காஷ்மீர்: முதல் போரின் கதை
இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் சேரமாட்டேன் என்று தனித்திருந்த காஷ்மீர் மன்னர் ஹரி சிங் வேறு வழியின்றி இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்தார். தன்னுடைய ராணுவத்தைக் கொண்டு பதான்களை எதிர்க்கமுடியாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. பதான்களை மறைமுகமாகக் காஷ்மீருக்குச் செலுத்தியதே பாகிஸ்தான் என்னும் சூழலில் அந்தப் பக்கத்தில் இருந்து உதவிக் கோரமுடியாது. எனவே, இந்தியாவைத் தொடர்புகொண்டார்.
உடனடியாகப் படைகளை அனுப்பவில்லை இந்தியா. மாறாக, ஹரி சிங்கிடம் கத்தி முனையில் பேச்சுவார்த்தை நடத்தியது. 'காஷ்மீர் ஒரு சுதந்தர சமஸ்தானம். இந்நிலையில், எப்படி இந்தியப் படைகளை காஷ்மீருக்கு அனுப்புவது? முறைப்படி இந்தியா இதில் தலையிடவேண்டுமென்றால், காஷ்மீர் இந்தியாவுடன் முதலில் இணையவேண்டும்.' ஹரி சிங்குக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்புக்கொண்டார். இந்தியா படையெடுத்து வந்து பதான்களையும் பின்னர் பாகிஸ்தானையும் விரட்டியது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பாகமானது. அன்று தொடங்கி இன்று வரை காஷ்மீருக்காக இரு நாடுகளும் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இன்று வரை தீர்க்கப்படாத பிரச்னையாக காஷ்மீர் நீடித்துக்கொண்டிருக்கிறது. பிரச்னையைத் தீர்ப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தீவிரத்தை அதிகப்படுத்தியிருக்கின்றவே தவிர குறைக்கவில்லை.
அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளி அக்டோபர் 27, 1947. ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் (Andrew Whitehead) எழுதிய A Mission in Kashmir இந்த ஒற்றை தினத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. அக்டோபர், நவம்பர் இந்த இரு மாதங்களில் காஷ்மீரில் நடைபெற்ற சம்பவங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சார்பாக இல்லாமல் காஷ்மீருக்குச் சார்பாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.
பதான்கள் தாக்குதலில் பாகிஸ்தான் வகித்த பாத்திரம் அனைவருக்கும் தெரிந்ததே.
- பதான்களைப் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் செலுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஜின்னாவே இதனைக் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பலர் பதான்களின் கூட்டத்தில் கலந்திருந்ததற்கும் ஆதாரங்கள் உள்ளன. (அதிகாரபூர்வமாக அவர்கள் 'விடுப்பில்' இருந்தனர்).
- பாக் அரசு பதான்களுக்கு அளித்த ஆயுதங்கள், 'காணாமல் போனவையாக' ராணுவப் பதிவேட்டில் குறிக்கப்பட்டன.
- பதான்கள் பின்வாங்குவது தெரிந்ததும் கூடுதலாகப் பல ராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் அனுப்பிவைத்தது.இதற்கும் ஆதாரம் உள்ளது.
- ஸ்ரீநகரைப் பதான்கள் கைப்பற்றவேண்டும் என்று பாக் விரும்பியது. பதான்கள் நகரங்களைச் சூறையாடாமல் இருந்திருந்தால், இந்தக் கனவு நிறைவேறியிருக்கக்கூடும் என்றும் காஷ்மீர் பாகிஸ்தானுட்ன் இணைந்திருக்கவும்கூடும் என்றும் பல பாகிஸ்தானியர்கள் கருதினார்கள்.
பதான்களின் தாக்குதலை இந்தியா தனக்கு அளிக்கப்பட்ட அரிய வாய்ப்பாகவே பார்த்தது.
- இந்தியாவுடன் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்த ஹரி சிங் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
- இந்திய ராணுவத்தை காஷ்மீரில் இறக்கியதன் மூலம், காஷ்மீரில் தன் கால்களை ஆழமாகப் பதித்துக்கொண்டது இந்தியா.
- பதான் தாக்குதல் குறித்த செய்திகள் இந்திய அரசால் மிகைப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் நிழலில் தங்கியிருப்பதுகூட கொடூரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று காஷ்மீரிகளுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது.
- பிடிபட்ட பதான் பழங்குடிகளிடம் இருந்து 'பெறப்பட்ட' உண்மைகளை இந்தியா உலகம் முழுவதும் எடுத்துச் சென்றது. இந்திய ராணுவம் மட்டும் வந்திராவிட்டால் காஷ்மீர் கூண்டோடு சிதைந்துபோயிருக்கும் என்னும் உணர்வை அனைவர் மனத்திலும் ஏற்படுத்தும் வகையில் உளவியல் ரீதியான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.
- பதான் தாக்குதல் குறித்து வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், இந்திய அரசுக்கு அனுகூலமான விஷயங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
ஆக மொத்தம், பாகிஸ்தானின் நோக்கங்களுக்கும் இந்தியாவின் நோக்கங்களுக்கும் வித்தியாசமே இல்லை.
