Sunday, January 20, 2013

சோவியத் யூனியன் : அன்றும், இன்றும்



‘எங்களைச் சூழ்ந்திருந்த இரும்புத் திரை ஒருவழியாக விலகிவிட்டது என்று நினைத்துக்கொண்டோம். ஜனநாயகம் திரும்பிவிடும் என்று நம்பினோம். அந்த ஒற்றை வார்த்தையை நினைத்து நினைத்து ஏங்கினோம். எங்கள் வாழ்க்கை இனி முற்றிலுமாக மாறிப்போகும் என்றும் இன்னல்கள் அனைத்தும் தீர்ந்துபோகும் என்றும் காத்திருக்க ஆரம்பித்தோம்!’ 1991ல் சோவியத் யூனியன் சிதறுண்டபோது எடுக்கப்பட்ட சர்வேயில் கணிசமானோரின் விருப்பமும் விழைவும் இப்படித்தான் இருந்தது. 140 மில்லியன் ரஷ்யர்களின் எதிர்பார்ப்பு இது என்று மீடியா அறிவித்தது.

சோவியத் யூனியன் சிதறுண்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ரஷ்யர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ரஷ்ய மீடியா கருத்து சேகரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. சோவியத்தைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்கூட சோவியத் யூனியன் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ரஷ்யாவின் இன்றைய முகவரி என்ன? உலகம் ரஷ்யாவை எப்படிப் பார்க்கிறது? அதைவிட முக்கியமாக ரஷ்யர்கள் தங்கள் நாட்டை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களுடைய கனவு பலித்ததா?

ஹெல்த் க்ளப் ஒன்றில் பணியாற்றும் திருமதி கொமார் தனக்கு முன்னால் நீட்டப்பட்ட மைக்கை கோபத்துடன் எதிர்கொள்கிறார். ‘பத்து ஆண்டுகளாக நான் ஓட்டுப் போடவில்லை. நான் ஓட்டுப் போட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. அவர்களுக்குத் தேவையானவரை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்னும்போது என்னைப் போன்றவர்கள் எதற்கு வாக்களிக்கவேண்டும்?’ சற்று நேர அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். ‘கடிகாரத்தைத் திருப்பியமைக்க முடியாமானால் எவ்வளவோ நன்றாக இருக்கும்! பழைய சோவியத்தில் ரொட்டி கிடைத்தது. வேலை எப்போதும் இருந்தது. அந்த வாழ்க்கை திரும்ப வேண்டும்.’

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இணைய சாட் அறைகளிலும் பங்கேற்கும் பல ரஷ்ய இளைஞர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது.‘சோவியத் கால புத்தகங்களையும் ஏடுகளையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை சாதனைகளை அநாயசமாக நிகழ்த்தியிருக்கிறார்கள்! ஸ்டாலினைப் போன்ற ஒரு வலிமையான தலைவர் இன்று இருந்திருந்தால் நாம் வேறு மாதிரியாக இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்.
எங்கோ, ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது என்று புரிகிறது. நிச்சயம் சோவியத் சிதறியிருக்கக்கூடாது.’

சோவியத் யூனியனின் கடைசி தலைவராக இருந்த மிகேல் கோர்பசேவ்கூட சோகமாகவே பேட்டி கொடுக்கிறார். குரலில் நடுக்கம்.‘யாராலும் இத்தேசத்தைக் காப்பாற்றியிருக்க முடியாது என்று பலர் சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. சோவியத்தை எப்படியாவது காப்பாற்றியிருக்கவேண்டும்.’ நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்று தி நியூ யார்க் டைம்ஸ் கேட்டபோது, அவர் அளித்த பதில் இது. ‘எல்லோரும் என்னைத்தான் குற்றம் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அப்போதிருந்த நிலையில் என்னால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை.’

சோவியத் யூனியன் கலைக்கப்படவேண்டுமா என்று கேட்டு மார்ச் 1991ல் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமையுடன் 15 உறுப்பினர்கள் ஒன்றியத்தில் இணைந்திருந்தனர். அதில் ஒன்பது பேர் சோவியத் சிதறக்கூடாது என்று வாக்களித்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் போரிஸ் எல்ட்சின் ராணுவ எழுச்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, சோவியத்தைச் சிதறடித்தார். ‘எல்ட்சினின் அதிகார வெறியே சோவியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்’ என்கிறார் கோர்பசேவ். உண்மையில் ஸ்டாலின் மறைந்த 1953ம் ஆண்டே சோவியத் தடுமாற ஆரம்பித்துவிட்டது. மெல்ல மெல்ல நிலைமை மோசமடைந்து ஒருவகை கோமாவில் விழுந்துவிட்டது. அதிகாரபூர்வ மரணம் நிகழ்ந்தது 1991ல்.

