபோதும் நம்பியதில்லை. ரஷ்ய போல்ஷ்விக் அபாயம் அல்லது வேறு எந்தவொரு அபாயம் குறித்து இந்திய அரசாங்கம் ஏன் பயன்படவேண்டும்?’
ஆனால், பிரிட்டிஷ் இந்தியா நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தது. ரஷ்யர்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியை இங்கே அரங்கேற்றமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? லெனினையும் அவரது போல்ஷ்விக் கட்சியையும் முன்னுதாரணமாகக் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜார் அரசுக்கு ஏற்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?
ஓர் உபாயத்தைக் கையாண்டது பிரிட்டன். போல்ஷ்விக் புரட்சி பற்றியும் குறிப்பாக லெனின் பற்றியும் செய்திகள் எதுவும் பரவாதபடி தடை செய்தது. ரஷ்யாவிலிருந்து ஆவணங்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டது. கிடைத்தவையெல்லாம் எதிர்மறையான செய்திகள்தாம். லெனினின் சர்வாதிகாரம் பற்றிய, போல்ஷ்விக்குகளின் வன்முறை செயல்பாடுகள் பற்றிய செய்திகளே பிரிட்டனால் வரலாறு என்னும் போர்வையில் பரப்பப்பட்டன. கம்யூனிசம் மனித குலத்துக்கு விரோதமான ஒரு தத்துவம் என்பது தீவிரமாக வாதிடப்பட்டது. கம்யூனிசத்தைப் பின்பற்றுவது அல்ல, அவ்வாறு நினைப்பதும்கூட சமூக விரோதமான செயல் என்று அறிவுறுத்தப்பட்டது. லெனின் ஒரு கொடூரமான கொலைகாரன் என்றும், ரத்தக் காட்டேரி என்றும் மண்டையோட்டு மாலை போட்டுக்கொண்டு வலம் வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
ஆனால், அனைத்து தடைகளையும் மீறி, ஆங்கிலேயர்களின் கட்டுக்கதைகளை உடைத்து, லெனினை இந்தியர்கள் தரிசித்தார்கள். நேரு, காந்தி, திலகர் போன்ற இந்திய தேசியவாதத் தலைவர்களையும் இந்திய மக்களையும் போல்ஷ்விக் தத்துவம் ஒருசேரப் பற்றிக்கொண்டது. உண்மையில், போல்ஷ்விக்குகள் பற்றிய பிரிட்டனின் தவறான பிரசாரமே, பல மக்களை லெனினை நோக்கித் திருப்பியது என்றும் சொல்லலாம். அப்படி என்ன ஆபத்தான சித்தாந்தம் என்னும் ஆர்வக் குறுகுறுப்புடன் பலர் சோவியத் நோக்கி நகரத் தொடங்கினர்.
இது குறித்து எஸ்.ஏ. டாங்கே இவ்வாறு எழுதுகிறார். ‘போல்ஷ்வியம் என்பது ரஷ்யாவின் தலைவன் ஆனபின், அனைத்து நாடுகளையும் சேர்ந்த அரசாங்கங்களும் அதை பேய்த்தனமானது, அட்டூழியமானது மற்றும் சர்வாதிகாரமானது என்று சித்தரித்து மக்களின் சிந்தனையில் அவை குறித்து அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் செயல்பாடு என்று லேசான சாயல் உள்ள ஒவ்வொரு முயற்சியும் ஒடுக்கப்படுகிறது என்பதுடன் எந்தவொரு நாட்டிலுமுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்தும் மக்கள் துண்டிக்கப்படுகிறார்கள்…போல்ஷ்விக்குகளின் உறுதியான சர்வதேச கொள்கையில் இதற்கான காரணம் பொதிந்துள்ளது.’
அந்தக் கொள்கை இதுதான். அடிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காலனி நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் அவர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சோவியத் ஆதரவு அளிக்கும் என்று லெனின் குறிப்பிட்டிருந்தார். மக்களை காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
காந்தியின் அமைதி வழியிலான போராட்டம் இந்திய சுதந்தரத்தைப் பெற்றுத்தராது, ரஷ்யாவில் நடைபெற்றதைப் போன்ற புரட்சி மூலமே ஆங்கில ஆதிக்கத்தை உடைக்கமுடியும் என்னும் கருத்தாக்கம் உருபெற ஆரம்பித்தது. எஸ்.ஏ. டாங்கேயின் எழுத்துகளில் இந்த உண்மை காணக்கிடைக்கிறது.