- காஷ்மீரை எப்படியாவது கையகப்படுத்தவேண்டும். மக்களின் விருப்பம் முக்கியமல்ல. பலவந்தப்படுத்தியாவது அவர்களை இணைத்துவிடவேண்டும்.
- பாகிஸ்தான் குறுக்கு வழியில் பதான்களை அனுப்பி வைத்தது. இந்தியா குறுக்கு வழியில் யோசித்து, ஹரி சிங்கின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டது.
- இது தாற்காலிக ஏற்பாடுதான் என்றார் நேரு. பதான்களின் எழுச்சி அடக்கப்பட்டதும் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், காஷ்மீர் யாருடன் சேரவேண்டும் என்பதை காஷ்மீரிகள்தான் முடிவுசெய்யவேண்டும் என்றும் நேரு அறிவித்தார். ஆனால், அவருடைய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது.
- காஷ்மீர் மக்களின் துன்பத்தை, எதிர்பார்ப்பை, விருப்பத்தைப் புரிந்துகொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் இன்றுவரை மறுத்துவருகிறது.
- காஷ்மீர் எங்களுடன் இணையவேண்டும் என்றுதான் விரும்புகிறது என்று இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். காஷ்மீர் இந்தியாவின் தவிர்க்கவியலாத பாகம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.
மன்னர்
ஹரி சிங்கின் இணைப்பு ஒப்பந்தம் குறித்த சர்ச்சையையும் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்
தன் புத்தகத்தில் விரிவாக அலசுகிறார். ஹரி சிங்கின் கையெழுத்தைப்
பெற்றுக்கொண்ட பிறகுதான் இந்தியா தன் படைகளைக் காஷ்மீரில இறக்கியதா? இதற்கு
ஆதாரம் இருக்கிறதா? படைகளை இறக்கியபிறகு, முன்தேதியிட்ட ஒப்பந்தத்தில்தான்
ஹரி சிங் கையெழுத்திட்டார் என்று வாதிட்டால் அதை இந்தியாவால்
மறுக்கமுடியுமா? வி.பி. மேனன் ஹரி சிங்கைச் சந்தித்த தேதி, நேரம்
இரண்டிலும் உள்ள முரண்பாடுகள் சொல்லும் உண்மை இதுதானே? எனில், பதான்களின்
படையெடுப்பைப் போலவே அவர்களுக்கு எதிரான இந்தியப் படையெடுப்பும்கூட
சட்டவிரோதமானதுதான் இல்லையா?
நேரடி களஆய்வின் மூலம் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் தனது புத்தகத்தைக்
கட்டமைத்திருக்கிறார். பதான்கள் தாக்குதல் குறித்து அப்போது வெளிவந்த
பத்திரிகை செய்திகள், அரசு குறிப்புகள், ஆவணங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை
பரிசீலிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றின் நம்பகத்தன்மையையும் அவர்
கேள்விக்கு உட்படுத்துகிறார். தன்னால் இயன்ற அளவுக்கு சார்பு எடுக்காமல்
புத்தகத்தை நகர்த்திச் செல்கிறார்.
ஆனால், இங்குள்ள பலரும் காஷ்மீரை ஒற்றை பரிமாணத்தில் காணவே
விரும்புகிறார்கள். அவ்வாறு பார்க்க அவர்கள் பழக்கப்பட்டு
போயிருக்கலாம். பாகிஸ்தானையும் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் இஸ்லாமிய
தீவிரவாத அமைப்புகளையும் அவர்களால் சுலபத்தில் கண்டிக்கமுடிகிறது.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் விடுவிக்கப்படவேண்டும் என்பதில்
அவர்களுக்கு மாற்று கருத்து கிடையாது. அதே சமயம், இந்தியாவின் காஷ்மீர்
ஆக்கிரமிப்பு அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. காஷ்மீரிகளின் தொடர்
சுயநிர்ணயப் போராட்டத்தையும் அதன் காரணமாக வெடிக்கும் வன்முறையையும்
அவர்கள் கலவரமாகத்தான் பார்க்கிறார்கள். ராணுவனத்தினரின் அத்துமீறல்கள்
அவர்களைப் பதறச் செய்யவில்லை. காஷ்மீர் பெண்கள் பாலியல் பலாத்காரம்
செய்யப்படுவது பற்றி வெளிவரும் செய்திகள் அவர்களைக் கொதிப்படையச்
செய்யவில்லை. தேசபத்தி என்னும் கண்ணாடியை அணிந்துகொண்டு காஷ்மீரைக்
கவனிப்பதால் ஏற்பட்ட கோளாறு இது.
ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்டின் A Mission in Kashmir, காஷ்மீர்
பிரச்னையின் தொடக்கப்புள்ளியைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்தப்
புத்தகத்தின் மூலம் நாம் பெறவேண்டிய பாடம் ஒன்றுதான். காஷ்மீர்
இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானதல்ல. அது காஷ்மீரிகளுக்குச்
சொந்தமானது. முடிவெடுக்கவேண்டியவர்கள் அவர்கள். அவர்கள் மட்டும்தான்.
No comments:
Post a Comment