சோவியத் யூனியன் ரஷ்யாவாக மாறியது நன்மைக்கே என்று வாதிடுபவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இவை. மாஸ்கோ நகரை எடுத்துக்கொள்ளுங்கள். உணவுப் பொருள்கள் உள்பட எதை வாங்கவேண்டுமானாலும் வரிசையில் நிற்கவேண்டும். அவர்கள் கொடுப்பதை மட்டுமே பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரு கார் வாங்கவேண்டுமானால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கவேண்டும். இன்றை மாஸ்கோவைப் பாருங்கள். வழி நெடுகிலும் பளபளக்கும் ஷாப்பிங் மால்கள். பல மாடல் கார்கள் தெருக்களில் சீறிப் பாய்கின்றன. இது மாஸ்கோவா நியூ யார்க்கா என்று அதிசயிக்கும் அளவுக்கு ஜீன்ஸ், பர்கர், கோக் என்று எதுவும் கிடைக்கும்.

பதினைந்து நிமிடம் நகரத்தைச் சுற்றி வந்தாலே பளிச்சென்று பிடிபட்டுவிடும். இது ஒரு நவீன தலைநகரம். கம்யூனிச முழக்கங்களும் பேனர்களும் இருந்த இடங்களில் ஆள் உயர பில்போர்டுகள். விமானங்கள் நிரம்பி வழிகின்றன. சுற்றுலாப் பயணிகள் ஈக்களைப் போல் மொய்க்கிறார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகள் சர்வ சாதாரணம். ரஷ்யாவின் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இல்லை என்பதால் ஏற்பட்ட மாற்றங்கள் இவை. சந்தைப் பொருளாதாரமும் தனியார்மயமும் அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. 1990களில் தொடங்கி, ரஷ்யாவின் பெரும்பாலான துறைகள் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகிலேயே மாஸ்கோவில்தான் அதிகளவு பில்லினியர்கள் குவிந்திருக்கிறார்கள்.

குறிப்பாக, புடின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியுள்ளதை பொருளதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தொழில்துறையில் 75 சதவீதமும் முதலீடுகளில் 125 சதவீதமும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சராசரி வருமானம் 80 டாலரில் இருந்து 640 டாலருக்கு உயர்ந்தது. ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியான நடுத்தர வர்க்கம், 2000--2006 காலகட்டத்தில் 8 மில்லியனில் இருந்து 55 மில்லியனாக பெரும் வளர்ச்சி பெற்றது.

உலகிலேயே ஆயுத விற்பனையில் இரண்டாவது இடத்தை ரஷ்யா பெற்றுள்ளது. (முதலிடம், அமெரிக்கா). கம்யூனிசம் வேண்டாம் அல்காரிதம் போதும் என்று முடிவு செய்ததால் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடுத்த இடத்தை ரஷ்யா இன்று பிடித்துள்ளது. அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்துவதற்கும் இன்றைய உலகம் ரஷ்யாவை பெருமளவில் நம்பியிருக்கிறது. ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.

சோவியத் காலத்தில் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்திருந்த மதபீடங்கள் 1991க்குப் பிறகு பிரசாரத்தில் தீவிரமடைந்துள்ளன. அருங்காட்சியகமாகவும் அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டிருந்த பல தேவாலயங்கள் இன்று மீண்டும் வழிபாட்டுத் தலங்களாக மாறியுள்ளன. இஸ்லாத்தின் செல்வாக்கும் அதிகரித்தது. இன்று ஐரோப்பாவிலேயே ரஷ்யாவில்தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். ‘சுதந்தரமாக வழிபட முடிகிறது, பொதுவெளிகளில் மத ஊர்வலங்கள் நடத்த முடிகிறது.’ என்கிறார்கள் ரஷ்யர்கள். அதே சமயம், வாகாபிஸம் உள்ளிட்ட புதிய மதப்பிரிவுகள் தோன்றியதையும் செசன்யா போன்ற இடங்களில் மதக்கலவரங்கள் பெருகியதையும் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மற்றொரு பக்கம், முன்னெப்போதையும்விட வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகம் பரவியிருக்கிறது. கையேந்தும் அழுக்கு உடைக்காரர்கள் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்கவைக்கிறார்கள். ஒரு பக்கம் அபரிமிதமான வளர்ச்சி, இன்னொரு பக்கம் படுபாதாள ஏழைமை. இதற்குக் காரணம் என்ன? இரு அம்சங்களை ரஷ்யப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள உறவுமுறையால் அரசு மட்டத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகியுள்ளது. தேசநலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுயநலம் சார்ந்த முடிவுகளை அரசியல்வாதிகள் மேற்கொள்கிறார்கள். இதனால் பணக்காரர்களுக்குச் சாதகமான வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுவருகிறது. இரண்டாவதாக, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு பலவீனம் அடைந்துள்ளது. வரி வசூல் செய்வதற்கும், நகரங்களில் குற்றங்களைக் குறைப்பதற்கும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் அரசு திண்டாடிக்கொண்டிருக்கிறது.

