பாகிஸ்தான் உளவுத்துறையின் புதிய தலைவர், அமெரிக்காவிடம் ஒரு விசித்திர கோரிக்கையை வைக்கப் போகிறார் என்று, கூறப்படுகிறது. “சி.ஐ.ஏ., இலக்குகளை காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளட்டும். காரியத்தை நாம் (ஐ.எஸ்.ஐ.) நடத்தி முடிக்கிறோம்” என்பதே அது.
பாகிஸ்தானுக்குள் சி.ஐ.ஏ., தமது உளவு விமானங்களை வைத்து சொல்லிச்சொல்லி அடித்து வீழ்த்தும் தீவிரவாத அமைப்புகளின் இலக்குகளையே ஐ.எஸ்.ஐ.-யின் புதிய தலைவர் தமது கைகளில் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்.
இப்போதெல்லாம், பாகிஸ்தானுக்கு உள்ளே எங்கே தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று சி.ஐ.ஏ. இவர்களிடம் மூச்சுகூட காட்டுவதில்லை. உளவு விமானத்தில் இருந்து ஏவுகணை வந்து வீழ்ந்த பின்னர்தான், ஐ.எஸ்.ஐ.க்கு விபரம் தெரியவரும் நிலை உள்ளது.
பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஐ.எஸ்.ஐ.-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லெப். ஜெனரல் ஜகிருல் இஸ்லாம் (மேலே படத்தில் இருப்பவர்) வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி, அமெரிக்கா, லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமையகத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். அப்போது இந்தக் கோரிக்கையை முன்வைக்கப் போகிறார் என்று, பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சி.ஐ.ஏ. தலைவர் டேவிட் பிட்ராயெஸ்ஸை சந்தித்து பேசவுள்ள ஜகிருல் இஸ்லாம், “எங்கே, யாரை தாக்க வேண்டும் என்ற இலக்குகளை நீங்கள் முடிவு செய்யுங்கள். இலக்குகளை அடித்து வீழ்த்தும் பொறுப்பை எம்மிடம் ஒப்படையுங்கள்” என்று தெரிவிப்பார் என்று கூறியுள்ள அந்த அதிகாரி கூறிய அடுத்த வாக்கியம்தான் இதன் ஹைலைட்!
“இதற்காக அமெரிக்கா, உளவு விமானங்களில் இருந்து ஏவுகணை வீசும் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்று ஜகிருல் இஸ்லாம் கேட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளார்” என்பதே ஹைலைட் வாக்கியம்.
சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் நடத்தும் உளவு விமான தாக்குதல்கள், பாகிஸ்தானுக்குள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. மற்றொரு நாட்டுக்குள் நடத்தப்படும் இந்த தாக்குதல்கள், பாகிஸ்தானின் இறைமையை மீறும் செயல் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
பாகிஸ்தானுக்குள் நடக்கும் அமெரிக்க விமான தாக்குதல்களால், பாக். மக்களின் வெறுப்பும் உச்சத்தில் உள்ளது. எதிர்ப்பு போராட்டங்களும் நடக்கின்றன.
இந்த சூழ்நிலையில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிடுகிறார், பாகிஸ்தான் உளவுப் பிரிவின் புதிய தலைவர்.
அவரது கோரிக்கையை சி.ஐ.ஏ. ஏற்றுக் கொண்டால், நாட்டுக்குள் அமெரிக்க தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு விட்டன என மக்களையும் சமாதானப்படுத்தலாம் என்பது ஒரு மாங்காய். அமெரிக்கா வைத்திருக்கும் அட்டகாசமான உளவு விமானங்கள், பிளஸ் அவற்றின் தாக்குதல் தொழில்நுட்பம், இலவசமாக கிடைக்கும் என்பது அடுத்த மாங்காய்.
இதற்கு உடனே தலையாட்ட சி.ஐ.ஏ. தலைவர் டேவிட் பிட்ராயெஸ் என்ன, மாங்காய் மடையரா?
No comments:
Post a Comment