‘ஒரே ஒரு பரிகாரம்தான் உள்ளது… அது இந்தியத் தொழிலாளரின் கரங்களில் உள்ளது. பயங்கரப் போக்கில் ஈடுபடும் ராணுவச் செயல்பாடுகளும், அவற்றின் வெற்றியும் சிப்பாய்களை ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்துக்கு வேகமாகக் கொண்டுசெல்வதிலும், ராணுவத்திற்கான உணவுப் பொருட்கள் வெடிபொருட்களை கொண்டுசெல்வதிலும் பிரதானமாகச் சார்ந்துள்ளன. இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளிகளால் செய்யப்படுகின்றன. முக்கியமான தருணத்தில் இந்தியத் தொழிலாளிகள் ஒட்டுமொத்தமாக வேலை செய்ய மறுத்தால், ரயில்வேத் தொழிலாளிகள், தந்தி ஊழியர்கள், கூலிகள் மற்றுமிதர வகைப்பட்ட தொழிலாளிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்தால், அதாவது சதிவேலை என்றழைக்கப்படுவதை ஏற்பாடு செய்தால் நம்முடைய வெற்றி நிச்சயம். அரசாங்க பயங்கரப் போக்கு என்பதன் முழுச் செயல்பாடும் முடக்கப்படும் என்பதுடன் அது பணிந்தே தீரவேண்டும்.’

மராத்தி மொழியில் லெனினின் முதல் வாழ்க்கை வரலாறு 1922ல் வெளியிடப்பட்டது. ‘நிகோலய் லெனின் : ரஷ்ய ஜனநாயகத்தின் நிறுவனருடைய வரலாறு’ என்னும் இந்நூலை எழுதியவர், ராம்கிருஷ்ண கோபால் பிடே என்பவர். ஏன் லெனினின் வாழ்க்கை வரலாறை அவர் எழுதத் துணிந்தார் என்பதற்கான காரணம் முன்னுரையில் காணப்படுகிறது.
‘அது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கொடிகட்டிப் பறந்த நாட்களாகும். இந்தியர்களாகிய நாங்கள் சுதந்தரத்திற்கான எங்களுடைய போராட்டத்திற்கான ஆதர்சனத்தைப் பெற தெரிந்த ஒவ்வொரு ஆதாரத்தையும் நாடினோம். லெனின் மற்றும் அவருடைய போல்ஷ்விக் ரஷ்யாவைவிட சிறந்த ஆதாரம் வேறென்ன இருக்கமுடியும்? ஆனால் அந்நாட்களில் இந்த ஆதாரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாது. எனவே புரிபடாமல் இருந்தது. அந்தக் காரணத்திற்காகவே அது எங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. லெனினுடையதானது ஒரு இணையற்ற தத்துவத்தோடு கூடிய புரட்சியின் ஒரு முற்றிலும் புதிய பரிசோதனை என்று நாங்கள் உணர்ந்தோம். அது நம்முடைய பண்டைக்கால தத்துவம் புகுந்திருந்த எங்களுடைய சிந்தனைக்கு ஒரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.’
லெனின் பற்றிய விவாதங்கள் இங்கே மும்முரமாக தொடங்கின. பால கங்காதர திலகர் நடத்திய கேசரி பத்திரிகை அலுவலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஆங்கில மாத ஏடுகள் இருந்தன என்றும் அலுவலக நூலகத்தில் சில புத்தகங்கள் இருந்தன என்றும் தெரியவருகிறது. (லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி).
சம்ஹதி (ஒற்றுமை) என்னும் வங்கமொழிப் பத்திரிகை 1923ம் ஆண்டு ஜிதேன் குப்தா என்னும் ஏழை அச்சுத் தொழிலாளியால் தொடங்கப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் கிடந்து துவள நேரிட்டபோதும்கூட கடைசி வரை பத்திரிகையை அவர் நடத்தி வந்தார். ரஷ்யப் புரட்சி குறித்து சம்ஹதி என்ன சொல்லியிருக்கிறது? ‘எவ்வாறாயினும் மேல்தட்டு வர்க்கங்கள் தாம் உலகில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தின. தற்பொழுது கீழ்மட்ட வர்க்கங்கள் விழித்துக்கொண்டுவிட்டன என்பதுடன் அவற்றை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. இன்று பேய்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இந்தப் புதிய மகிழ்ச்சியானது மிக்க வேதனைகள் மூலம் வருகிறது. உருவாக்கத்திற்கு இத்தகைய வேதனைகள் தேவைப்படுகின்றன.’
ஜனவரி 30, 1925ல் முகம்மதி என்னும் இஸ்லாமிய ஏட்டிய வெளிவந்த கருத்து இது. ‘லெனின் ரஷ்யாவை மட்டும் விடுதலை செய்தார் என்று கூறுவது உண்மையைக் குறைத்துச் சொல்வதாகும். செயலற்றிருந்த மனித குலத்தை சுதந்தரப் பாடலுடன் ஒருவர் கிளர்ந்தெழச் செய்தானென்றால், லட்சோப லட்சம் மக்களுக்கு மகிழ்ச்சி என்று எதிர்பால ராஜ்யத்தின் கதவை ஒருவர் திறந்தானென்றால், துன்பதுயரமும், வறுமையும் நிறைந்த இவ்வுலகில் ஒருவர் சாந்தப்படுத்தும் அமிர்தத்தை விநியோகித்தாரென்றால் அவர்தான் லெனின்.’
இங்கு சிறு கலகம் ஏற்பட்டாலும், சிறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் லெனினை நோக்கி கை நீட்டியது பிரிட்டிஷ் இந்தியா. காந்தியும்கூட லெனினின் சித்தாந்தத்தால் கவரப்பட்டுவிட்டார் என்றும் இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அவர்கள் குற்றச்சம்சாட்டினார்கள். ஸ்வராஜ்யா புனா, மராத்தி வார இதழில் மார்ச் 30, 1920 அன்று இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு வெளியானது. ‘இந்தியா மீது போல்ஷ்விக் திட்டங்கள் குறித்தும் போல்ஷ்விக்குகளுடன் திரு. காந்தியின் தொடர்புகள் குறித்தும் செய்திகள் எங்கும் பரவியுள்ளன. ஆனால், உண்மையில் இத்தகைய செய்திகள் அனைத்தும் தவறானவையாகும். போல்ஷ்விக் பிரசாரம் இல்லாமலேயே இந்தியாவில் அதிருப்தி நிலவுகிறது. நாட்டின் பொருளாதார திவால் நிலைமையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையும்தான் போல்ஷ்வியத்தை தோன்றச் செய்துள்ளது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் உலகம் முழுவதும் அதிகாரத்தைச் செலுத்த ஆசை கொண்டுள்ளனர். அவ்வாறிருக்கும்போது, ஏன் போல்ஷ்விக்குகள் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தப்படுகிறது?…நான்கு ஆண்டுகளுக்கு 90 கோடி ரூபாய்க்கு குறையாத பற்றாக்குறைக்கு பொறுப்பான நிர்வாக முறையின் விளைவுதானே போல்ஷ்வியமாக இருக்கமுடியும்?’
காங்கிரஸ் தலைமையேற்று நடத்திய தேசிய விடுதலைப் போராட்டம் ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் தன் திசைவழியை மாற்றிக்கொண்டது என்கிறது ஜூலை 26, 1922 அன்று வெளிவந்த ஆத்ம சுத்தி என்னும் இந்தி இதழ். ‘ஏழைகள் பிரச்சினை இதுவரை காங்கிரஸில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் கட்சியானது நடுத்தர வர்க்க மனிதர்களின் கரங்களில் உள்ளது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போகும்போது அதிகாரம் தங்கள் கரங்களில் வருமென்று அவர்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களும் வர்த்தகர்களுமாவர். சுயராஜ்ஜியம் வரும்பொழுது அன்னியப் பொருள்களுக்கு வரி விதிப்பதன் மூலம் லாபம் பெற வர்த்தகர்கள் விரும்புகிறார்கள். வழக்கறிஞர்கள் அப்பொழுது உயர் பதவிகள் கிடைக்குமென்று கருதுகின்றர். எனவே, சாதாரண மக்கள் காங்கிரஸ் குறித்து அக்கறை காட்டவில்லை.’
காஸி இஸ்லாம் தூமகேது, டிசம்பர் 15, 1922 இதழில் இந்தக் கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார். ‘ஒரு நாட்டின் சுதந்திரமானது, மக்களால் உதவிடப் பெறாத ஒரு சில படித்த மனிதர்களைக் கொண்டு மட்டும் அடையப் பெற்றுவிடாது என்ற மகத்தான உண்மை இயக்கத் தலைவர்களுக்குத் தோன்றவில்லை. துவக்கத்தில் நாம் செய்த தவறை இன்று நாம் கண்டுபிடித்து விட்டோம். அனைத்து அதிகாரங்களும் ஒரு சில படித்த தலைவர்களின் பிடியில் இருப்பது மட்டும் சுதந்திரமல்ல. சுய பாதுகாப்பிற்காக நமது நாட்டை நாம் பலப்படுத்த விரும்பினால் நாம் இதயபூர்வமாக ஆன்மாபூர்வமாக மக்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.’
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல உலக மக்களுக்கும் லெனினும் ரஷ்யப் புரட்சியும் கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். மக்களிடம், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திடம் ஒன்றுகலக்காமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல் எதிலும் எப்போதும் வெற்றிபெறமுடியாது.
0
மருதன்

இந்திய நாகரிகம் – ஓர் அறிமுகம்

இந்திய நாகரிகம் தொன்மையானது, தொடர்ச்சியானது. அரிதானதும்கூட. சீன நாகரிகத்தில் மட்டுமே இத்தகைய தொன்மையையும் தொடர்ச்சியையும் பார்க்க முடியும் என்று பண்டைய இந்திய வரலாறு என்ற நூலில் கே.சி. சௌத்திரி என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
‘அந்நியர்கள் வரும்போது அவர்களுடைய கருத்துகளும், ஏற்கெனவே பாவிக்கப்பட்டு வந்த கருத்துகளும் — இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் –  இணைக்கப்பட்டன. அதன்மூலம் புதிய கருத்துகள் வார்த்தெடுக்கப்பட்டன. இதுவே இந்திய நாகரிகத்தின் உயிராகவும் மூச்சாகவும் இருந்தது. காலாகாலத்துக்கும் அதற்கு ஒரு தொடர்ச்சியைக் கொடுத்தது.’
மனிதன் நாகரிக உருவாக்கத்துக்கு முந்தியவன், பழைமையானவன். தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னோக்கி எடுத்துச்சென்றன. அவற்றை இணைத்துப்பார்க்கும் போது பல கண்ணிகள் விடுபட்டுப் போயிருப்பதும் புலப்படத்தான் செய்கிறது.
மனிதன் மிகப் பலவீனமான மிருகம். அதே சமயம் மனிதன் மட்டுமே சுற்றுச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் தன் தேவைக்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தவும் தெரிந்துகொண்ட மிருகம்.
This begining is as animal as social life itself at this stage. It is mere herd-consciousness, and at this point man is only distinguished from sheep by the fact that with him consciousness takes the place of instinct or that his instinct is a conscious one. (The German Ideology, Marx and Engels).
சுற்றுப்புறத்தைக் கட்டுப்படுத்த அவன் எடுத்துக்கொண்ட விவேகமான முறைமைகளும், மற்ற மனிதர்கள், மனிதக் குழுக்கள் ஆகியவற்றோடு ஒட்டி வாழ அவன் முயன்றதும்தான் மனித நாகரிக முன்னேற்றத்துக்கான ஆணிவேர்களாகும்.
நாகரிக வளர்ச்சியின் அஸ்திவாரம் முதலாவது விவேகம், இரண்டாவது அவனுடைய சூழ்நிலை. சூழ்நிலை என்பது அவன் வாழும் பகுதியின் இயற்கை தன்மையையும், சிறப்புத் தன்மையையும் பொறுத்துள்ளது.
வரலாறு என்பது காலக்கணக்குக்கு உட்பட்டதாகும். இல்லையென்றால் தொடர்பற்ற சில கதைகளாக மாறிவிடும். வரலாற்றின் ஒரு கண் காலக் கணக்கு. மற்றொன்று அது எழுதப்படும் மண்ணின் புவியியலாகும். (Physical Geography).
உலக நாகரிகங்களை, சிந்துவெளி நாகரிகம், நைல் நாகரிகம், டைகரிஸ் – ஈப்ரிடஸ் நாகரிகம், யாங்ஸி நாகரிகம் என்று நான்காகப் பார்க்கிறார்கள். இந்திய நாகரிகம் அல்லது சிந்துவெளி நாகரிகம் என்பது இணையற்ற சில சிறப்பு அம்சங்களைப் பெற்றிருக்கிறது. ஒரு தொய்வில்லாத தொடர்ச்சியைப் பெற்றிருக்கிறது.
அந்நிய கருத்துகள் வந்தபோதும் அதனைச் செரிமானம் செய்துகொண்ட போதும் தனக்கென்று உள்ள சில அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டது. மேற்கத்திய கலாசாரம் கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் அதன் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. இயற்கையை வெல்வதன் மூலம் இது முன்னேறியது. இயற்கையை வெல்வதுதான் நாகரிகத்தின் சாராகக் கருதி தன்னை வளர்த்துக் கொண்டது.
இந்திய நாகரிகமோ ஒத்து வாழ்வதும், சுற்றுச் சுழலோடு இணைந்து வாழ்வதும்தான் முக்கியமானது என்று கருதியது.
‘இயற்கையை ஆளுவோம் என்று மேலை நாகரிகங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மனிதனுக்கு நேர் எதிராக நிற்கும் இயற்கையிடமிருந்து வளமான வாழ்வைப் பறிக்க முனைவதுதான் மேற்கத்திய நாகரிகத்தின் அடிநாதம்…. ஆனால் இந்தியாவின் பார்வை வித்தியாசமாக இருந்தது. மனிதனும் உலகமும் வெவ்வேறானவை என்று பார்க்காமல், இரண்டும் இணைந்ததுதான் முழுமையான உண்மை, தனி மனிதனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையேயுள்ள இணக்கம்தான் முக்கியமானது என்று இந்தியா கருதியது.’ (குருதேவர் ரவீந்தரநாத் தாகூர் 1912 – 12ம் ஆண்டுகளில் சிகாகோ, ஹார்வர்டு பல்கலைப்கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து).
இந்திய நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதையும் வரலாற்றாளர்கள் சிறப்பான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அது மொழியில், சமூக அமைப்பில், மதத்தில், இலக்கியத்தில் பரவியுள்ளது.
‘ஹரப்பா நாகரிகத்தில் ஈசன் என்றும், பசுபதி என்றும், அன்னை தெய்வம் என்றும் வழிபட்டு வந்தார்கள். இன்றும் சிவனாகவும் பார்வதியாகவும் வழிபாடு நடப்பது அதன் எச்சம்’ என்கிறார் கே.சி. சௌத்திரி.
‘பனிக்கட்டி உருண்டு வரும்போது தன்னுள் ஏராளமானவற்றை சேர்த்துக் கொள்கிறது. மேலும் மேலும் கனமடைந்தாலும் அதன் உட்பகுதியை மேலே சேர்ந்தவை மூடாமல் பளிங்கு போல வெளிக்காட்டுகிறது. இந்திய நாகரிகமும் இப்படிப்பட்டதுதான்!’ என்று பண்டித ஜவஹர்லால் நேரு தன்னுடைய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இந்திய நாகரிகத்தின் அடிப்படை சகிப்புத்தன்மை. அதனை அமல்படுத்தும்போது ஏற்படுவதுதான் ஒற்றுமையில் வேற்றுமை சகிப்புத் தன்மையும், சகோதரத்துவமும் பரந்துபட்ட உலகில் பரவ வேண்டும் என்பதுதான் இந்திய நாகரிகத்தின் அடிப்படையான நோக்கம்.
Brothers and Sisters என்று விவேகானந்தர் சிகாகோ நகரத்துச் சிறு மண்டபத்தில் அழைத்ததன் முழு அர்த்தமும், சாரமும், இந்திய நாகரிகத்தின் வெளிப்பாடுதான். இதுதான் இந்திய நாகரிகத்தின் அழிவற்ற குணம்.
இந்த சகிப்புத்தன்மை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல்ரீதியான பலவீனமாகவும் இருந்ததுண்டு. இருந்தும் இதுதான் இந்தியத் தன்மையின் சிறப்பு என்றும் அந்நிய மோதல்கள் ஏற்பட்ட போதும் இந்தச் சிறப்புத் தன்மை தொடர்வதும் முக்கியமானதாகும்.
இந்தியாவில் புவியியல் இருப்பும் அதன் நாகரிகத்தில் சிறப்பான வளர்ச்சியை உருவாக்கியது. கடும்பனியுள்ள வடக்கு மலைப்பகுதி, சிந்து, கங்கை, பிரம்மபுத்திராவால் நனைக்கப்படும் சமவெளிகள், தக்காண பீடபூமி, உயரத்திலிருந்து சரிந்து கடலைச் சந்திக்கும் தென்பகுதி என்று உலகத்தின் எந்த நாட்டுக்கும் இல்லாத வானிலை சூழல் அந்த மக்களின் அன்றாட வாழ்வில் வேறுபாடுகளை உருவாக்கியது.
புகைப்படத்தில் மட்டுமே கடலைப் பார்க்கும் உ.பி. டில்லி கிராமத்துச் சிறுவனும், அதே வயதில் சீறிப் பாயும் கடல் அலை மேல் ஏறி விளையாடும் குமரிச் சிறுவனையும் இந்த தேசத்தில் பார்க்க முடியும். புவியியல் மனிதனின் திறமையை நிர்ணயிக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்பாடு வரலாற்றையும் வரலாறு நாகரிகத்தையும் பாதிக்கத்தான் செய்யும்.
வானுயர்ந்த மலைத் தொடர், பிரம்மாண்டமான நதிபுரத்து வெளிகள், உயர்ந்த பீடபூமி, பரந்துபட்ட பாலைவனம் ஆகியவை சிறப்புத் தன்மையை அளித்தன. ஷிவாளி மலை முகட்டில் பிறக்கும் கங்கை வங்கத்தில் சங்கமமாகிறாள். எத்தனை மனிதர்கள் – எத்தனை வேறுபாடுகள் – இருந்தும் அந்த வேறுபாட்டை வளப்படுத்திக் கொண்டே அந்த மக்களை இணைக்கும் நூலாகவும் அவள் இருக்கிறாள்.
கைபர் கணவாய் அந்நியர்கள் புக வாய்ப்பளித்தது. ஆரியர்களிலிருந்து அகமது ஷா அப்தாலி வரை பலரும் வந்தார்கள். எத்தனை கருத்துக்கள் வந்து சேர்ந்தன. பாரசீகத்தினர், கிரேக்கர்கள், சாகர்கள், ஹீனர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், முகலாயர்கள் என்று இந்தக் கணவாய் பலருடைய வருகைக்குச் சாட்சியாக இருந்தது.
தென் பகுதியின் நீண்ட கடற்கரைகள், ரோம், சினா, மலாய், தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு தொடர்பைத் தந்தன. இதன்மூலம், இந்தியா, உலக மக்கள் அதிகமாக வாழக்கூடும் மையப்பகுதியாக மாறியது. வேறுபட்ட மதங்கள், இனங்கள், மரபுகள், பழக்க வழக்கங்கள் சங்கமிக்கும் பகுதியாக மாறியது.
இங்கு ஆரியர்களும், ஆரியரல்லாதவர்களும் திராவிடர்களும், சீனர்களும், சாகர்கள், ஹீனர்கள், பாதன்கள், முகலாயர்கள் ஆகியோரும் மிகப் பெரிய சமுத்திரமாக மாறி தங்கள் அடையாளங்களை இழந்தார்கள் என்று ரவீந்திரநாத தாகூர் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.
இந்தியா, இந்துக்களுக்கு பௌத்தர்களுக்கு சமணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்களுக்கு, பார்சிகளுக்கு, கிறிஸ்துவர்களுக்கு தாய் வீடாக மாறியது. இனம், மதம், மொழி, பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று பார்ப்போமானால், இந்தியா பன்முகத் தன்மை கொண்ட மக்கள் தொகுதியாகும்.
அந்தமான், நிகோபர், நாகாலாந்தில் தென்படும் நீக்ரோ சாயல், சிக்கிம், பூட்டான் சிட்டகாங் பகுதியில் காணப்படும் மங்கோலியச் சாயல், வங்கம், பீகார், ஒரிசா, உ.பி., தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள பரந்த நெற்றியைக் கொண்ட சாயல், பஞ்சாப், ராஜஸ்தான் சிந்து பகுதியில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதிச் சாயல் என்று எத்தனை இனங்களின் சாயல்கள் இங்கு உள்ளன! இந்தச் சாயல் கொண்டவர்கள் ஒரு பகுதி என்றில்லாமல் பரந்து வசிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
இயற்கை தன்னுடைய பன்முக வெளிப்பாட்டைக் காட்ட இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வேறெந்தப் பூமிப் பகுதியிலும், இயற்கை இத்தனை அழகாக, கம்பீரமாக அமையவில்லை. இதுவே இந்தியாவில் காணும் ஒற்றுமைக்குள் வேற்றுமை என்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
இந்தியா என்பது பல்வேறு இனங்களின் கண்காட்சி சாலையாகும் என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்மித். கடும்பனி உள்ள காஷ்மீர், பனிக் காலத்தில் கடும் குளிரும், கோடை காலத்தில் கடும் வெப்பமும் கொண்ட வங்காளம், ஒரிசா, பீகார் எப்போதுமே வெப்பம் கொண்ட தென் இந்தியா ஆகியவை இங்கு மட்டுமே உள்ளன. விதவிதமான விலங்குகள், தாவரங்கள் ஆகியவை இந்த மண்ணில் மட்டுமே உள்ளன. மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் அளவுக்கு வேறுபாடுகள் தென்படும்.
அணுகிப் பார்த்தால் இதற்கிடையே ஓர் இணக்கம் இருப்பது புலப்படும். இந்த இணக்கம் தான் இந்தியாவின் ஆத்மா. இந்திய நாகரிகத்தின் அடிநாதம்.
ஆரியர்களும், ஹீனர்களும், முகலாயர்களும் வந்தார்கள். பின்னாளில் டச்சு, பிரான்சு, ஆங்கிலேயர்கள் என்று வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை பின்னங்களாக்கி, அதனை முழுமையாக்கிய ரசாயனம் தான் இந்திய நாகரிகத்தின் உள்ளார்ந்த சுவையாகும். இதன்பால் உருவானதுதான் ஓர் ஒன்றிணைந்த கலாசாரம்.
இந்திய ஒற்றுமை என்பது அரசியல் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல. மௌரிய, குப்த, மொகலாய சாம்ராஜ்ஜியங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் மக்களின், சமூக, பொருளாதார ஒற்றுமை என்பது அப்படியே இருந்தது. இது இந்தியர்களிடைய ஒருமைப்பாட்டை வளர்ந்தது. (ஜே.என். சர்க்கார் எழுதிய இந்திய ஒற்றுமை – என்ற கட்டுரை).
‘இந்திய ஒற்றுமை என்பது ரத்தம், நிறம், மொழி, உடை, பிரிவு ஆகியவற்றைக் கடந்த ஒன்று’ என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு ஹிஸ்டரி ஆஃப் இந்தியா நூலாசிரியர் வி.ஏ. ஸ்மித். இதன் உன்னதம் பிரிட்டிஷாரை எதிர்த்து நடைபெற்ற சுதந்தரப் போராட்டத்தின்போது வெளிப்பட்டது. மகாராஷ்டிரா மட்டும் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்று மராட்டியனோ, வங்காளம் விடுதலை பெற வேண்டுமென்று வங்காளியோ, தமிழ்நாடு மட்டும் விடுதலையடையவேண்டும் என்று தமிழனோ போராடவில்லை. ஒட்டுமொத்த இந்திய விடுதலைக்காக அனைவரும் போராடினார்கள்.
இயற்கையோடு மட்டுமல்லாமல், சக மனிதனோடும் சேர்ந்து இணைந்து வாழ்வதுதான் இந்திய நாகரிகத்தின் வேரும், சாரமும் ஆகும்.
0

No comments:

Post a Comment