இன்றைய ரஷ்ய இளைஞர்கள் புதிதாகக் கிடைத்த பாலியல் சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை பத்திரிகைகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றன. சோவியத்தில் ஒழிக்கப்பட்டிருந்த பாலியல் விடுதிகள் பளபளப்புடன் இன்று நகரம் முழுவதும் வியாபித்திருக்கின்றன. சிதறிய சோவியத் நாடுகளில் இருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான அகதிகள் இருப்பிடம் இன்று வீதிகளில் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

1991ல் நடைபெற்ற தேர்தலுக்கும் 1996லும் அதற்குப் பிறகும் நடைபெற்ற தேர்தல்களிலும் உள்ள வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லாததையும், பலகட்சி ஜனநாயக முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மொத்தத்தில், பெரும் விலையைக் கொடுத்தே பல புதிய மாற்றங்களை ரஷ்யா சந்தித்துள்ளது. பொதுவுடைமை கொள்கையை அகற்றினால் மக்களுக்குக் கூடுதல் சுதந்தரம் கிடைக்கும், ஜனநாயகம் தழைக்கும், வெளிநாடுகளுக்குச் சுதந்தரமாகப் போய் வரலாம், அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளுடன் கைகுலுக்கிக்கொள்வதன் மூலம் அதிக வளம் பெறலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெற்றன என்பதும் உண்மை. ஆனால் இவை எதுவும் ரொட்டியின்றி அவதிப்படுபவர்களை மீட்டெடுக்கவில்லை.

அதனால் கடிகாரத்தைத் திருப்பமுடியமா என்னும் ஏக்கத்தை பெருமபாலான ரஷ்யர்களிடம் இருந்து ஒழிக்கமுடியவில்லை. குறிப்பாக, சோவியத்தில் இருந்து சிதறிய நாடுகள் கடந்த இருபது ஆண்டுகாலத்தைச் சோகத்துடன் திரும்பிப் பார்க்கின்றன. பொதுவான அபிப்பிராயம் இதுவே. ‘பணம் உள்ளவர்களுக்கு இன்றைய ரஷ்யா பிடிக்கும். பணம் இல்லாத எங்களைப் போன்றவர்கள் பழைய சோவியத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறோம். அதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்.’

பெட்டிச் செய்தி : சிதறிய சோவியத்

பதினைந்து சோஷலிச உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றியம், சோவியத். 1991க்குப் பிறகு அவை தனித்தனியே சிதறின. ஆர்மீனியா, அசர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான், உக்ரேன் மற்றும் உஸ்பெகிஸ்தான். இவை பிந்தைய சோவியத் நாடுகள் என்றும் புதிய சுதந்தர நாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பெட்டிச் செய்தி : சோவியத் சாதனைகள்

மன்னராட்சியில் இருந்து விடுதலை. இலவச கல்வி. இலவச மருத்துவம். சிறுபான்மை மக்களுக்கும் அவர்கள் மொழி மற்றும் கலாசாரத்துக்கும் பாதுகாப்பு, அங்கீகாரம். மத பீடங்களின் அதிகாரம் ஒடுக்கப்பட்டாலும், வழிபாட்டு உரிமை மதிக்கப்பட்டது. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான ஏழைமை ஒழித்துக்கட்டப்பட்டது. உற்பத்தியும் உற்பத்திச் சக்திகளும் பொதுவுடைமையாக்கப்பட்டது.பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசு அமைப்புகள், சட்டங்கள். ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் தொழில்துறையில் தன்னிறைவு. அறிவியல், தொழில்நுட்பத்தில் துரித வளர்ச்சி. கிராமப்புறங்களுக்கும் நகரங்களுக்குமான இடைவெளி பெருமளவில் குறைக்கப்பட்டது. கூட்டுப்பண்ணைகள், கூட்டு விவசாயம் மூலம் பஞ்சம் ஒழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment